சிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்



பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டம் குறித்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு, பிப்., 10ல் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இதில், ‘சென்னை அணியை தடை செய்ய வேண்டும்,’ என, பரிந்துரைக்க இருப்பதாக தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இதுகுறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ., சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாலசுப்ரமணியன், ஜெயராம் சவுதா என, இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை செல்லாது என, மும்பை ஐகோர்ட் தெரிவித்தது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்போது பி.சி.சி.ஐ., முடிவை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை தனியாக அக்., 7ல் அமைத்தது.

அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான இதில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஷ்வர் ராவ் மற்றும் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலே தத்தா இடம் பெற்றனர்.

மும்பை கிரைம் பிராஞ்ச் அதிகாரி ஹிமான்சு ராய், மெய்யப்பனுக்கு எதிரான ஆதாரங்களை, இக்குழுவிடம் நவ., 7ல் சமர்ப்பித்தார். பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அதிகாரி ரவி சவானி, சண்டிலா, பத்திரிகையாளர்கள் சீனிவாசனுக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் வக்கீல் மெக்மூத் அப்டி, முத்கல் குழுவில் நேரில் ஆஜராகினார். இன்று, பி.சி.சி.ஐ., அனுமதியற்ற பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆதித்ய வர்மாவை சந்திக்கிறது.

பிப்., 10ல் அறிக்கையை முத்கல் குழு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்கிறது. இதில் சென்னை அணி உரிமையை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.


மீண்டும் சிக்கல்:

பிப்., 12ல் ஏழாவது பிரிமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம், நடக்கவுள்ளது. அறிக்கை, ஒருவேளை சென்னைக்கு பாதகமாக இருக்கும் என்றால், அது தோனியின் சென்னை அணிக்கு மட்டுமன்றி, பிரிமியர் தொடரின் நன்மதிப்புக்கு களங்கமாக அமையும்.

‘விசாரணை ஒரு கண்துடைப்பாக இருக்காது. பி.சி.சி.ஐ., தலைவர், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனுக்கு சாதகமாக இருக்காது,’ என, ஏற்கனவே நீதிபதி முத்கல் தெரிவித்திருந்தார்.

தெரிவிக்க முடியாது:

நீதிபதி முத்கல் கூறியது:
விசாரணைக்கு எங்களுக்கு நான்கு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்போது பிப்., 10ல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறோம்.

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து, பிப்., 10க்குப் பின் பேசலாம்.

இவ்வாறு நீதிபதி முத்கல் கூறினார்.

இளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா

உலக கிரிக்கெட்டில் தற்போதுள்ள இந்திய அணி சிறந்த இளம் வீரர்களை கொண்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் செப்பல் கூறடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகார்தவான், வீராட் கோலி. புஜாரா, ரோகித் சர்மா போன்ற திறமை வாய்ந்த இளம்வீரர்கள் உள்ளனர். இதேபோல உம்டுகட் போன்ற எதிர்கால வீரரும் இருக்கிறார்கள்.

தவான் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். அவர் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் விலை மதிப்புமிக்க வீரர் ஆவார். தற்போதுள்ள இந்திய அணி தலைசிறந்த இளம் வீரர்களை கொண்ட உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது.

2015–ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அணியும் இப்போதே சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார். 

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 16 ஆண்டு காலம் 75 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்



7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12–ந் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 7 அணிகளும் 24 வீரர்களை நீட்டித்து உள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் தான் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ, (சென்னை) ரோகித்சர்மா, ஹர்பஜன்சிங், அம்பதி ராயுடு, போலார்ட், மலிங்கா, (மும்பை), ரகானே, ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், வாட்சன், பில்க்னெர், (ராஜஸ்தான்), கோலி, கெய்ல், டிவில்லியம்ஸ் (பெங்களூர்), டேவிட் மில்லர், (பஞ்சாப்) காம்பீர், சுனில் நரின் (கொல்கத்தா) ஹிகார் தவான், ஸ்டெயன் (ஐதராபாத்) ஆகிய வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.

