ஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1



ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.


கோஹ்லி "நம்பர்-4':

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் தோனி 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா உள்ளனர்.


ஜடேஜா "நம்பர்-1':

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். 

மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 18வது இடத்தில் நீடிக்கிறார்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் தெண்டுல்கர், டிராவிட்



10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கு, ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தெண்டுல்கரை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது. 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர் பெயர் இடம் பெற்றுள்ளது. 

இதேபோல் இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்து இருந்த டிராவிட்டின் பெயர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறது. 

இதனால் இருவரும் இந்த போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்



சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மைக்கேல் ஹசி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல், இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது. 

இதில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.


தகுதி சுற்று:

இந்தியா (3), ஆஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), வெஸ்ட் இண்டீசை (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. 

ஐதராபாத்தில் செப்.17-20ம் தேதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.


இரண்டு பிரிவு:

பிரதான சுற்றில், 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். "ஏ' பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. "பி' பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்.21ம் தேதி நடக்கவுள்ள "ஏ' பிரிவுக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.


உத்தேச அணி:

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும், உத்தேச அணியை அறிவித்தன. பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில், 11 பேர் இந்திய அணிக்காக விøளாட உள்ளனர். 

இலங்கையின் சங்ககரா (கந்துரதா மரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரதா மரோன்ஸ்), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும், உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை, தங்களது அணிக்காக விøளாட தேர்வு செய்யும் இந்திய அணிகள், சாம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக, ஒரு வீரருக்கு தலா ரூ. ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்: டுவைன் பிராவோ (சென்னை), கெவான் கூப்பர் (ராஜஸ்தான்), போலார்டு (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மார்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

ஆஸ்திரேலியா: நாதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கேல் ஹசி (சென்னை), மிட்சல் ஜான்சன் (மும்பை), ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசாரா பெரேரா (ஐதராபாத்).


சச்சின் பங்கேற்பாரா

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார். கடந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், 7 போட்டியில் 41 ரன்கள் மட்டும் எடுத்தார். 

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.

அஜய் ஜடேஜாவின் ஆசை

சூதாட்ட அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர், ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, 42. கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இவர், 2000ம் ஆண்டு வரை விளையாடினார். 

இதுவரை இவர், 15 டெஸ்ட் (576 ரன்கள்), 196 ஒருநாள் (5359 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு, ஐந்து ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து அப்பீல் செய்த இவருக்கு, 2003ல் டில்லி கோர்ட் வழங்கிய தீர்ப்பில், தடை நீக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும் வயது, "பார்ம்', உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2005ல் ரஞ்சி கோப்பைக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக களமிறங்கினார். அதன்பின் 2007ல், ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் தொடரில் விளையாடினார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர், சென்னையில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அரியானா அணியின் கேப்டனாக விளையாடினார். இதன்மூலம் ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். 

இதனையடுத்து இவர், அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏழாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறியது: இந்தியாவில் நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணம் கிடையாது. ஏனெனில் "டுவென்டி-20' போட்டியில் விளையாடுவதற்கேற்ப உடற்தகுதி என்னிடம் இல்லை. 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20' போட்டி முற்றிலும் மாறுபட்டது. எனவே பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது, "டிவி' சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர விரும்புகிறேன்.

அதேவேளையின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பை தொடரில் அரியானா அணிக்காக விளையாட விரும்புகிறேன். இத்தொடரில் விளையாடுவதற்குரிய தகுதியும், திறமையும் என்னிடம் உள்ளது. 

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன். ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. இது, அரியானா அணி நிர்வாகத்திடம் உள்ளது. புச்சிபாபு தொடர் மூலம், மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அஜய் ஜடேஜா கூறினார்.

இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள் - வாருகிறார் வார்ன்

ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என, வார்ன் தெரிவித்தார். 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என, கைப்பற்றியது. 

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கோப்பை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர், ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். 

அப்போது, ஆஸ்திரேலிய வீரர்கள், பத்திரிகையாளர்கள் மைதானத்தில் தான் இருந்தனர். 

இதனால், இவ்விஷயம் வெளிப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை, அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து, விசாரணை நடக்கிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில்,"" வீரர்களின் கொண்டாட்டம் என்பது "டிரசிங் ரூமிற்குள்' இருப்பது தான் சிறந்தது. 

மிகவும் பழமை வாய்ந்த ஓவல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது, இங்கிலாந்து வீரர்களில் மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என்றார்.