டிராவிட்டிற்கு எதிராக இந்திய வீரர்கள்

டிராவிட் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றியை அனைத்து வீரர்களும் கொண்டாடவில்லை. இவருக்கு எதிராக சிலர் செயல்பட்டனர்,''என, கிரெக் சாப்பல் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவருக்கும் அப்போதைய கேப்டன் கங்குலிக்கும் இடையே நிறைய பிரச்னைகள் வெடித்தன. தற்போது இவர் முன்னாள் வீரர் டிராவிட் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் சாப்பல் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக டிராவிட் திகழ்ந்தார். இவரது தலைமையில் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்றது.

தொடர்ந்து 17 போட்டிகளில் இரண்டாவதாக "பேட்' செய்து வெற்றி பெற்று சாதனை படைத்தது. எந்த சூழ்நிலையிலும் "சேஸ்' செய்வதே இவருக்கு பிடிக்கும். வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் வெற்றிகளை பெற்றார்.

இவரது வெற்றியை அணியில் இடம் பெற்ற அனைவரும் சேர்ந்து கொண்டாடாதது வருத்தமான விஷயம். சிலர் இவரது வளர்ச்சியை கண்டு பயந்தனர். இவருக்கு எதிராக செயல்பட்டனர்.

மற்ற கேப்டன்களுக்கு டிராவிட் முழு ஒத்துழைப்பு அளித்தார். இதே போன்றதொரு ஆதரவை இவருக்கும் அளித்திருந்தால், இந்திய கிரிக்கெட்டின் வரலாறு மாறியிருக்கும். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக டிராவிட் உருவெடுத்திருப்பார்.

கேப்டனாக டிராவிட் ஒருபோதும் தவறான முடிவு எடுத்ததில்லை. யாரையும் கடுமையாக பேசியதில்லை.

இலங்கையின் முரளிதரனின் சுழல் ஜாலத்தை சமாளிக்கும் உத்திகளை கண்டறிந்தார். துணிச்சலும், தன்னிம்பிக்கையும் தான் இவரை சிறந்த கேப்டனாக அடையாளம் காட்டியது.

இவ்வாறு கிரெக் சாப்பல் குறிப்பிட்டுள்ளார்.

விலகினார் சச்சின், ஜடேஜாவுக்கு கல்தா - இந்திய அணி அறிவிப்பு

இலங்கைத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சச்சின் விலகினார். தொடர்ந்து சொதப்பிய ரவிந்திர ஜடேஜா ஒருவழியாக நீக்கப்பட்டார். சேவக், ஜாகிர் கான் மீண்டும் இடம் பெற்றனர்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து ஒரு நாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூலை 21 முதல் ஆக., 7 வரை) பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் 21ம் தேதி அம்பாந்தோட்டையில் நடக்கிறது.

இதற்கான 15 பேர் கொண்ட அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய தேர்வுக்குழு, நேற்று மும்பையில் தேர்வு செய்தது. இதில் கேப்டன் தோனி பங்கேற்கவில்லை.


சச்சின் ஓய்வு:

ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்ட சச்சினுக்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் இல்லை. இலங்கைத் தொடரில் இருந்து தாமாகவே விலகிக் கொண்டார். இவருக்கு பதில் ரகானே வாய்ப்பு பெற்றார். கேப்டனாக தோனி, துணைக் கேப்டனாக விராத் கோஹ்லி தொடர்கின்றனர்.


சேவக் "ஓ.கே':

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சேவக், சமீபத்தில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்தார். இதையடுத்து, இவருக்கு அணியில் இடம் கிடைத்தது.


பிரவீண் "அவுட்':

வேகப்பந்து வீச்சாளர்களில் "சீனியர்' ஜாகிர் கான் அணிக்கு திரும்பியதால், "பார்ம்' இல்லாமல் தவித்து வரும் பிரவீண் குமார் நீக்கப்பட்டார். சுழற் பந்து வீச்சு பிரிவில் தமிழகத்தில் அஷ்வினுடன், ராகுல் சர்மா, பிரக்யான் ஓஜாவும் இடம் பெற்றனர். இர்பான், யூசுப் பதான் சகோதரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.


