காம்பிருக்கு இடம் கிடைக்குமா? - இன்று இந்திய அணி தேர்வு



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில், கேப்டன் தோனி இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது. இதனால், காம்பிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

முத்தரப்பு தொடருக்குப் பின், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட (ஜூலை 24- ஆக., 3) தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் ஹராரேயிலும், கடைசி இரு போட்டிகள் புலவாயோவில் நடக்கும். 

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் தோனி முத்தரப்பு தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே தொடர் குறித்து இவரது முடிவு என்ன என, இன்னும் தெரியவில்லை. 

ஒருவேளை தோனிக்கு ஓய்வு தரப்படும் பட்சத்தில், கேப்டன் பணியை விராத் கோஹ்லி தொடர்வார். தோனிக்குப் பதில் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட "அனுபவ' காம்பிர் (147 போட்டி, 5238 ரன்) அணியில் இடம் பெறலாம்.

 ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. இதனால், முரளி விஜய் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. "மிடில்-ஆர்டரில்' மனோஜ் திவாரி தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், முழங்காலில் காயம் அடைந்ததால், புஜாராவுக்கு வாய்ப்பு செல்லும்.


பிரவீண் வருவாரா:

பவுலிங்கில் தற்போது அணியிலுள்ள ஒன்று அல்லது இரு வீரர்களுக்கு ஓய்வு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரவீண் குமார் அணிக்கு திரும்பலாம். ஷமி அகமது அணியில் நீடிப்பார். 

ஏற்கனவே அணியிலுள்ள சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இதனால், ராகுல் சர்மா இடம் பெறுவது சந்தேகம் தான். 

சச்சின் சாதனையை நெருங்கும் குக்



இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனையை முறியடிப்பார்,'' என, "ஆல்-ரவுண்டர்' கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (198 டெஸ்ட், 15837 ரன்கள், 51 சதம், 67 அரைசதம்), டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். 

இவரை விட, 8313 ரன்கள் குறைவாக இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் (92 டெஸ்ட், 7524 ரன்கள், 25 சதம், 29 அரைசதம்) உள்ளார். சச்சினின் இந்த சாதனையை அலெஸ்டர் குக் விரைவில் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணியை அலெஸ்டர் குக் சிறப்பாக வழிநடத்துகிறார். இவர், சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய சாதனைகள் படைப்பார் என நம்புகிறேன். 

குறிப்பாக இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர், முதன்முதலில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியை சிறப்பாக வழிநடத்திய இவர், அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

இளம் வீரர் ஜோ ரூட் அருமையாக பேட்டிங் செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கிய போது, சிறந்த வீரராக வலம் வருவார் என நினைத்தேன். அதற்கேற்ப அசத்தி வருகிறார்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

வெஸ்ட் இண்டீசில் சாதிக்குமா இந்தியா

இண்டீசில் நடக்கவுள்ள முத்தரப்பு தொடரில் சாதிக்க, தோனி தலைமையிலான இந்திய அணி ஜமைக்கா சென்றடைந்தது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இங்கிலாந்தை வீழ்த்திய, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்த பின், வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்க நேற்று லண்டனில் இருந்து ஜமைக்கா புறப்பட்டது. 

இதிலும், தோனி தலைமையிலான இளம் அணி சாதித்து, கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் மூன்றாவது அணியாக இலங்கை கலந்து கொள்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் (வரும் 30ம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"" எங்களின் அடுத்த திட்டம் தயாராகிவிட்டது. இதற்காக ஜமைக்கா செல்கிறோம். இங்கிலாந்தில் கழிந்த நாட்கள் சிறப்பாக இருந்தது,' என, குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வின் "டுவிட்டரில்' கூறுகையில்,"ஜமைக்கா செல்லும் எங்களுடன் புதிதாக முகமது ஷமி சேர்ந்துள்ளார்,' என, குறிப்பிட்டுள்ளார். 

2015 உலக கோப்பைக்கு தோனி தான் கேப்டன்



இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்திய தோனி, வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கும் கேப்டனாக நீடிக்கலாம்,'' என, முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

சாம்பியன்ஸ் டிராபியை(மினி உலக கோப்பை)தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவரையும் முன்னாள் கேப்டன் கங்குலியையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். 

