நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் - ரெய்னா ஒப்புதல்


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். இந்த இருவரது காதல் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இருவரும் தங்களுக்கு காதல் எதுவும் இல்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் காதல் இருப்பதை ரெய்னா ஒப்புக் கொண்டார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புது நடிகை அனுஷ்கா சர்மாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு பிடித்தமானவர். இங்கிலாந்து பயணத்தின்போது நான், டிராவிட், டோனி ஆகியோர் பல படங்களை பார்த்து இருக்கிறோம்.

ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன் நடிப்பை பார்த்து நான் மெய்சிலிர்த்தேன் தற்போதைய தலை முறையில் ரன்பீர் கபூரின் மிகவும் பிரமாதமாக நடிக்கிறார்.

எனது திருமணம் குறித்து எனது குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

26 வயதான அனுஷ்கா சர்மா மாடல் அழகியாக திகழ்ந்தார். 2008-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். இதுவரை 7 இந்தி படங்களில் நடித்துள்ளார். 

இந்திய அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டார்


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது. 

மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் ஏமாற்றி வந்த சேவக், 34, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் சதம் அடித்தார். பின் சொந்த மண்ணில் விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 

ஆஸ்திரேலியா சென்ற போது பங்கேற்ற நான்கு டெஸ்டின், 8 இன்னிங்சில் 198 ரன்கள் தான் எடுத்தார். இரு ஆண்டுகளில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின், நான்கு இன்னிங்சிலும் சேர்த்து 27 ரன்கள் தான் எடுத்தார். 

இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள போட்டிகளிலும் சேவக் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக சேவக் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவரது சக துவக்க வீரர் காம்பிர், மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சேவக்கிற்குப் பதில் புதியதாக யாரும் சேர்க்கப்படவில்லை. அதாவது 15 பேர் அணி, 14 பேர் அணியாக குறைக்கப்பட்டது. இதனால், முரளி விஜயுடன் சேர்ந்து, மற்றொரு டில்லி வீரர் ஷிகர் தவான் துவக்கம் தரலாம். 

மற்றபடி அணியில் மாற்றம் இல்லை. இரட்டைசதம் அடித்த புஜாரா, விராத் கோஹ்லி அணியில் தொடர்வர். பவுலிங்கில் அஷ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா கூட்டணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அதிக விக்கெட் வீழ்த்தவில்லை எனினும், புவனேஷ்வருடன் சேர்ந்து நீடிக்கிறார்.

அணி விவரம்: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், சச்சின், புஜாரா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ரகானே, பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் டிண்டா.


ஓய்வா... அப்படீன்னா...

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சேவக் கூறுகையில்,"" கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது. எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடின முயற்சி செய்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.


9 ஆண்டுக்குப் பின்...

2004ல் முதல் காம்பிர்-சேவக் இணைந்து, அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இணைந்து விளையாடிய 87 இன்னிங்சில், 4412 ரன்கள் (சராசரி 52.52) எடுத்துள்ளனர். சிறந்த துவக்க ஜோடி வரிசையில் 5வது இடம் பெற்றது.

இருவரும் இப்போது நீக்கப்பட, 9 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இவர்கள் இல்லாமல் முற்றிலும், புதிய ஜோடியுடன் இந்திய அணி மொகாலியில் களமிறங்குகிறது.


மீண்டு வருவார்

சேவக் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹைடன் கூறுகையில்,"" சக வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். சில நேரங்களில் கடின முடிவு எடுக்க வேண்டியதாகிறது. சேவக் இப்போது "பார்ம்' இல்லாமல் இருப்பது தற்காலிகமானது தான். இவர் மீண்டு வருவார். என்னைப் பொறுத்தவரை, சேவக் அணிக்கு திரும்பவில்லை என்றால் தான் ஆச்சரியம்,'' என்றார்.


கவாஸ்கர் ஆதரவு

சேவக் நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ""ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மொகாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சேவக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 

டெஸ்ட் அணியில் இருந்து சேவக்கை நீக்கியதால், இவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றதாக அர்த்தமில்லை. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என நம்புகிறேன். வரும் காலங்களில் இவரை "மிடில்-ஆர்டரில்' களமிறக்கலாம். இவரது அனுபவம், "மிடில்-ஆர்டரில்' நிச்சயம் கைகொடுக்கும்,'' என்றார்.

