51 பந்தில் சதம் - நிறைய சாதனைகள்

2வது அதிவேகம்

ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் நேற்று 51 பந்தில் சதத்தை எட்டினார் இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011)  உள்ளார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 52 பந்தில் சதம் அடித்தார்.

* ஒருநாள் அரங்கில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரரானார். இவர், பால்க்னரின் சாதனையை(57 பந்து, எதிர் இந்தியா, 2013) தகர்த்தார். 


5

நேற்று 5வது வீரராக வந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் சதமடித்தார். இதன்மூலம் இம்முறை 5வது வீரராக களமிறங்கி, 5 பேர் சதமடித்துள்ளனர். 

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், டிவிலியர்ஸ், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர் ஆகியோர் 5வது வீரராக வந்து சதமடித்தனர். 

கடந்த 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவின் வினோத் காம்ப்ளி, நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் என இரண்டு பேர் 5வது வீரராக களமிறங்கி சதமடித்தனர். மற்ற உலக கோப்பை தொடர்களில் தலா ஒரு பேட்ஸ்மேன் இம்மைல்கல்லை எட்டினர்.


சாதனை நழுவியது

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. 

இவர், 49 பந்தில் 99 ரன்கள் எடுத்திருந்த போது, மலிங்கா பந்தை அடிக்க முயன்றார். அப்போது பந்து, பேடில் பட்டுச் செல்ல ஒரு ரன் எடுக்கப்பட்டது. 

இதனை அறியாத அம்பயர், ‘லெக் பைஸ்’ சிக்னல் காட்டவில்லை. பின், மேக்ஸ்வெலிடம் கேட்டு ‘லெக் பைஸ்’ என தெரிவித்தார். சாதனைக்கு ஆசைப்படாத மேக்ஸ்வெல், உண்மையை தெரிவித்தது பாராட்டுக்குரியது.


14 ஆயிரம் ரன்கள்

அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, ஒருநாள் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை 402 போட்டிகளில் விளையாடிய இவர், 24 சதம், 93 அரைசதம் உட்பட 14,065 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி) உள்ளார்.

0 comments:

Post a Comment