இந்திய அணிக்கு மூணாறில் பயிற்சி

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய "சைக்கிளிங்' அணியினருக்கு, மூணாறில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் புதுடில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் பங்குபெறும் இந்திய அணியினர் மூணாறில் பயிற்சியை துவக்கியுள்ளனர்.


அணியில் நான்கு பெண்கள் உட்பட 24 பேர் இடம் பெற்றுள்ளனர். தினமும் 100 கி.மீ., தூரம் செல்கின்றனர். ஜனவரி 31 வரை மூணாறில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பின், இந்த அணியினர் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைக்கிளிங் ஒலிம்பிக்வீரர் கிரகாம் சிஸ் பயிற்சியளித்து வருகிறார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தெற்கு மண்டல பிரிவினர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துஉள்ளனர். வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் சைக்கிளின் விலை இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை உள்ளது.


மூணாறில்நிலவும் பருவநிலை பயிற்சிக்கு ஏற்றதாக உள்ளதால் இங்கு பயிற்சியளிப் பதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தெற்கு மண்டல துணை இயக்குனர் வர்கீஸ் தெரிவித்தார்.


போலீஸ் அறிவிப்பு: காலை 8 முதல் பகல் 12 மணி வரை பயிற்சி மேற் கொள்ளும் பகுதிகளான டாப்ஸ்டேஷன், தேவிகுளம் ரோடுகளில் பிற வாகனங்களை ஓட்டுபவர்கள், கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இரட்டை விருது வென்றார் சேவக்

மும்பை டெஸ்டில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர தனது டெஸ்ட் வரலாற்றில் 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆட்ட, தொடர் நாயகன் என விருதுகளையும் சேவக் வென்றார்.


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது.


பின்னர் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர 1932ல் டெஸ்ட் விளையாட துவங்கிய இந்திய அணி, 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடம் பெற்றது.

தற்போது இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.

இப்போட்டியில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.


கனவு நனவானது: தோனி

"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.


ஜனாதிபதி பாராட்டு

டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.


கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:

முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்

இன்னொரு தடவை சொன்னால்... *யுவராஜுக்கு சச்சின் எச்சரிக்கை

யுவராஜ் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார் சச்சின். தன்னை மீண்டும் ஒரு முறை தாத்தா என அழைத்தால், யுவராஜின் பட்டப்பெயர்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். தொடர்ந்து 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 36 வயதான இவர் தான் அணியின் சீனியர் வீரர். இதையடுத்து "டிரஸ்சிங் ரூமில்' சக வீரர்கள் சச்சினை செல்லமாக தாத்தா என அழைப்பதாக சமீபத்தில் யுவராஜ் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதனை கேட்டு சச்சின் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

என்னை தாத்தா என அழைப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரு முறை சிந்திக்கும்படி யுவராஜை எச்சரித்துள்ளேன். ஏனென்றால் அவருக்கு நானும் நிறைய பட்டப்பெயர் வைத்துள்ளேன். அவற்றை "டிவி கேமரா' முன் தற்போது வெளியிட விரும்பவில்லை. எனது எச்சரிக்கையை பின்பற்ற இன்னொரு வாய்ப்பு அளித்துள்ளேன். இதனை மீறினால், அவரது பட்டப் பெயர்களை வெளியிட நேரிடும்.


எனது வழிகாட்டி:
கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளாக நீடிக்க எனது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர். எனது அப்பா சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவரது மறைவு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. மனைவி அஞ்சலியும் ஆதரவாக உள்ளார். எனக்காக டாக்டர் பணியை தியாகம் செய்தார். நான் பொதுவாக எதையும் முகத்தில் வெளிப்படையாக காட்ட மாட்டேன். ஆனாலும் நான் என்ன சொல்ல நினைக்கிறேன், என்ன உணர்கிறேன், எதை சிந்திக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் அஞ்சலியின் சிறப்பம்சம்.


கங்குலி துணிச்சல்:
கேப்டன் என்ற முறையில் கங்குலி மற்றும் தோனியை ஒப்பிடுவது மிகவும் கடினம். இருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு. களத்தில் துடிப்பாக செயல்படக் கூடியவர்கள். ஆனாலும் "ஸ்டைல்' மட்டும் வேறுபடும். தோனி மிகவும் "கூலாக' இருப்பார்.

