வீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்

டில்லி அணியில் தனக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யாத கோபத்தில் காம்பிர் உள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி வீரர் காம்பிர். "பார்ம்' இல்லாமல் தவித்ததால், ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். டில்லி அணியின் கேப்டனாக உள்ளார். 

இந்நிலையில், நாளை துவங்கும் ஐந்தாவது லீக் போட்டியில் ஒடிசாவை சந்திக்கிறது. இதற்கான அணி தேர்வுக்கூட்டத்தில் காம்பிர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

இது குறித்து டில்லி கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கேப்டன் காம்பிர் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை கேட்டார். 

"பவுலர்' மனோஜ் சவுகான் இடம்பெற வேண்டும் என விரும்பினார். தேர்வாளர்களோ, மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தந்ததாக தெரிகிறது. இதனால், காம்பிர் கோபத்தில் உள்ளார்,'' என்றார்.

டில்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சவுகான் கூறுகையில்,"" 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளோம். 

வருண் மற்றும் மனான் சர்மா என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பிருடன் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது,'' என்றார். 

டோனிக்கு ஐ.சி.சி. விருது - ரசிகர்களால் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. விருது கிடைத்துள்ளது. ரசிகர்களால் தேர்வு செய்த விருதை அவர் பெறுகிறார். 

இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் டோனி ஆவார். இதற்கு முன்பு டெண்டுல்கர் 2011–ம் ஆண்டு இந்த விருதை பெற்று இருந்தார். 

2012–ம் ஆண்டு இலங்கை வீரர் சங்ககராவுக்கு இந்த விருது கிடைத்தது.

கிளார்க் (ஆஸ்திரேலியா), கூக் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), வீராட்கோலி, டோனி ஆகிய 5 பேர் இந்த விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இதில் டோனியே ரசிகர்களால் சிறந்த வீரராக தேர்வு பெற்றுள்ளார்.

இதேபோல ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி. அணியில் டோனி தொடர்ந்து 6–வது முறையாக இடம் பெற்றுள்ளார். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அவர் ஐ.சி.சி. அணியில் தேர்வாகி உள்ளார்.

அதிக ரன்களுக்கான சாதனையை நோக்கி இந்தியா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியின் மூலம், ஒட்டுமொத்தமாக அதிக ரன் எடுத்த அணி என்ற புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது இந்தியா.

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், அதிக போட்டிகளில் பங்கேற்ற அணிகள் வரிசையில், 841 போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (825 போட்டி) உள்ளது. இவ்விரு அணிகள் ஒட்டுமொத்தமாக தலா ஒரு லட்சத்து 82 ஆயிரத்து, 881 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஜோகனஸ்பர்க்கில் டிச., 5ல் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, தனது முதல் ரன்னை எடுக்கும் போது, ஒட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில், ஆஸ்திரேலியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்து, புதிய சாதனை படைக்க உள்ளது. 

இப்பட்டியலில், மூன்றாவது இடத்தில் 807 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி (ஒரு லட்சத்து 71 ஆயிரத்து, 982 ரன்கள்) உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இலங்கை (701 போட்டி, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து, 365 ரன்கள்), வெஸ்ட் இண்டீஸ் (705 போட்டி, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து, 260 ரன்கள்) உள்ளன.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதால், இப்பட்டியலில் இன்னும் சிறிது காலம் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கும். ஏனெனில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின் தான், ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.


தோனியின் சாதனை: 

தென் ஆப்ரிக்க பயணத்தின் போது இந்திய கேப்டன் தோனி இரண்டு சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 151 ஒருநாள் போட்டியில் 5213 ரன்கள் எடுத்துள்ள தோனி, இன்னும் 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முகமது அசாரை பின்தள்ளி (174 போட்டி, 5239 ரன்கள்) முதலிடம் பிடிக்கலாம். 

தோனி தலைமையிலான இந்திய அணி, இதுவரை 88 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், ஒருநாள் போட்டியில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் முகமது அசாரை (90 வெற்றி) பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம்.

சவாலான தென் ஆப்ரிக்க தொடர் - தோனி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.

மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான இந்திய அணி நேற்று தென் ஆப்ரிக்கா சென்றது. 

முதல் ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 5ல் நடக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் டர்பன் (டிச., 8), செஞ்சுரியனில் (டிச., 11) நடக்கின்றன. இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஜோகனஸ்பர்க் (டிச., 18-22), டர்பன் (டிச., 26-30) நகரங்களில் நடக்கின்றன.

நேற்று, மும்பையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தோனி கூறியது: "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இல்லாமல் செல்வது புதிய துவக்கம். அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள், அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவமற்றவர்கள். 

