தெண்டுல்கர்-காம்பளி ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டது


தெண்டுல்கரும், காம்பளியும் இணைந்து பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் குவித்தனர். 1988-ம் ஆண்டு தெண்டுல்கர் 14 வயதாக இருந்த போது காம்பளியுடன் இணைந்து இந்த சாதனையை படைத்தார். 

இந்த நிலையில் இந்த சாதனை ரன் எழுதி வைக்கப்பட்ட அதிகாரபூர்வ ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக பழமையாக இருக்கும் அதை மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் எரித்துள்ளது. 

பழைய தஸ்தா வேஜுகளை எரிக்கும் போது அந்த ஸ்கோர்ஷீட்டும் அதில் இருந்துள்ளது.

தோனி தான் சிறந்த கேப்டன்


இந்திய அணியை வழிநடத்த, மிகச் சரியான கேப்டன் தோனி தான்,'' என, முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், 38. கடந்த 1996ல் ஆமதாபாத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், கடைசியாக கடந்த ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். இதுவரை 134 டெஸ்ட் (8781 ரன்கள், 17 சதம், 56 அரைசதம்), 86 ஒருநாள் (2338 ரன்கள், 6 சதம், 10 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த லட்சுமண், திடீரென ஓய்வை அறிவித்தார். இதற்கு கேப்டன் தோனி தான் காரணம் என்று செய்திகள் வெளியாகின. தவிர, தனது வீட்டில் சக வீரர்களுக்கு லட்சுமண் கொடுத்த விருந்தில் தோனியை அழைக்காததும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லட்சுமண் கூறியது: 

தோனி சிறந்த வீரர். இந்திய அணியை வழிநடத்தும் தகுதியும், திறமையும் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, எனது வீட்டில் நடந்த "பார்ட்டி' குறித்து நாடு முழுவதும் பலதரப்பில் பேசப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும். அதன்பின் எனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஆஸ்திரேலிய பயணம் மிக மோசமாக அமைந்தது. அதன்பின், ஆறு மாதங்களாக ஓய்வு குறித்து ஆலோசித்து வந்தேன். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் என்னால் விளையாடி இருக்க முடியும். ஆனால் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில், திடீரென ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்க தொடருக்கு முன், இளம் வீரர்கள் குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டியிலாவது பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். ஓய்வை அறிவித்த மறுநாள், எனது மனைவி, "மிகச் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்', என்றார்.

இளம் வீரர்கள், டெஸ்ட் போட்டியில் விளையாட முன்வர வேண்டும். பணம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ஆனால் பணத்தை காட்டிலும் நாட்டிற்காக விளையாடுவது மேலானது. 

"டுவென்டி-20' போட்டியில் விளையாட தனி திறமை வேண்டும். குறைந்த பந்தில் அதிக ரன் எடுக்க, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும்.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.

விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்


வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.

கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம் பெற்றது. இதில் இங்கிலாந்து அணி, பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது. 

இதன் பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது. கடந்த 1998 காமன்வெல்த் போட்டியில் மட்டும் கிரிக்கெட் இடம் பெற்றது. 

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளில் ஏதாவது புதிய விளையாட்டு போட்டியை சேர்க்க முயற்சிகள் நடக்கும். இந்த வரிசையில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. 

இதை, கடந்த 2010ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) ஏற்றுக் கொண்டது. தவிர, ஐ.ஒ.சி.,யின் தலைவர் ஜாக்ஸ் ரோகியும், 2011ல் வரவேற்பு தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், இது கோரிக்கை அளவிலேயே இருந்து வருகிறது. இப்போது வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விண்ணப்பித்துள்ளது. 

இதுகுறித்து மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) உலக கிரிக்கெட் கமிட்டி வெளியிட்ட செய்தியில், " ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதை எம்.சி.சி., வரவேற்கிறது. 

கிரிக்கெட்டின் சிகரமான "டுவென்டி-20' போட்டி முறையில் இதை விளையாட வேண்டும். 

ஒருவேளை ஐ.ஒ.சி., ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஐ.சி.சி.,க்கு சற்று வருமான இழப்பு ஏற்படும். ஆனால், உலகளவில் கிரிக்கெட் பரவ வழி ஏற்படும்,' என, தெரிவித்துள்ளது.

சச்சின் சாதனையை தகர்த்தார் தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் தோனி, சச்சினின் சாதனையை தகர்த்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்காவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் தோனி முதலில், லியான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

அடுத்து பட்டின்சன் வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த தோனி, 224 ரன்கள் எடுத்த போது அவரிடமே சிக்கினார். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள்) பின்தள்ளி, தோனி முதலிடம் பிடித்தார். 

எதிர் முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ் குமார் (38) சிடில் வேகத்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 572 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. 

ஆஸ்திரேலிய அணிக்கு பட்டின்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து


ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 117 புள்ளிகளுடன் "நம்பர்-2' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (116 புள்ளி), தென் ஆப்ரிக்கா (112), இலங்கை (110), பாகிஸ்தான் (107) அணிகள் உள்ளன.

இப்பட்டியலில், முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு தென் ஆப்ரிக்க அணிக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் துவங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம். இதன்மூலம் ஏப்., 1ம் தேதி வெளியிடப்பட உள்ள ஐ.சி.சி., ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து, ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப் விருதுடன் பரிசு பெறலாம். இந்திய அணி, 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி 4-1 என தொடரை வெல்லும் பட்சத்தில், 117 புள்ளிகளுடன் 2வது இடத்தை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொள்ளும். தசமபுள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு 2வது இடம் கிடைக்கும்.

ஆம்லா முதலிடம்:

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ் முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். அடுத்த இரு இடங்களை இந்தியாவின் விராத் கோஹ்லி, கேப்டன் தோனி தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்தில் உள்ளார்.

அஷ்வின் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஒரு இடம் முன்னேறி, 13வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன், நியூசிலாந்தின் மில்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மற்றொரு இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, 9வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீன் அஜ்மல், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் உள்ளனர்.

ஹபீஸ் "நம்பர்-1':

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த நான்கு இடங்களை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இலங்கையின் மாத்யூஸ், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைத்துக் கொண்டனர்.