அயர்லாந்து அணி திரில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 4 புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணி, மீதமுள்ள 3 போட்டியில், 2ல் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு சுலபமாக முன்னேறலாம். 

ஆனால் கடைசி இரண்டு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை சந்திக்க இருப்பதால், இன்று எப்படியும் வெல்ல வேண்டும் என, களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.


ஜாய்ஸ் சதம்:

அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (10) துவக்கத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போர்டர்பீல்டு (29) நிலைக்கவில்லை. இருப்பினும், ஜாய்ஸ், பால்பிர்னே இணைந்து சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். 

ஜிம்பாப்வே அணியின் ‘பீல்டிங்கும்’ மந்தமாக அமைய, ஜாய்ஸ் ஒருநாள் அரங்கில் 3வது சதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாய்ஸ் (112) அவுட்டானார். 

கெவின் ஓ பிரையன் (24), வில்சன் (25), மூனே (10), நெயில் ஓ பிரையன் (2) என, வரிசையாக அவுட்டான போதும், பால்பிர்னே 79 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. டாக்ரெல் (5), கசாக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 


டெய்லர் ஆறுதல்:

கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு சிபாவா (18), சிக்கந்தர் (12), மிர்ரே (11) அடுத்தடுத்து வெளியேறினர். மசகட்சா 5 ரன்கள் மட்டும் எடுத்தார். பின் இணைந்த பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. 

ஸ்டெர்லிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த டெய்லர் சதம் விளாசினார். இவர் 121 ரன்களில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் சத (96) வாய்ப்பை இழந்தார். 

பின் வந்த எர்வின் (11), பன்யான்கரா (5) நிலைக்கவில்லை. கெவின் ஓ பிரையன் பந்துவீச்சில் முபரிவா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சகபவா 17 ரன்களில் அவுட்டானார். 

கசாக் பந்தில் முபரிவா (18) அவுட்டாக, ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 326 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கசாக் 4 விக்கெட் வீழ்த்தினார். 

0 comments:

Post a Comment