சென்னையில் 3-ந்தேதி ஐ.பி.எல். ஏலம்




6-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஓட்டலில் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. 

ஒப்பந்தம் முடிந்த வீரர்களும், ஐ.பி.எல். போட்டியில் ஆடாத வீரர்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

ஏலப்பட்டியலில் 101 வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் இந்த முறையும் ஏலப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், சமீபத்தில் ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடிப்படை விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கான ஆரம்ப விலை ரூ.2.12 கோடியாகும். இதில் கிளார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம். 

அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். அவரை மீண்டும் எடுக்க அந்த அணி ஆர்வத்துடன் உள்ளது. இதேபோல கிளார்க்கை ஏலத்தில் எடுக்க மும்பை அணியும் தீவிரமாக உள்ளது. அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று இருந்தார்.

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் விலை போவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. பாண்டிங் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடி இருக்கிறார்.

ஜான் போத்தா, கிப்ஸ், பிலாண்டர் (தென் ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச், ஹியூக்ஸ், மேத்யூ வாடே, ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், பொலிஞ்சர் (ஆஸ்திரேலியா), டாரன் பிராவோ, டாரன்சேமி (வெஸ்ட்இண்டீஸ்), ரவி போபரா (இங்கிலாந்து), மார்ட்டின் குப்தில், ரைடர் (நிïசிலாந்து), சண்டிமால், உபுல் தரங்கா, பிரசன்னா ஜெயவர்த்தனே (இலங்கை) போன்ற முன்னணி வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்ளில் ஆர்.பி.சிங், அபிஷேக் நாயர், மன்பிரீத் கோஸ், சுதிப் தியாகி ஆகியோரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர்


இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். 

அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம். 
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் "அதிரடி' விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியது:

"டாப்-3' அணிகள் எல்லாமே சமபலம் பொருந்தியவை தான். இந்த அணிகள் வாய்ப்பு கிடைத்தால் ஒன்றுக்கொன்று மற்ற அணிகளை எப்போது வேண்டுமானா<லும் வீழ்த்தி விடும். இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி சமீபத்தில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், இரு அணிகளும் விளையாட்டுக் களத்தில் ஆக்ரோஷமான போட்டியை வெளிப்படுத்தும். எதிரணியை மிரட்ட வேண்டும் என நினைத்தால், கடுமையாக போராட வேண்டும். தவிர, காரசாரமான மோதலும் தொடருக்கு வலுசேர்க்கும். 

"சுழல்' வேண்டும்:

அதேநேரம், இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் எனில், சுவான், பனேசர் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் அணிக்கு தேவைப்படும். 2004ல் ஆஸ்திரேலியா தொடரை வென்ற போது, சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், முக்கிய பங்கு வகித்தார். 

ஆனால், இப்போதைய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவர் எனத் தெரிகிறது. மொத்தத்தில், மந்தமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி செயல்பட போகின்றனர் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். 

சச்சினுக்கு மரியாதை:

ஒருநாள் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தான், அநேகமாக இவரது கடைசித் தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. உலக கிரிக்கெட்டில் இவருக்குள்ள மரியாதை என்றும் நிலைத்து இருக்கும். 

இவர் ஓய்வு பெற்றாலும், எங்கள் மக்களிடம் இருந்து எப்போதும் மரியாதை கிடைக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசின் உயரிய "ஆர்டர் ஆப் மெரிட்' விருது வழங்கப்பட்டதே இதற்கு சாட்சி.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

சேவக்கை தொடர்ந்து அபாய நிலையில் காம்பிர்


சேவக்கை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் காம்பிரும், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக 2010, சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் (116) அடித்தார். இதன் பின் விளையாடிய 26 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2012, ஜூலையில் இலங்கைக்கு எதிரான கொழும்பு போட்டியில் சதம் அடித்தார். இதன் பின் 9 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்றாலும், இரு அரைசதம் அடித்துள்ளார்.

இருப்பினும், சமீபத்தில் சேவக் நீக்கப்பட்டது போல, இவரது இடமும் அணியில் கேள்விக்குறியாகத் தான் உள்ளதாம். இப்போதைக்கு சரியான மாற்று வீரர் இல்லாததால் தான் காம்பிர் அணியில் நீடித்து வருகிறார். குறைந்தது டெஸ்ட் அணியில் இருந்தாவது நீக்க வேண்டும் என, ஓய்வு பெற்ற சீனியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

யார் மாற்று: 

சரி, காம்பிரை தூக்கி விட்டால் யாரை கொண்டு வருவது. முரளி விஜய், அபினவ் முகுந்த் ஏற்கனவே அணியில் இருந்து மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டவர்கள். ரகானேவும் ஏமாற்றுகிறார். உன்முக்த் சந்த்தும் இன்னும் "ரெடியாக'வில்லை. 

இந்நிலையில், வேறு வழியின்றி சமீபத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து வரும் முரளி விஜய் பக்கம் தான் காற்று அடிக்கிறது. ஒருவேளை காம்பிருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, "பார்ம்' திரும்பும் வரை காத்திருக்கலாம் என முடிவெடுத்தால், முரளி விஜய் நிலை தர்மசங்கடம் தான். 

தொடர்ந்து வாய்ப்பு: 

ஏனெனில், காம்பிர் சதம் தான் அடிக்கவில்லை தவிர, தொடர்ந்து 30, 40 ரன்கள் அடிப்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு இவருக்கு தேவை தன்னம்பிக்கை தான். ஏனெனில் "டாப்' வீரர்கள் அனைவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுவது சகஜம் தான். இதில் எப்படி மீண்டு வருகின்றனர் என்பது தான் முக்கியம். 

