தடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்

சமீபத்திய தோல்விகளுக்கு "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது.

இதற்கு அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ரன்கள். தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ரன்கள் (23.44) எடுத்தார்.

ரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ரன்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறுகிறார். 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

கடந்த சில தொடர்களாக "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது. சமீபத்திய போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி வந்த "டாப் ஆர்டர்' வீரர்கள், தென் ஆப்ரிக்க தொடரில் விரைவில் அவுட்டாகினர். 

"மிடில் ஆர்டர்' பலவீனமும் நன்கு வெளிப்பட்டது. இந்த வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. 

டர்பன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில், சரியான முறையில் பந்துகளை தேர்வு செய்து அடிக்காமல், கோட்டை விட்டது தான் ஏமாற்றத்துக்கு காரணம். 


ஷமி அபாரம்:

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜோகனஸ்பர்க் போட்டியை விட, டர்பனில் முகமது ஷமி நன்கு பந்துவீசினார். பந்தை "சுவிங்' செய்வது, சரியான அளவில் வீசுவது என, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப செயல்பட்டார்.


எல்லாம் சகஜம்:

வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், "ஷார்ட் பிட்ச்' பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை. 

மொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. அடுத்த முறை பேட்டிங்கில் ஏமாற்றம் கிடைத்தது. அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி கூறினார்.

இந்திய அணிக்கு மரண அடி

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. டர்பன் ஒருநாள் போட்டியிலும் "பேட்டிங், "பவுலிங்', "பீல்டிங்' என எதுவுமே எடுபடாமல் போக, 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
இதன் மூலம் தொடரை 0-2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் குயின்டன் டி காக், ஆம்லா சதம் அடித்து அசத்தினர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று டர்பனில் நடந்தது. 


துவக்கம் தாமதம்: 

மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக, போட்டி துவங்குவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின் 49 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் யுவராஜ் சிங், புவனேஷ்வர் குமார், மோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இடம் பெற்றனர். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். 


"சூப்பர்' துவக்கம்: 

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் அளித்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த குயிண்டன் பவுண்டரிகளாக விளாசினார். ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், இத்தொடரில் வரிசையாக 2வது சதம் அடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 


டிவிலியர்ஸ் ஏமாற்றம்: 

பின் வந்த கேப்டன் டிவியர்ஸ் (3) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மில்லர் "டக்' அவுட்டாக, ரன்வேகம் குறைந்தது. பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஆம்லா, 12வது ஒருநாள் சதத்தை எட்டினார். இவர், 100 ரன்களுக்கு முகமது ஷமி "வேகத்தில்' வெளியேறினார். 

அனுபவ காலிஸ் (10) நிலைக்கவில்லை. உமேஷ் யாதவின் கடைசி ஓவரில் மெக்லாரன் ஒருசிக்சர் அடித்தார். எதிர்முனையில் பிலாண்டர் தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் விளாச, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன .தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷசி 3 விக்கெட் சாய்த்தார். 


விக்கெட் மடமட:

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற "ஷாட்' அடித்தனர். ஸ்டைன் "வேகத்தில்' தவான் "டக்' அவுட்டானார். விராத் கோஹ்லியும், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

ரோகித் சர்மா (19), ஆம்லாவின் "சூப்பர் கேட்ச்சில்' அவுட்டானார். ரகானே (8), அம்பயரின் தவறான முடிவால் வெளியேறினார். இப்படி தென் ஆப்ரிக்க வேகத்தில் "டாப்-ஆர்டர்' சரிய 8.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து தத்தளித்தது. கேப்டன் தோனியும் (19) விரைவில் நடையை கட்ட, கதை முடிந்தது. 

ரெய்னா (36) சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ரவிந்திர ஜடேஜா (26), அஷ்வின் (15) ஏமாற்றினர். "டெயிலெண்டர்களும்' வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 35.1 ஓவரில் 146 ரன்களுக்கு "ஆல் அவுட்டாகி' தோல்வி அடைந்தது. 
தென் ஆப்ரிக்க அணிக்கு "வேகத்தில்' மிரட்டிய டிசாட்சொபே 4, ஸ்டைன் 3, மார்னே மார்கல் 2 விக்கெட் கைப்பற்றினர். 


ஆம்லா "4000'

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, 59 ரன்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் தனது 4000வது ரன்னை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் (81 இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (88) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் கோஹ்லி (93) உள்ளார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில், கேப்டன் டிவிலியர்சை (105) பின்னுக்குதள்ளி ஆம்லா (81) முதலிடம் பிடித்தார். 

சகாப்தம் படைக்கும் இந்தியா

பிபா உலக கோப்பை (17 வயதுக்குட்பட்டோர்) தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்ததன் மூலம், புதிய சகாப்தம் உருவாகும்,'' என, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி தெரிவித்தார்.
வரும் 2017ல் உலக கோப்பை கால்பந்து தொடரை (17 வயதுக்குட்பட்டோர்) நடத்தும் அரிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதை தங்களது மண்ணில் அரங்கேற்ற, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளும் போட்டியிட்டன. 

முடிவில், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. "பிபா'வின் மிகப் பெரும் ஒரு தொடரை நடத்த இருப்பது இதுவே முதல் முறை. இது பல இளம் வீரர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை பாய்ச்சியுள்ளது. 

இது குறித்து இந்திய அணிக்கு அதிக கோல் (43 ) அடித்த செத்ரி கூறியது: இந்தியாவுக்கு உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தும் பெருமை கிடைத்தது மிகப்பெரியது. 

பல நாடுகள் போட்டியிட்டதன் முடிவில், நமக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி எனத் தெரியவில்லை. இதன் மூலம், புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

நமது அணி முன்னாள் கேப்டன் பாய்ச்சங் (42 கோல்) பூட்டியாவின் சாதனையை முறியடித்துள்ளேன். 