2019 வரை தோனி தான் கேப்டன்


இந்திய அணியின் கேப்டனாக வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை தோனி நீடிக்க வேண்டும்,'' என, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து தோனியின், 31, மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக சாதனை படைத்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின் கிடைத்த ஒரு மாத இடைவெளியில், தன்னைத் தானே ஆய்வு செய்தார் தோனி. கேப்டனாக இவரது அணுகுமுறை மாறியது. அணியை மிகுந்த உறுதியுடன் வழிநடத்த துவங்கினார். திறமைக்கு ஏற்ப செயல்படாமல், கவனக்குறைவாக விளையாடும் வீரரிடம், தனது அதிருப்தியை உணர வைத்தார். 

பேட்டிங்கில் "சூப்பர் பார்மில்' உள்ளார். நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது தலைமைப்பண்பிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிக்க வேண்டும். 

அதுவரை கேப்டனை மாற்றுவது தொடர்பாக நாம் விவாதிக்க கூடாது. ஆனாலும், வயது காரணமாக 2019 வரை தோனி விளையாடுவாரா என தெரியவில்லை. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். 

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். பட்டோடி, வடேகர், கங்குலி அல்லது டிராவிட் தான் சிறந்த கேப்டன் என வாதம் நடப்பது உண்டு. ஆனால், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தோனி தான் வெற்றிக் கேப்டன் என்று உறுதியாக கூறலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

புஜாரா, முரளி விஜய்யிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும்


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந் நாட்டு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனை யாளருமான டீன்ஜோனஸ் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய சுற்றுப் பயணத்துக்காக ஆஸ்திரேலிய அணி தன்னை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வில்லை. 4 டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே ஆடியது. 

இது போதாது இந்திய தொடருக்கு முன்பு 2 அல்லது 3 பயிற்சி ஆட்டம் என்பது போதுமானதாக இல்லை. புஜாரா, முரளிவிஜய் ஆகியோரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஏராளமாக பாடம் கற்க வேண்டும். 

இந்திய மைதானங்களில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அறிந்து இருப்பது அவசியமாகிறது. இதேபோல ஆஸ்திரேலிய பவுலர்களும் சிறப்பாக பந்துவீசுவதில்லை. இந்தியாவில் ஆஸ்திரேலியா கடுமையாக போராட வேண்டும். 

இவ்வாறு டீன்ஜோன்ஸ் கூறியுள்ளார்.

ஐதராபாத் டெஸ்ட்: புஜாரா, விஜய் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. கேப்டன் கிளார்க் 91 ரன்னும், மேத்யூ வாடே 62 ரன்னும் எடுத்தனர். 

புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 4 ரன்னிலும், முரளிவிஜய் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் ஷேவாக் ஆட்டம் இழந்தார். அவர் 6 ரன்னில் பீட்டர் சிடிலின் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 17 ஆக இருந்தது. ஷேவாக் இந்த தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சில் 2 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். 

2-வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரது  ஆட்டமும் மிகவும் மந்தமாக இருந்தது. அடித்து ஆடாமல் மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 28.5-வது ஓவரில் தான் இந்தியா 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து இருந்தது. 

முரளிவிஜய் 109 பந்தில் 29 ரன்களுடனும், புஜாரா 55 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து பொறுமையுடன் ஆடினார்கள். முரளிவிஜய் அரை சதம் அடித்தார். இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதமாகும். 

அதைத்தொடர்ந்து புஜாராவும் 50 ரன்னை தொட்டார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்னின் எண்ணிக்கையே உயர்த்தியது. புஜாரா நேர்த்தியாக ஆடி சதம் அடித்தார். எதிர் முனையில் விளையாடிய விஜய்யும் சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஜோடியை பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. 

புஜாரா நேர்த்தியாக விளையாடி 150 ரன்னை தொட்டார். இறுதியில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் சேர்த்தது. புஜாரா 162 ரன்களுடனும், விஜய் 129 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 74 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.