இது குறித்து கங்குலி கூறியது:

பொதுவாக ஜூன் மாதம் என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பல இனிய நினைவுகளை கொடுத்துள்ளது. 30 ஆண்டுக்கு முன் லார்ட்சில் இந்திய அணி, முதல் உலக கோப்பை கைப்பற்றியது. இதன் பின் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியது. 

இதன் பின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அசத்தியது. இதில் யார் சிறந்த கேப்டன் என்று பார்ப்பது தவறு. ஏனெனில், கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. இதில் கேப்டன்கள், வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், சிறந்த வீரர்களை உருவாக்கினால் தான், நல்ல முடிவு கிடைக்கும்.


ஒப்பிட வேண்டாம்:

இந்நிலையில், தோனியுடன் என்னை ஒப்பிட்டு பேசுகின்றனர். இது ஏன் என்று தான் தெரியவில்லை. என்னை அவருடன் ஒப்பிட முடியும் என்றே நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதை நான் நம்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்திருக்கும். 

தோனியை பொறுத்தவரையில் சிறப்பான கேப்டன். தனது பணியில் வியக்கத்தக்க சாதனைகள் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார். இன்னும் அவரிடம் ஏராளமான கிரிக்கெட் மீதமுள்ளது. 


பகட்டு இல்லாதவர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல தோனியும் இளம் வீரர்களை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறார். ரெய்னா, ஜடேஜா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தோனியால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான். 

இவரை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போலத் தெரியும். ஆனால், அவருக்குள் ஏராளமான நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். தேவையற்ற பரபரப்பு, பகட்டு இல்லாதவர். எது எப்படி இருப்பினும், இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளார்.


மீண்டும் கோப்பை:

வரும் 2015 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது முடிவு தான். இருப்பினும், இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம், தோனியின் மனதில் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

இன்னும் இளமையாக உள்ள இவர், அசத்தலான ஒருநாள் வீரர். இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக, தோனி இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. 

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

கேப்டன் பதவியில் டோனி சாதனை



சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. 

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 20 ஓவராக குறைக்கப்பட்டது. 50 ஓவர் போட்டி 20 ஓவர் போட்டியாக மாறியது. 

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. வீராட் கோலி 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ரவிந்திர ஜடேஜா 25 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரவி போபரா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், பிராட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடியது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து தொடக்கத்தில் சரிந்தது. 46 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது. 

5-வது விக்கெட்டான மார்கன்- போபரா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. 18 பந்தில் அந்த அணிக்கு 28 ரன் தேவைப்பட்டது. இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் தான் திருப்பு முனை ஏற்பட்டது. 

முதல் 2 பந்தில் 8 ரன் எடுத்தார். 3-வது பந்தில் மார்கனையும், 4-வது பந்தில் போபராவையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் (பட்லர், பிரெஸ்னென்) விழுந்தது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 15 ரன் தேவைப்பட்டது. 

அஸ்வின் கடைசி ஓவரில் 9 ரன்கள் கொடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. இதனால் 5 ரன்னில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 

மார்கன் 33 ரன்னும், போபரா 30 ரன்னும் எடுத்தனர். இஷாந்த்சர்மா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.12 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஜடேஜா ஆட்டநாயகன் விருதையும் தவான் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள். 

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ.2.40 கோடியும், 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.60 லட்சமும் கிடைத்தன. 

7-வது மற்றும் கடைசி இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு பரிசு தொகை கிடையாது. மொத்தம் ரூ.24 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் கேப்டன் பதவியில் டோனி புதிய சாதனை படைத்தார். ஐ.சி.சி.யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனையை டோனி படைத்தார். 

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் டோனி கைப்பற்றி இருந்தார். தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று உள்ளார். 

இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 5 ஆட்டத்தில் வென்று கோப்பையை வென்றது. ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சர்ச்சைக்கு பிறகு இந்திய அணி விளையாடிய முதல் போட்டித் தொடரிலேயே கோப்பையை வென்று பெருமை பட வைத்தது. இந்த பெருமை எல்லாம் கேப்டன் டோனிக்கு தான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.