ஜடேஜா இல்லை:

தோனியின் தயவில் அணியில் ஒட்டிக் கொண்டிருந்த ரவிந்திர ஜடேஜா, ஒரு வழியாக நீக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சக்சேனா, புவனேஷ்வர் போன்ற இளம் வீரர்கள் யாருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), விராத் கோஹ்லி (துணைக் கேப்டன்), சேவக், காம்பிர், ரகானே, ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ஜாகிர் கான், உமேஷ் யாதவ், வினய் குமார், அசோக் டிண்டா, அஷ்வின், ராகுல் சர்மா மற்றும் பிரக்யான் ஓஜா.


ஹர்பஜன் அவ்வளவு தானா

கடந்த 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இருந்து, வயிற்றுப்பகுதியில் காயம் என்ற பிரச்னையால், பாதியில் நாடு திரும்பினார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். பின் இந்தியாவில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா சென்ற அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். ஆசிய கோப்பை தொடரிலும் இடம் பெறாத இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு சாதிக்கவில்லை. இலங்கை தொடரில் எப்படியும் இடம் பெறுவார் என நம்பப்பட்டது. தற்போது மீண்டும் சேர்க்காததால், ஹர்பஜனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது போலத் தெரிகிறது.


யுவராஜ் வாய்ப்பு எப்படி

தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது:

அணித் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளட்சருடன் தொலைபேசியில் விவாதித்தோம். கடந்த தொடர்கள் பற்றி ஆராய்ந்தோம். இதன் அடிப்படையில் தான் அணித் தேர்வு நடந்தது. யுவராஜ் சிங் பயிற்சியை துவக்கியது நல்ல விஷயம். ஏற்கனவே உலக கோப்பை போட்டிகளில் அசத்திய இவர், "டுவென்டி-20' உலக கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மீண்டும் சேவக், ஜாகிர் கான் - இந்திய அணி இன்று தேர்வு

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில், சேவக், ஜாகிர் கான் மீண்டும் இடம் பெற உள்ளனர்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின் இந்திய வீரர்களுக்கு சுமார் 2 மாத ஓய்வு கிடைத்தது. தற்போது, ஐந்து ஒரு நாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூலை 21 முதல் ஆக., 7 வரை) இந்திய அணி, இலங்கை செல்கிறது.

இதற்கான அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய தேர்வுக்குழு இன்று மும்பையில் தேர்வு செய்கிறது.


சேவக் வருகை:

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டனர். தவிர, தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு "டுவென்டி-20' போட்டியிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை.

ஆனால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற இருவரும் தங்கள் உடற்தகுதியை நிரூபித்தனர். இந்த வீரர்கள் இலங்கைத் தொடரில் இடம் பெறுவர் என்று தெரிகிறது.சேவக் வருவதால் ஆசிய கோப்பை அணியில் இருந்த மனோஜ் திவாரியின் இடம் கேள்விக்குறிதான்.


சச்சின் சந்தேகம்:

கடந்த உலக கோப்பை (2011) தொடரை அடுத்து, சச்சின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவே ஆர்வம் காட்டினார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றார். வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் தனது சர்வதேச 100 வது சதத்தை பதிவு செய்தார்.

தற்போது முக்கியத்துவம் இல்லாத, இலங்கை ஒருநாள் தொடருக்கு, சச்சின் முக்கியத்துவம் கொடுப்பாரா என்பது சந்தேகமே. ஒருவேளை சச்சின் இல்லையென்றால், சேவக், காம்பிருடன் மூன்றாவது துவக்க வீரராக அஜிகின்யா ரகானேவுக்கு வாய்ப்புச் செல்லும். கேப்டன் தோனி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் வழக்கமாக இடம் பெறுவர்.