கடினம் தான்: 

காம்பிரை பொறுத்தவரையில் துணிச்சலான அணுகுமுறையின் மூலம் தான் மீண்டு வர முடியும். சமீபத்தில் கேப்டன் பதவியை குறிவைத்து இவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. கோல்கட்டா டெஸ்ட் போட்டிக்கு முன், காம்பிர் மீது அணியின் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) புகார் தெரிவித்தார் என செய்திகள் வெளியானது. 

இதையெல்லாம் மறந்து, முதலில் அணிக்கு தேவையான ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், அணியில் இடத்தை தக்கவைப்பதே கடினம் தான். 

இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம்


இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம். சுமாரான அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணிக்கு "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பையை வென்று தந்தவர் தோனி. இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய தோனி, 77ல் வென்று, அதிக வெற்றிகள் பெற்றுத்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். 

இதுகுறித்து ஜெப்ரி பாய்காட் கூறியது:

இந்திய அணியை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் சுமாராகத்தான் உள்ளது. வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. தவிர, டிராவிட், லட்சுமண் சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டனர். சச்சினும் அதிகமான ரன்களை சமீபத்தில் எடுக்கவில்லை. 

இதெல்லாம் தோனிக்கு பாதகமானவை. இந்நிலையில், தோனி குறித்து வழக்கமான முறையில் முடிவு செய்வது தவறு. என்னைப் பொறுத்தவரையில் இவர், இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் தான். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், தோனியை நீக்க முடிவெடுத்தாலும், இவருக்கு மாற்றாக யாரும் இல்லை. 

ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை நிர்வகிக்கும் தலைமைப் பண்பு, இவரிடம் அசத்தலாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில், இது சற்று குறைவாக உள்ளது. இதற்காக இவரை மாற்றுவது என்பது முடியாத காரியம். 

மிகவும் கடினம்: 

பொதுவாக அணி தோற்கும் போது, கேப்டனைத் தான் குற்றம் சொல்வர். தோற்கும் கேப்டனை வெளியேற்றுவது தான் வழக்கம். இப்போதுள்ள நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியை குறைசொல்ல முடியாது. டிராவிட், லட்சுமண், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் அணியில் இல்லை. சச்சினும் ஓய்வு முடிவில் உள்ளார். இவர்களுக்கு மாற்று வீரர்களை கண்டறிவது மிகவும் கடினம். 

தோனியின் தவறல்ல:

 இது தோனியின் தவறல்ல. அவரை குற்றம் சொல்லும் முன், அணியின் தரத்தை கவனத்தில் கொண்டு பேச வேண்டும். அதிரடி துவக்க வீரர் சேவக் நீக்கம், மற்றொரு வீரர் காம்பிர் தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் சேர்க்கப்படுகிறார். அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பதால் சோர்ந்துள்ள அவர், தானாக முன்வந்து விலகினால் நல்லது. 

கோஹ்லி "நோ': 

இந்திய அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி வரலாம் என்றாலும், இதற்கு இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் பொறுமையும் தேவைப்படும். இவ்விஷயத்தில் இவர் தோனியிடம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். கோஹ்லியிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவ்வப்போது பொறுமை இழந்து விடுகிறார். கேப்டன் என்பவர் எந்நிலையிலும் இதை இழக்கக் கூடாது. ஏனெனில், இவரை வைத்து தான் அணியை மதிப்பீடு செய்வர். 

இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறினார்.

பங்கேற்பது சந்தேகம்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி தொடரை 3-1 என வென்றது. ஐந்தாவது போட்டி தரம்சாலாவில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. 

இதில், இந்திய கேப்டன் தோனி பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பயிற்சியின் போது வலது கை பெருவிரலில் பந்து தாக்கிய போதும், மூன்றாவது, நான்காவது போட்டியில் கலந்து கொண்டார். காயத்தின் தன்மையை அதிகப்படுத்த விரும்பாத தோனி, ஐந்தாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. 

இதுகுறித்து தோனி கூறுகையில்,"" இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்று விட்டது. இதனால், கடைசி போட்டியில் விளையாடுவதா, இல்லையா என்பது குறித்து தேர்வாளர்களுடன் பேசவுள்ளேன்,'' என்றார்.

வரலாறு படைத்தது நியூசிலாந்து


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கிம்பர்லியில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி "பீல்டிங்' தேர்வு செய்தார். 

கப்டில் ஏமாற்றம்: 

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்டில் "டக்' அவுட்டானார். வாட்லிங் (12) நிலைக்கவில்லை. பின் இணைந்த வில்லியம்சன், எலியட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. எலியட் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் ஒருநாள் அரங்கில் 3வது சதம் எட்டினார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (17) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் நாதன் மெக்கலம் (19), மில்ஸ்(15)கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் (145) அவுட்டாகாமல் இருந்தார்.

 ஸ்மித் அரைசதம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குவின்டன் டிகாக் (25) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மித், இங்ராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் (66) தனது 47வது அரைசதத்தை பதிவு செய்தார். இங்ராம் (79) தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பெகார்டின் (31), மார்னே மார்கல் (19*) ஓரளவு கைகொடுத்தனர். 

மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. தென் ஆப்ரிக்க அணி 49.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, புதிய வரலாறு படைத்தது. 

முன்னதாக 2000-01, 2005-06, 2007-08ல் தென் ஆப்ரிக்கா சென்ற நியூசிலாந்து அணி, தொடரை இழந்து ஏமாற்றியது.