இதை நான் மனதில் வைத்துக் கொள்வது கிடையாது. அணியின் வெற்றிக்காக மட்டும்தான் செயல்படுவேன். 

நான் பூட்டியாவின் தீவிர ரசிகன். அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள "பிபா' உலக கோப்பை தொடரில் ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் பலமானவை. இவ்வாறு செத்ரி கூறினார்.

தோல்விக்கு காரணம் பவுலர்கள் - தோனி குற்றச்சாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு பவுலிங் சரியில்லாதது தான் காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார். 
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. 

ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணி, 41 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

ஜோகனஸ்பர்க்கில் 300 ரன்னுக்கும் மேல் எடுக்கக் கூடிய அளவுக்கு ஆடுகளம் இல்லை. இன்னும் சற்று நன்கு பவுலிங் செய்திருக்கலாம். இங்குள்ள சூழ்நிலை குறித்த அனுபவ அறிவு முக்கியம். 

இந்த ஆடுகளத்தில் எந்த வேகத்தில், எந்த அளவில் பவுலிங் செய்ய வேண்டும் என்பது, தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு அத்துபடி. இந்நிலையில், 300 அல்லது இதற்கு மேல் ரன்கள் விட்டுத்தருவதால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடுகிறது. 

இந்திய அணி பவுலர்கள் சொதப்பலால், சமீபத்தில் முடிந்த 9 போட்டிகளில், 300 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். 

தவிர, கூடுதல் பீல்டரை உள்வட்டத்துக்குள் நிற்க வைப்பது என்ற புதிய விதி மற்றும் சரியான முறையில் "சுவிங்' செய்ய முடியாத காரணங்களால், இப்போதெல்லாம் கடைசி கட்ட ஓவர்களில், பவுலர்கள் அதிக ரன்களை தருகின்றனர். இதற்கு உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் கூட தப்பமுடியவில்லை.

கடைசி 10 ஓவர்களில் ரன்கள் அதிகம் போகிறது என்ற நிலையில், இதுபோன்ற மைதானங்களில், புதிய பந்தில் துவக்க பவுலர்கள் நன்கு செயல்பட வேண்டும். முதல் 10 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினால், போட்டியில் நடுவில் கூடுதல் நெருக்கடி தரலாம். 

இதனால், கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்க்க, கைவசம் விக்கெட் இல்லாமல் செய்ய முடியும். 

இப்படி திட்டமிட்டுவது எல்லாம் சரிதான். கடைசியில் களத்தில் எதுவும் எடுபடாமல் போகிறது. அனைத்து பவுலர்களும் 50 ரன்னுக்கும் மேல் கொடுத்தனர். முகமது ஷமி மட்டும் ஆறுதல் தந்தார். 

இவ்வாறு தோனி கூறினார். 

சூதாட்ட வலையில் நியூசி., வீரர்கள்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று முன்னாள் நியூசிலாந்து வீரர்கள் சிக்கினர். இவர்களிடம் ஐ.சி.சி., விசாரணை நடத்தி வருகிறது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் "ஆல்-ரவுண்டர்' கிறிஸ் கெய்ர்ன்ஸ். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் பிரிமியர் தொடருக்கான ஏலத்தில் சேர்க்கவில்லை என, அப்போதைய தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடுத்த கெய்ர்ன்ஸ், தான் குற்றமற்றவர் என நிரூபித்தார்.

இந்நிலையில் "நியூசிலாந்து ஹெரால்டு' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,""கெய்ர்ன்ஸ், டேரல் டபி, லூ வின்சென்ட் ஆகிய மூன்று முன்னாள் நியூசிலாந்து வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,''என, தெரிவிக்கப்பட்டது.

இதனை உறுதி செய்த லூ வின்சென்ட் கூறுகையில்,""ஐ.சி.சி., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இது தொடர்பாக வெளிப்படையாக கருத்து எதுவும் கூற முடியாது,''என்றார்.

சர்ச்சைக்குரிய கெய்ர்ன்ஸ் கூறுகையில்,""சூதாட்டம் தொடர்பான வழக்கில் எனக்கு சாதகமாக இங்கிலாந்து கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது "மீடியாவில்' வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என்னை ஐ.சி.சி., மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகிகள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை,''என்றார்.


ஐ.சி.சி., ஒப்புதல்:

தற்போதைய சூதாட்டம் எங்கு நடந்தது, எந்த போட்டியில் நடந்தது என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. விசாரணை நடப்பதை ஒப்புக் கொண்ட ஐ.சி.சி., சம்பந்தப்பட்ட வீரர்களின் பெயரை வெளியிட மறுத்தது. 

இது குறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,""கடந்த சில மாதங்களாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் நியூசிலாந்தில் முகாமிட்டு விசாரணை நடத்துவது உண்மை தான். விசாரணை தொடர்ந்து நடப்பதாலும், யார் மீதும் குற்றம் பதிவு செய்யப்படாததாலும் பெயர்களை வெளியிட முடியாது,''என, தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,""தற்போது விளையாடும் வீரர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை. சந்தேகத்துக்கு உரிய போட்டிகள் எதுவும் நியூசிலாந்து மண்ணில் நடக்கவில்லை,''என்றார்.


பிரதமர் கவலை:

வரும் 2015ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்தச்சூழலில் சூதாட்ட புயல் காரணமாக, நியூசிலாந்து அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,""நியூசிலாந்து மிகவும் நேர்மையான நாடு என்ற கருத்து இருக்கிறது. தற்போதைய சூதாட்ட புகார் மிகுந்த கவலை அளிக்கிறது,''என்றார்.