இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றம்


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ., மாற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜன. 11ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது. 

பின், கொச்சி (ஜன. 15), ராஞ்சி (ஜன. 19), மொகாலி (ஜன. 23), தர்மசாலா (ஜன. 27) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. முதல் நான்கு போட்டிகள் பகலிரவு போட்டியாகவும், கடைசி போட்டி பகல் போட்டியாகவும் நடத்தப்படுகிறது.

வழக்கமாக, இந்தியாவில் பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு துவங்கப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், பகலிரவு போட்டிகள் மதியம் 12 மணிக்கு துவங்கும் என பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது. 

இப்போட்டிகள் இரவு 7.45 மணிக்கு முடிவடையும். தர்மசாலாவில் நடக்கவுள்ள கடைசி போட்டி திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு துவங்கும்.

பொதுவாக பனிப்பொழிவு காலங்களில் நடக்கும் பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணி, "பீல்டிங்' தேர்வு செய்யும். ஏனெனில் இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணியின் பவுலர்களுக்கு, பந்தை பிடித்து வீசுவதற்கு சிரமமாக இருக்கும். 

இதனை தவிர்ப்பதற்காக போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

இந்திய-பாக்., தொடர் நடக்குமா?


பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்தது.

இரண்டு "டுவென்டி-20', மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி 22ம் தேதி இந்தியா வருகிறது. பெங்களூருவில், முதல் "டுவென்டி-20' போட்டி (டிச., 25) நடக்கிறது. 

இதனிடையே, இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில்,"" நமது உள்துறை அமைச்சர் பலவீனமாக உள்ளார். 

கடின வார்த்தைகளை மாலிக் பேசும் போது, நாமும் கடினமாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது. 

பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் தொடரை ரத்து செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. போட்டிகள் வழக்கம் போல நடக்கும்,'' என்றார்.

தோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு


தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது. 

தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: 

நாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. 

என்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார். இங்கிலாந்து அணி சிறப்பாக "பேட்டிங்' செய்தது. நமது பவுலர்கள் திறமையில்லாமல் இருந்தனர். தவிர, பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. 

சச்சின் ஓய்வு:

நம்மை விட, இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் சிந்தித்து பார்க்கவில்லை. ஆமதாபாத் டெஸ்டில் தோற்றவுடன், அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அதிக உழைப்புடன் வெற்றி பெற்றுள்ளனர். எந்தவொரு வீரரும் எந்தளவிற்கு, விளையாட்டை உற்சாகத்துடன் விளையாடுகிறார்கள் என்பது முக்கியம். 

"பீல்டிங்' போன்றவற்றில் எப்போது உற்சாகம் குறைகிறதோ, அப்போது விலகிவிட வேண்டும். இது எப்போது, நடக்கும் என்பது சச்சினுக்குத்தான் தெரியும். இவருக்கு இத்தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு முன், இவர் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பார் என நினைக்கிறேன். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 நீக்கலாம்:

முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கக்கூடாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால், இவரை விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன். 

ஏனெனில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை. ஆனால், கேப்டன் பதவி இல்லாமல் இருந்தால், அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை கொடுப்பார். ஓய்வு குறித்து தேர்வாளர்கள் சச்சினிடம் பேச வேண்டும்,'' என்றார்.

பணம், பதவி, பகட்டு - இந்திய தோல்விக்கு காரணம் என்ன?


டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் இந்திய வீரர்களுக்கு சுத்தமாக இல்லை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். 

கேப்டன் பதவியை பிடிக்க மோதல், அணியில் ஒற்றுமையின்மை, தவறான வீரர்கள் தேர்வு போன்றவை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய அணியால் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை. 

முன்பு வெளிநாடுகளில் தோல்வி அடைவது வாடிக்கையாக இருந்தது. தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் முக்கிய காரணம். இதன் மூலம் கோடிகள் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் பகட்டான வாழ்க்கைக்கு மாறி விட்டனர். 

ஒரு டெஸ்டில் விளையாடினால் ஒரு வீரருக்கு ரூ.7 லட்சம் தான் சம்பளம் கிடைக்கும். தவிர, 5 நாட்கள் களத்தில் கடுமையாக பாடுபட வேண்டும். இத்தகைய சிரமங்களை தற்போதைய வீரர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பிடிக்க காம்பிர், சேவக் முயற்சிக்கின்றனர். இப்படி பதவி போட்டி அதிகரித்தது, அணியின் நலனை பெரிதும் பாதித்தது. இது வீரர்கள் இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியது. 

இந்திய தேர்வுக்குழுவினரும் தைரியம் இல்லாதவர்களாக உள்ளனர். பழம்பெருமைக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கின்றனர். 

உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய நான்கு டெஸ்டில் சச்சின் சராசரியாக 18.66 ரன்கள் தான் எடுத்தார். ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

டெஸ்ட் போட்டிக்கு எழுச்சி அளிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் போர்டு விரைவில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள தொடரிலாவது சாதிக்க முடியும்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25–ந்தேதி முதல் ஜனவரி 6–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய தொடர் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணிலேயே அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை எப்போதும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். அப்படிப்பட்ட இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபித்து, முத்திரை பதிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. 

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். பதற்றமின்றி, நல்ல மனநிலையில் விளையாடும்படி எங்களது வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன். 

மூத்த வீரர் அப்துல் ரசாக் நீக்கம் பற்றி கேட்கிறீர்கள். அவரது திறமை குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தேர்வாளர்கள் இந்தியாவில் உள்ள சூழலை மனதில் வைத்து அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். சீனியர் வீரரை நீக்குவது தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும், அந்த முடிவுக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில், ‘20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் அணிகளில் உமர்குல், ஜூனைட் கான், வஹாப் ரியாஸ், முகமது இர்பான், அன்வர் அலி, ஆசாத் அலி, சோகைல் தன்விர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.