கங்குலி உடல் அளவிலும் ஆக்ரோஷமாக இருப்பார். போட்டிகளின் போது கங்குலி மிகச் சரியான முடிவுகளை எடுப்பார். இவர் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். கடந்த 2001ல் இந்திய அணி அன்னிய மண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதற்கு கங்குலி முக்கிய காரணமாக இருந்தார்.

வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அணி சிறப்பாக செயல்பட வேண்டும். ஒரு அணி 150 அல்லது 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி விட்டால், சிறந்த கேப்டனாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு சச்சின் கூறினார்.


அண்ணன் "பார்முலா'
சச்சின் ஆடும் போட்டிகளை அவரது அண்ணன் அஜித் "டிவி'யில் நேரடியாக பார்க்க மாட்டாராம். இது குறித்து சச்சின் கூறுகையில்,""நான் விளையாடும் நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் வெளியில் சென்று விடுவார் அஜித்.

அங்கு ரேடியோ உட்பட எதுவும் இருக்காது. பின் வீட்டுக்கு வந்து போட்டியின் "வீடியோவை' பார்ப்பார். தினமும் மாலை நேரத்தில் அவருடன் பேசுவேன். அப்போது போட்டியில் நான் செய்த தவறுகள், முன்னேற்றம் காண என்ன செய்ய வேண்டும் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிப்போம். இந்த "பார்முலாவை' பள்ளி நாட்களில் இருந்து தற்போது வரை தொடருகிறேன்,'' என்றார்

அடுத்த சச்சின் யாருமில்லை

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவருக்கு நிகராக இன்னொரு வீரர் உருவாக வாய்ப்பில்லை என்று ஆணித்தரமாக சொல்கிறார் இலங்கையின் முரளிதரன்.


இலங்கை அணியின் "சுழல்' நட்சத்திரம் முரளிதரன் (38). 129 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர் 783 விக்கெட் சாய்த்துள்ளார். தவிர, 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 512 விக்கெட்டுகள், <உலகில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் சாதனை படைக்க உள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் இந்திய "மீடியாவில்' வெளியான ஒரு செய்தியில்,"" பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவர் சர்பராஸ் கான், 439 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் இன்னொரு சச்சினாக உருவெடுத்துள்ளார்,'' என கூறப்பட்டிருந்தன.


இதுகுறித்து முரளிதரன் அளித்த பேட்டி: சமீபத்தில் மும்பை மாணவர் ஒருவர் பள்ளி அளவிலான போட்டியில் 400க்கும் அதிகமான ரன்கள் எடுத்தார் என பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன். அதில் அந்த மாணவர், இந்தியாவின் அடுத்த சச்சின் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் எப்படி அவ்வாறு கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. சாம்பியன் பேட்ஸ்மேனான சச்சின், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து அசத்தி வருகிறார்.


இந்நிலையில் திடீரென வந்த அந்த மாணவனை சச்சினுக்கு மாற்று எனக் கூற முடியாது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சரி, சச்சினைப் போல எந்த வீரரையும் அடையாளம் காண முடியாது. அவரைப்போல யாரும் இனி உருவாகப் போவதில்லை. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் அவர்.


சாதனை வீரர்: சச்சின் தனது 44 வயதிலும் ரன்கள் குவித்துக்கொண்டிருப்பார். ஏனென்றால் அவரது ஆட்டமுறை அப்படி உள்ளது. இவருக்கு இயற்கையாய் அமைந்துள்ள இந்த மனப்பாங்கும், தந்திரமும் தான், சாதனை வீரராக உருவெடுக்க வைத்துள்ளது.


ஒப்பிட முடியாது: வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவுடன் ஒப்பிட்டால் கூட, இந்தியாவின் சச்சின் தான் சிறப்பான வீரர். அவரை யாருடனும் ஒப்பிடமுடியாது. இப்படி இருக்கையில் எப்படி மீடியா, அடுத்த சச்சின் என ஒருவரை குறிப்பிடுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்

இந்திய அணி ஆட மறுத்ததால் பாக். கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.230 கோடி நஷ்டம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதாக இருந்தது. ஆனால் மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.230 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தணிக்கைத்துறை கூறி உள்ளது.

டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமத்தில் மட்டும் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மற்ற வகை விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் நடத்த இருந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்தாமல் போனதாலும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோல அடுத்து பாகிஸ்தானில் நடத்த இருந்த உலககோப்பை போட்டிகள் சிலவும் ரத்து ஆனது. இதனாலும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

சாம்பியன் கோப்பை, உலக கோப்பை போட்டி ரத்தால் சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி நஷ்டஈடு வழங்க இருக்கிறது.