பாரத ரத்னா பெற்றார் சச்சின்



நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.             

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.  

இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.                        
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம்  ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்தது. 

டில்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரனாப் முகர்ஜி,  இவ்விருதை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 


இதிலும் சாதனை:

இன்று ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற 40 வயதான சச்சின், இவ்விருதை குறைந்த வயதில் வென்றவர் என்ற பெருமை பெற்றார். தவிர, முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு

டெஸ்ட் (5 நாள்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 நிலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

இதில் 3 மணி நேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். 

பேட்ஸ் மேன்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

20 ஓவர் போட்டியில் பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாய் பறக்கிறது. இந்தப் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பேட்டிங்கும், பந்துவீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே 20 ஓவர் போட்டி உள்ளது. பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

இரண்டையும் சமமாக பார்க்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழிவு காலம் தான். 

போட்டி மற்றும் பொழுது போக்குக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

சலுகைகளை அனுபவிக்கும் தோனி



இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.        
          
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது.

இதனிடையே, சமீப காலமாக அன்னிய மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திக்கிறது. இதனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.         
         
இதுகுறித்து அவர் கூறியது:              
   
என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.    
              
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.        
          
இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.                  
எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் ரூ.௨௦௦ மட்டுமே பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல.                  
ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.                  
பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.       
           
ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.                  
இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

இந்திய அணி பிந்தியது ஏன்?



இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தொடர்ந்து செய்யும் தவறுகளால், அன்னிய மண்ணில் தோல்வி தொடர் கதையாகிறது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0–4 என, இழந்தது. உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ என்ற அந்தஸ்துடன் அங்கு சென்று, இப்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 8வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுப்பதால், தோல்வி தொடர் கதையாகிறது. தற்போது நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி அடைந்த தோல்விக்கான காரணங்கள்:


தெளிவற்ற கேப்டன்:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த தோல்விக்குப் பின், ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் தோனி, நியூசிலாந்து தொடருக்கு ஏதாவது மாற்றங்கள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்போதும் போல களமிறங்க, 8வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்தியாவை பந்தாடி விட்டது.

இத்தொடரில் ‘டாஸ்’ வென்றது; பேட்டிங்கில் ஆறுதல் தந்தது மட்டும் தான் தோனி செய்த சரியான செயல். மற்ற அனைத்திலும் குழப்பவாதியாக மாறிவிட்டார்.

துவக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில், 4வது போட்டியில் ஷிகர் தவானை நீக்கிவிட்டு, கோஹ்லியை களமிறக்கி தவறு செய்தார். ரோகித்துடன் ரகானேவை அனுப்பியிருக்க வேண்டும்.

ரெய்னா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, முதல் மூன்று போட்டிக்குப் பின் தான் இவரை வெளியேற்றினார். இதற்குள் தொடரை வெல்ல முடியாத நிலை வந்துவிட்டது. அஷ்வினை தொடர்ந்து அணியில் சேர்க்கிறார்.

கிழித்து தைத்த டெய்லர் - 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி



ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஒட்டு மொத்தமாக சொதப்பிய இந்திய அணி, 87 ரன்களில் வீழ்ந்து, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வியை பதிவு செய்தது. 

ராஸ் டெய்லர் மீண்டும் சதம் அடித்து அசத்த, ஒருநாள் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. கடைசி ஒருநாள் போட்டி, வெலிங்டனில் நேற்று நடந்தது.
இத்தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங் தேர்வு செய்தார்.


மீண்டும் தவான்:

ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில், டிம் சவுத்திக்கு பதில் மாட் ஹென்றி அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். பென்னட் இடத்தில் மெக்லீனகன் களமிறங்கினார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (17), கப்டில் (16) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. இதனால் 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி தடுமாறியது. பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி, வழக்கம் போல இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சமாளித்தது. 


டெய்லர் சதம்:

வில்லியம்சன், இத்தொடரில் தொடர்ந்து 5வது அரை சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன், 88 ரன்களில் அவுட்டானார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (23) நிலைக்கவில்லை. தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய டெய்லர், ஷமி வேகத்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் 10வது சதத்தை பூர்த்தி செய்தார். இத்தொடரில் தொடர்ந்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. இவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வந்த வேகத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், போட்டியின் கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்ட, நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. நீஷம் (34), ரான்கி (11) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் ஆரோன் 2, புவனேஷ்வர், ஷமி, கோஹ்லி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


ரோகித் சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, ஆமைவேக துவக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா (4), ஷிகர் தவான் (9) அடுத்தடுத்து நடையை கட்டினர். பின் வந்த ரகானே (2) மறுபடியும் ஏமாற்றினார். இதனால் இந்திய அணி, 15 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த அம்பதி ராயுடுவும், நிதானத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவரில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க, ரசிகர்கள் வெறுப்படைந்தனர். ராயுடு (20) அவுட்டானார். 


கோஹ்லி நம்பிக்கை:

பின் இணைந்த கோஹ்லி, தோனி ஜோடி சற்று நம்பிக்கை தந்தது. நீஷம் பந்தில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 30வது அரைசதம் கடந்தார்.

ரன்வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கோஹ்லி, 82 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 138 ரன்கள் தேவை என்ற நிலையில், அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவும் (5) விரைவில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. மனம் தளராமல் போராடிய தோனி, 47 ரன்களில் அவுட்டானார்.

புவனேஷ்வர் (20), ஆரோன் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 49.4 ஓவரில், 216 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். ஒருநாள் தொடரை 4–0 என வென்ற நியூசிலாந்து அணி, கோப்பை தட்டிச் சென்றது.


மோசமான தோல்வி:

 1975–76, 1980–81ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 33 ஆண்டுக்குப் பின், மீண்டும் மோசமான தோல்வியடைந்துள்ளது.


தோனி ‘8000’

நேற்று தோனி 1 ரன் எடுத்தபோது ஒருநாள் அரங்கில், 8000 ரன்கள் எடுத்த வீரரானார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (214) இம்மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி.

இந்தியாவின் கங்குலி (200), சச்சின் (210), வெஸ்ட் இண்டீசின் லாரா (211) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்கள் மூவருமே பேட்டிங்கில் முதல் மூன்று இடத்தில் களமிறங்கியவர்கள். பின்வரிசையில் களமிறங்கும் (5–7 இடம்) தோனி, அதிவேகமாக 8000 ரன்களை எட்டியுள்ளார்.


கைகொடுக்காத ராசி

* நியூசிலாந்து தொடரின் ஐந்து போட்டியிலும் கேப்டன் தோனி ‘டாஸ்’ வென்றார். இப்படி, இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் அனைத்து போட்டியிலும் தோனி ‘டாஸ்’ வெல்வது இரண்டாவது முறை.

* இதற்கு முன் 2009ல் வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது, ஒருநாள் தொடரின் 4 போட்டியிலும் ‘டாஸ்’ வென்றார். அப்போது தொடரை 2–1 என கைப்பற்றிய இந்திய அணி, தற்போது 0–4 என இழந்தது.


தோல்விக்கு என்ன காரணம்

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எங்களைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொண்டு, திறமை வெளிப்படுத்தாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம்,’’ என்றார்.