ஆனால் ஒருநாள் போட்டிகளில் நிறைய பங்கேற்றுள்ளனர். எனவே இவர்களுக்கு தென் ஆப்ரிக்க தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இத்தொடர் மூலம், இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். 

பொதுவாக சொந்த மண்ணில் நடக்கும் போட்டியை விட, வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகள் சவாலானதாக இருக்கும். இம்முறை டெஸ்ட் தொடருக்கு முன், ஒருநாள் தொடர் அமைந்திருப்பது சிறப்பு. 

இதன்மூலம் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை, தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வீரர்கள் தயார் படுத்திக் கொள்ளலாம். எனவே, ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டியில், மூன்றாவது துவக்க வீரராக காம்பிரை தான் கருதுகிறோம். ஏனெனில் துவக்க வீரர்களாக களமிறங்கும் முரளி விஜய், ஷிகர் தவான் சிறப்பாக விளையாடுவதால், காம்பிரை 3வது துவக்க வீரராகத்தான் தேர்வு செய்ய முடியும். தற்போது அணியில் இடம் பெறாத போதிலு<ம், இவர் தான் மாற்று துவக்க வீரர்.

சச்சினின் ஓய்வுக்கு பின், பேட்டிங் வரிசையில் 4வது வீரராக யாரை களமிறக்குவது என இன்னும் முடிவு செய்யவில்லை. எந்த ஒரு வீரரும், யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாது. வாய்ப்பு கிடைத்தால் 4வது இடத்தை நீக்கிவிட்டு, 1, 2, 3, 5, 6,...12 என களமிறங்கலாம்.

தென் ஆப்ரிக்க பயணத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் பவுன்சர் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும். சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை கடைசி 10 ஓவர்கள் முக்கிய பங்குவகிக்கும். கடைசி 10 ஓவரில் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் அதிகளவு ரன் வழங்குவதை கட்டுப்படுத்தலாம். டெஸ்ட் போட்டியில் தேவைப்படும் பட்சத்தில் 5வது பவுலரை பயன்படுத்துவோம். கடைசி இரண்டு டெஸ்டில் 4 பவுலர்கள் மட்டுமே பயன்படுத்தினோம். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், நிச்சயம் சாதிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

தற்போதுள்ள நிலையில் இரு அணிகளும் ரேங்கிங்கில் "டாப்' வரிசையில் உள்ளன. ஒருநாள் போட்டியில் இந்தியாவும், டெஸ்டில் தென் ஆப்ரிக்காவும் முதலிடத்தில் உள்ளன. எனவே இத்தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். 

தென் ஆப்ரிக்க ஆடுகளத்திற்கேற்ப, இந்திய வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்கலாம். அதேவேளையில் தென் ஆப்ரிக்க அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் திறமையான "ஆல்-ரவுண்டர்'கள் நிறைய உள்ளனர். 

பொதுவாக ஒவ்வொரு தொடரிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நெருக்கடிகளை கடந்து முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம்.

இவ்வாறு தோனி கூறினார்.

தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது தோனியின் படை

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணி, இன்று தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது. 
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் டிச., 5, 8, 11 ல் ஜோகனஸ்பர்க், டர்பன் மற்றும் செஞ்சுரியனில் நடக்கவுள்ளது. 

இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட தொடர்ச்சியாக 6 ஒருநாள் கோப்பை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

தோனி தலைமையிலான இந்த அணி, இன்று இரவு தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது. ஒருநாள் தொடர் முடிந்தபின், இரண்டு நாள் பயிற்சி (டிச., 14-15) போட்டியில் விளையாடுகிறது. 

இதன் பின் தான் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது. முதல் டெஸ்ட் டிச., 18-22ல் ஜோகனஸ்பர்க்கில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க 17 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டது. 

ஒருநாள் அணியில் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், முரளி விஜய், புஜாரா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா, சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா உள்ளனர். 

தென் ஆப்ரிக்க சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றிக்கொள்ளும் வகையில், இந்த வீரர்களை முன்னதாக அனுப்ப இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முயற்சித்து வருகிறது.

 மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) செயலர் நிடின் தலால் கூறுகையில்,"" மும்பை அணி கேப்டன் ஜாகிர் கான், இன்னும் ஓரிரு நாட்களில் தென் ஆப்ரிக்கா கிளம்புவார் எனத் தெரிகிறது. இதனால், அடுத்து வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டார்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" ஜாகிர் கானை மட்டுமல்ல, ஒருநாள் தொடரில் இடம் பெறாத மற்ற டெஸ்ட் வீரர்களையும், விரைவில் தென் ஆப்ரிக்கா அனுப்ப முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.