2019 வரை தோனி தான் கேப்டன்


இந்திய அணியின் கேப்டனாக வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை தோனி நீடிக்க வேண்டும்,'' என, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து தோனியின், 31, மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக சாதனை படைத்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின் கிடைத்த ஒரு மாத இடைவெளியில், தன்னைத் தானே ஆய்வு செய்தார் தோனி. கேப்டனாக இவரது அணுகுமுறை மாறியது. அணியை மிகுந்த உறுதியுடன் வழிநடத்த துவங்கினார். திறமைக்கு ஏற்ப செயல்படாமல், கவனக்குறைவாக விளையாடும் வீரரிடம், தனது அதிருப்தியை உணர வைத்தார். 

பேட்டிங்கில் "சூப்பர் பார்மில்' உள்ளார். நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது தலைமைப்பண்பிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிக்க வேண்டும். 

அதுவரை கேப்டனை மாற்றுவது தொடர்பாக நாம் விவாதிக்க கூடாது. ஆனாலும், வயது காரணமாக 2019 வரை தோனி விளையாடுவாரா என தெரியவில்லை. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். 

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். பட்டோடி, வடேகர், கங்குலி அல்லது டிராவிட் தான் சிறந்த கேப்டன் என வாதம் நடப்பது உண்டு. ஆனால், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தோனி தான் வெற்றிக் கேப்டன் என்று உறுதியாக கூறலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

புஜாரா, முரளி விஜய்யிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும்


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந் நாட்டு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனை யாளருமான டீன்ஜோனஸ் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய சுற்றுப் பயணத்துக்காக ஆஸ்திரேலிய அணி தன்னை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வில்லை. 4 டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே ஆடியது. 

இது போதாது இந்திய தொடருக்கு முன்பு 2 அல்லது 3 பயிற்சி ஆட்டம் என்பது போதுமானதாக இல்லை. புஜாரா, முரளிவிஜய் ஆகியோரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஏராளமாக பாடம் கற்க வேண்டும். 

இந்திய மைதானங்களில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அறிந்து இருப்பது அவசியமாகிறது. இதேபோல ஆஸ்திரேலிய பவுலர்களும் சிறப்பாக பந்துவீசுவதில்லை. இந்தியாவில் ஆஸ்திரேலியா கடுமையாக போராட வேண்டும். 

இவ்வாறு டீன்ஜோன்ஸ் கூறியுள்ளார்.

ஐதராபாத் டெஸ்ட்: புஜாரா, விஜய் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. கேப்டன் கிளார்க் 91 ரன்னும், மேத்யூ வாடே 62 ரன்னும் எடுத்தனர். 

புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 4 ரன்னிலும், முரளிவிஜய் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் ஷேவாக் ஆட்டம் இழந்தார். அவர் 6 ரன்னில் பீட்டர் சிடிலின் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 17 ஆக இருந்தது. ஷேவாக் இந்த தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சில் 2 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். 

2-வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரது  ஆட்டமும் மிகவும் மந்தமாக இருந்தது. அடித்து ஆடாமல் மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 28.5-வது ஓவரில் தான் இந்தியா 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து இருந்தது. 

முரளிவிஜய் 109 பந்தில் 29 ரன்களுடனும், புஜாரா 55 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து பொறுமையுடன் ஆடினார்கள். முரளிவிஜய் அரை சதம் அடித்தார். இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதமாகும். 

அதைத்தொடர்ந்து புஜாராவும் 50 ரன்னை தொட்டார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்னின் எண்ணிக்கையே உயர்த்தியது. புஜாரா நேர்த்தியாக ஆடி சதம் அடித்தார். எதிர் முனையில் விளையாடிய விஜய்யும் சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஜோடியை பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. 

புஜாரா நேர்த்தியாக விளையாடி 150 ரன்னை தொட்டார். இறுதியில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் சேர்த்தது. புஜாரா 162 ரன்களுடனும், விஜய் 129 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 74 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.

தெண்டுல்கர்-காம்பளி ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டது


தெண்டுல்கரும், காம்பளியும் இணைந்து பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் குவித்தனர். 1988-ம் ஆண்டு தெண்டுல்கர் 14 வயதாக இருந்த போது காம்பளியுடன் இணைந்து இந்த சாதனையை படைத்தார். 

இந்த நிலையில் இந்த சாதனை ரன் எழுதி வைக்கப்பட்ட அதிகாரபூர்வ ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக பழமையாக இருக்கும் அதை மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் எரித்துள்ளது. 

பழைய தஸ்தா வேஜுகளை எரிக்கும் போது அந்த ஸ்கோர்ஷீட்டும் அதில் இருந்துள்ளது.

தோனி தான் சிறந்த கேப்டன்


இந்திய அணியை வழிநடத்த, மிகச் சரியான கேப்டன் தோனி தான்,'' என, முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், 38. கடந்த 1996ல் ஆமதாபாத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், கடைசியாக கடந்த ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். இதுவரை 134 டெஸ்ட் (8781 ரன்கள், 17 சதம், 56 அரைசதம்), 86 ஒருநாள் (2338 ரன்கள், 6 சதம், 10 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த லட்சுமண், திடீரென ஓய்வை அறிவித்தார். இதற்கு கேப்டன் தோனி தான் காரணம் என்று செய்திகள் வெளியாகின. தவிர, தனது வீட்டில் சக வீரர்களுக்கு லட்சுமண் கொடுத்த விருந்தில் தோனியை அழைக்காததும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லட்சுமண் கூறியது: 

தோனி சிறந்த வீரர். இந்திய அணியை வழிநடத்தும் தகுதியும், திறமையும் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, எனது வீட்டில் நடந்த "பார்ட்டி' குறித்து நாடு முழுவதும் பலதரப்பில் பேசப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும். அதன்பின் எனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஆஸ்திரேலிய பயணம் மிக மோசமாக அமைந்தது. அதன்பின், ஆறு மாதங்களாக ஓய்வு குறித்து ஆலோசித்து வந்தேன். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் என்னால் விளையாடி இருக்க முடியும். ஆனால் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில், திடீரென ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்க தொடருக்கு முன், இளம் வீரர்கள் குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டியிலாவது பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். ஓய்வை அறிவித்த மறுநாள், எனது மனைவி, "மிகச் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்', என்றார்.

இளம் வீரர்கள், டெஸ்ட் போட்டியில் விளையாட முன்வர வேண்டும். பணம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ஆனால் பணத்தை காட்டிலும் நாட்டிற்காக விளையாடுவது மேலானது. 

"டுவென்டி-20' போட்டியில் விளையாட தனி திறமை வேண்டும். குறைந்த பந்தில் அதிக ரன் எடுக்க, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும்.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.