டர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா



தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டர்பன் டெஸ்டில், பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இளம் வீரர் ரகானே அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். 
                                   
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், டர்பனில் நடந்தது.      
                               
முதல் இன்னிங்சில் இந்தியா 334, தென் ஆப்ரிக்கா 500 ரன்கள் எடுத்தன. ௪வது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு, 68 ரன் எடுத்து, 98 ரன் பின் தங்கி இருந்தது. புஜாரா (32), விராத் கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.            

திடீர் சரிவு: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. ஸ்டைன் வீசிய முதல் பந்தில், விராத் கோஹ்லி (11) அவுட்.        

புஜாராவும் (32), ஸ்டைன் வேகத்தில் போல்டாகி வெளியேற, இந்திய அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் ரோகித் சர்மா 25 ரன் எடுத்த போது, பிலாண்டர் வேகத்தில் வீழ்ந்தார்.அடுத்து வந்த தோனி (15), பீட்டர்சன் ஓவரில் தேவையில்லாமல் அவுட்டாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 
                             
இதே ஓவரில், ஜடேஜாவை (8), மார்கல் ‘கேட்ச்’ செய்தார்.    
                           
ரகானே போராட்டம்: ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் இளம் வீரர் ரகானே உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ரகானே, டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். 

ஜாகிர் கான் (3 ரன், 41 பந்து), அம்பயர் ஸ்டீவ் டேவிசின் (ஆஸி.,) தவறான தீர்ப்பினால் எல்.பி.டபிள்யு., ஆனார். இஷாந்த் சர்மா (1) நிலைக்கவில்லை. மனம் தளராத ரகானே, 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்திய அணி, 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.           
                   
எளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. ஆல்விரோ பீட்டர்சன், ஸ்மித் இணைந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.         
          
டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–1 என இழந்தது.


ஸ்டைன் ‘350’   
         
நேற்று இஷாந்த் சர்மாவை அவுட்டாக்கிய ஸ்டைன், டெஸ்ட் அரங்கில் வேகமாக ‘350’ விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டாவது (130 இன்னிங்ஸ்) இடம் பெற்றார். முதலிடத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் (120 இன்னிங்ஸ்) உள்ளார்.       

     
‘96’

2010ல் இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்ற போது, டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் லட்சுமண், 96 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.             

நேற்று அதே டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில், புஜாரா 96 ரன்கள் எடுத்தார். இதில் இந்திய அணி தோல்வியடைந்தது.


தேறாத தோனி

அன்னியமண்ணில் கேப்டன் தோனி எடுக்குமு் முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரவில்லை. கடந்த 2011ல் இங்கிலாந்து (0–4), 2011–12ல் ஆஸ்திரேலியா (0–4) தொடர், தற்போது தென் ஆப்ரிக்க மண்ணில் (0–1) என, இந்திய அணி பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்துள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் மட்டும், வெற்றிபெற வேண்டிய போட்டியை, போராடி ‘டிரா’ செய்தனர்.       

* தவிர, கடந்த 1992–93 முதல் தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்ட் தொடரில், 5ல் இந்திய அணி தோற்றுள்ளது. கடைசியாக பங்கேற்ற 2010 டெஸ்ட் தொடரை மட்டும் ‘டிரா’ (1–1) செய்தது.        

           
புஜாரா முதலிடம்            
      
இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் புஜாரா, 4 இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கோஹ்லி (272), ரகானே (209) உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (197), டிவிலியர்ஸ் (190), ஆல்விரோ பீட்டர்சன் (190) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.             

      
ஜாகிர் கான் ‘7’     
             
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தை (10) பெற்றார் பிலாண்டர். அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (10), இந்தியாவின் ஜாகிர் கான் (7) உள்ளனர். தென்ஆப்ரிக்காவின் மார்கல், இந்தியாவின் ஜடேஜா தலா 6 விக்கெட் கைப்பற்றி, 4, 5வது இடத்தில் உள்ளனர்.                  