இர்பான் உறுதி:

வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் ஜாகிர் கான், உமேஷ் யாதவ் வருவதால், பிரவீண் குமார், வினய் குமார், அசோக் டிண்டா ஆகிய மூவரில் இருவர் தான் இலங்கை செல்ல முடியும். "ஆல் ரவுண்டர்' இடத்தை இர்பான் பதான் தட்டிச் செல்லலாம்.


ஹர்பஜன் வருவாரா:

இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இதனால், தமிழகத்தின் அஷ்வின் தனது இடத்தை தக்க வைப்பார். இவருடன் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவார் என நம்பப்படுகிறது. இது சரியாக நடந்தால், ராகுல் சர்மாவுக்கு இடம் கிடைக்காது.

ஐ.பி.எல்., தொடரில் பெரும் ஏமாற்றத்தை தந்த ரவிந்திர ஜடேஜா, யூசுப் பதான் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் தான்.


பொறுத்திருந்து பார்க்கலாம்

தோள் பட்டை காயத்தில் இருந்து மீண்டுள்ள சேவக் கூறுகையில்,"" தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற் தகுதி தேர்வில் பங்கேற்றேன். இதற்கான அறிக்கையை "பிசியோதெரபிஸ்ட்' தேர்வுக்குழுவிடம் தருவார். அடுத்து என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம்,'' என்றார்.


இவர்களும் வருவார்களா

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய "ஏ' அணியில் மத்திய பிரதேசத்தின் சாக்சேனா, 25, சுழற்பந்து வீசுவதுடன், பின் வரிசை பேட்டிங்கிலும் அசத்தினார். மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் நம்பிக்கை தந்தார். இவர்கள் இந்திய அணியில் புதுமுகமாக இடம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை.

இலங்கை டூர்: இந்திய அணி நாளை தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20&20 ஆட்டத்தில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி 21&ம் தேதியும், 2வது ஆட்டம் 24&ம் தேதியும், 3வது ஆட்டம் 28&ம் தேதியும், 4வது ஆட்டம் 31&ம் தேதியும், கடைசி ஒன்டே 4&ம் தேதியும் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. சச்சினுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

சேவாக் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இளம்வீரர் ரகானேவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

சமீபகாலமாக சுழற்பந்துவீச்சாளர் சரியாக அமையாததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அஸ்வின் அதிக ரன்னை வாரி வழங்குவது பின்னடைவாக இருந்து வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸி. டூரிலும் சொதப்பினார். மேலும் ஐபிஎல்லிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

இதனால் அஸ்வின் நீக்கப்படக்கூடும். ராகுல்சர்மா, ஓஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சிக்கல் இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் புதுமுக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டன.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டையில் முடிந்தததைத் தொடர்ந்து இரு அணிகளும் கூட்டாக சாம்பியனாயின.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சமி அஸ்லம் 134 ரன்களும், உமர் வஹீத் 48 ரன்களும் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் கலேரியா 10 ஓவர்களில் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டம் டை: இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் அபராஜித் 90 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வேகமாக வீழ்ந்தாலும், கேப்டன் உன்முகுத் சந்த் சதமடித்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4-வது பந்தில் உன்முகுந்த் சந்த் ஆட்டமிழந்தார். அவர் 121 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 5-வது பந்தை எதிர்கொண்ட கலேரியா பவுண்டரி அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோரை சமன் செய்தது இந்தியா. இதனால் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிப் பந்தில் கலேரியா ஆட்டமிழந்தார்.

இந்தியாவால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், ஆட்டம் டையில் முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் இசான் அடில், முகமது நவாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் உன்முகுத் சந்த், பாகிஸ்தானின் சமி அஸ்லம் ஆகியோர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்நாயகன் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதையும் அஸ்லமே தட்டிச் சென்றார். சிறந்த பெளலராக இலங்கையின் பிஎச்டி கெüசல் தேர்வு செய்யப்பட்டார்.