ஜிம்பாப்வே அணி தோல்வி - பாக்., அணி முதல் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடந்த உலக கோப்பைக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

பாகிஸ்தான் அணியில் யூனிஸ் கான் நீக்கப்பட்டு ரஹாத் அலி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு நசிர் அகமது (1), அகமது ஷேசாத் (0) மோசமான துவக்கம் கொடுத்தனர். பின் இணைந்த ஹாரிஸ் சோகைல், கேப்டன் மிஸ்பா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் (27) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மிஸ்பா (73) அரைசதம் கடந்தார். உமர் அக்மல் (33) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த அப்ரிதி ‘டக்–அவுட்’ ஆனார். சோகைப் மக்சூட் (21) சோகபிக்கவில்லை. 

வகாப் ரியாஸ் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்தது. வகாப் ரியாஸ் (54), சோகைல் கான் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் சட்டாரா 3, சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். 

ஜிம்பாப்வே அணிக்கு சிபாபா (9), சிக்கந்தர் (8) ஏமாற்றினர். முகமது இர்பான் பந்தில் மககட்சா (29) வெளியேறினார். பிரண்டன் டெய்லர் அரை (50) சதம் எட்டினார். சீன் வில்லியம்ஸ் 33 ரன்கள் எடுத்தார். 

மிர்ரே (8), முபரிவா (0) உள்ளிட்டோர் விரைவில் வெளியேற, ஜிம்பாப்வே அணி 215 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. கேப்டன் சிகும்பரா (35) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் 4 விக்கெட் வீழ்த்திய வகாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். 

இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

0 comments:

Post a Comment