வெற்றியுடன் விடைபெற்றார் காலிஸ்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்ரிக்க ‛ஆல்-ரவுண்டர்’ காலிஸ் வெற்றியுடன் விடைபெற்றார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா'வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், தென்ஆப்ரிக்க அணி 500 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்து, 98 ரன்கள் பின் தங்கியிருந்தது. புஜாரா(32), கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.  

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஸ்டைன் வீசிய முதல்பந்தில் விராத் கோஹ்லி (11) அவுட்டானார். தொடர்ந்து புஜாராவும் (32) ஸ்டைன் வேகத்தில் ‘போல்டானார்’. ரோகித் சர்மா (25) நிலைக்கவில்லை. 

பின் வந்த கேப்டன் தோனி (15) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஜாகிர் கான் கைகொடுக்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தய ரகானே, அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (3), இஷாந்த் சர்மா (1) ஏமாற்றினர். 

பொறுப்பாக ஆடிய ரகானே 96 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் ஜோடி நம்பிக்கை அளித்தது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-0  என கைப்பற்றி கோப்பை வென்றது.       

விராத் கோஹ்லி நம்பர் 2



ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் நீடிக்கிறார். 

மூன்றாவது இடத்தில் மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா உள்ளார். இந்திய கேப்டன் தோனி (6வது இடம்), ஷிகர் தவான் (10வது) ஆகியோர் "டாப்-10' பட்டியலில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதன்முறையாக 16வது இடத்துக்கு முன்னேறினார்.

ஜடேஜா முன்னேற்றம்: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 17வது இடத்தில் நீடிக்கிறார். 

முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான தர வரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 

முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் நீடிக்கின்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்

வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, புதிய வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட், வரும் மார்ச் 16 முதல் ஏப்., 6 வரை "டுவென்டி-20' உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன. 

வங்கதேசத்தில் நடக்கும் கலவரம், பாகிஸ்தான் அணி மறுப்பு காரணமாக, உலக கோப்பை "டுவென்டி-20' தொடரை இந்தியாவுக்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது. தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இப்போட்டியை ஒளிபரப்ப, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) நிம்பஸ் "டிவி' நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2012ல் வங்கதேசத்தில் ஆசிய போட்டி நடந்தது. மீண்டும் இங்கு நடத்த, "டிவி' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, 'நோட்டீஸ்' அனுப்பியது. 

அதேநேரம், ஏ.சி.சி., தலைவராக இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் தான் உள்ளார். இருப்பினும், 1990-91 முதல் ஆசிய கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை. 

அரசியல் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் உட்பட பல காரணங்களுக்காக, 2014 ஆசிய கோப்பை தொடர் குறித்து, பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 ஏ.சி.சி., தலைமை அதிகாரி சையது அஷ்ரபுல் கூறுகையில், ""ஒளிபரப்பு பிரச்னையால் தொடரை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. புதிய ஏலம் குறித்து அறிவித்துள்ளோம். போட்டியை இந்தியா அல்லது இலங்கைக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன,'' என்றார்.

வங்கதேசத்தில் 2014, ஜன. 5ல் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், ஆசிய போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். தொடரை மாற்ற வேண்டாம் என, வங்கதேசம் தெரிவிக்கிறது. இதனால், குழப்பமான நிலை நீடிக்கிறது.

ஓய்வு பெறுவாரா ஹர்பஜன்?



இந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 33. இதுவரை 101 டெஸ்ட் (413 விக்.,), 229 ஒரு நாள் (259 விக்.,), 25 "டுவென்டி-20' (22 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். 

கடைசியாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்கிறார். இந்திய அணியில் விளையாட முடியாததால், ஓய்வு முடிவில் உள்ளதாக சொல்லப்பட்டது. 

இது குறித்து இவர் கூறியது: இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று, அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும். 

இது தான் என் எண்ணம். எனவே, ஓய்வு என்ற முடிவுக்கு இடமில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரு போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தினேன். 

இதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன். இப்படி அவ்வப்போது, காயம் தொல்லை தருகிறது. இருப்பினும், இதிலிருந்து விரைவில் மீண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன். 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.