அணியில் நீட்டிக்கப்படாத பல முன்னணி வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்நிலை பட்டியலில் டேவிட் வார்னர், பீட்டர்சன், ஆரான் பிஞ்ச், ஜான்சன், ஷார்மார்ஷ், குயின்டன் காக், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் சுமித், டுபெலிசிஸ், மார்னே மார்கல், வெயன் சுமித், போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்திய வீரர்களில் ஷேவாக், யுவராஜ்சிங், முரளி விஜய் ஆகியோரும் முதல் நிலையில் இருப்பார்கள்.

36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்து கொள்ளாததால் ஏலத்தில் ரூ.60 கோடி செலவிடலாம். இதனால் அந்த அணி எந்த விலை கொடுத்தாலும் முன்னணி வீரர்களை வாங்க போராடும்.

இதே போல, 20 ஓவர் போட்டிக்கான எஸ்பெ சலிஸ்ட் வீரர்களான ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), குயிண்டன் காக் (தென் ஆப்பிரிக்கா), ஆகியோருக்கும் அதிக மவுசு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஜோகர் கார்டை பயன்படுத்தும்.

நியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா?



அன்னிய மண்ணில் வெற்றி வாகை சூடும் இலக்குடன் தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், நேற்று நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ல் நேப்பியரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு நாள் (பிப்., 2,3) பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இளம் இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு கிளம்பியது.

டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர்களான புஜாரா, ஜாகிர் கான், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் ஒருவாரம் கழித்து தான் நியூசிலாந்து செல்ல உள்ளனர்.

பொதுவாக இந்திய அணி உள்ளூரில் அசத்தும்; வெளிநாடுகளில் சொதப்பும். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கூட படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலை மாற வேண்டும். 

நியூசிலாந்து மண்ணில் விராத் கோஹ்லி, ரகானே, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்கள் எழுச்சி பெறும்பட்சத்தில் இந்திய அணி முத்திரை பதிக்கலாம்.

ஒருநாள் அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரகானே, அம்பதி ராயுடு, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, பின்னி, ஆரோன்.

டெஸ்ட் அணியில், ரெய்னா, அமித் மிஸ்ரா, பின்னி, ஆரோன் ஆகியோருக்கு பதில் புஜாரா, முரளி விஜய், ஜாகிர் கான், உமேஷ் யாதவ், சகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு, விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 

கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த கபில், 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

கடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை ‘சுழல்’ நாயகன் அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார். 18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ரஞ்சி டிராபியில்(2012-–13) சிறந்த ‘ஆல்-ரவுண்டருக்கான’ விருதை அபிஷேக் நாயர் பெற்றார்.  இவர் 11 போட்டிகளில் 966 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ரூ.2.5 லட்சம் பரிசை தட்டிச் சென்றார்.

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார். இவர் 2 டெஸ்டில் 288 ரன்கள் எடுத்தார். இவர் ரூ. 5 லட்சம் பரிசு பெற்றார்.

சிறந்த வீராங்கனைக்கான(சீனியர்) விருதை தமிழகத்தின் திருஷ்காமனி(ரூ. 50 ஆயிரம் பரிசு) பெற்றார்.

இந்திய கிரிக்கெட் சேவைக்காக ஜாம்பவான்கள் பாபு நட்கர்னி, பரூக் இன்ஜினியர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 லட்சம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. நட்கர்னி, பரூக் பங்கேற்கவில்லை. சோல்கர் சார்பில் அவரது மனைவி விருதை பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

பின் கபில் தேவ் கூறுகையில்,“நாங்கள் விளையாடிய காலத்தில், விருது பற்றி எல்லாம் நினைக்கவில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தால் விளையாடினோம். நாட்டில் கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலம் அடைந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்,”என்றார்.