மும்பை அணியில் சச்சின் மகன்


14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் இந்திய அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின்,39. இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர், 13. இவர், ஆமதாபாத்தில், ஜன.20 ம் தேதி முதல் பிப்.1 ம்தேதி வரை நடக்கவுள்ள, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டல லீக் தொடரில், மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி தேர்வுக்கான பயிற்சியில் சதம் அடித்தார். 

ஏற்கனவே இவர், கோரெகான் சென்டர் அணிக்கு எதிரான போட்டியில் சதம் (124 ரன்கள், 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்து கார் ஜிம்கானா அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 

இடது கை பேட்ஸ்மேனான இவர், 2011 ஆண்டில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். 

டெல்லி போட்டியில் டோனிக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்ததால் சர்ச்சை




பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டெல்லியில் நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி 10 ரன்னில் வென்று ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப்போட்டியில் இந்தியாவின் அதிக ஸ்கோராக டோனி 36 ரன் எடுத்தார். உமர்அக்மலை ஸ்டம்பிங் செய்தார். அஜ்மல் கேட்சை பிடித்தார். ஆனால் மிஸ்பா கேட்சை தவறவிட்டார்.

அந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், புதுமுக வீரர் புவனேஸ்குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர். அதோடு பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 5 விக்கெட் எடுத்தார். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு 36 ரன் எடுத்த டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்தது ஆச்சரியத்தை அளித்தது.

டெலிவிசன் வர்னணையாளர்கள்தான் ஆட்ட நாயகன் விருதுக்கான வீரரை தேர்வு செய்வார்கள். வர்னணையாளராக இருக்கும் முன்னாள் வீரர் ஒருவர்தான் டோனியை ஒருமனதாக தேர்வு செய்து உள்ளார்.

சமீப காலங்களில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விகளால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவரது மன உறுதியை அதிகரிக்கவே இந்த ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டோனிக்கு சாதகமாக இருந்த அந்த முன்னாள் வீரர் யார் என்று தெரியவில்லை.

ஆட்டநாயகன் விருது விவகாரத்தில் பாகிஸ்தானும் அதிருப்தி அடைந்துள்ளது. சென்னையில் நடந்த போட்டியில் சதம் அடித்து வெற்றி பெற வைத்த ஜாம்ஷெட்டுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காமல் டோனிக்கு வழங்கியதால் அதிருப்தி அடைந்துள்ளது. 

வெற்றி பெற்ற அணி வீரருக்குதான் விருது வழங்கி இருக்க வேண்டும் என்று அந்த அணி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

காமெடி போட்டியா? - சூதாட்டத்தில் சிக்கியது டில்லி மோதல்


டில்லி ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றது,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பால் நிக்சன் சந்தேகம் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியன. முதலிரண்டு போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, தொடரை 2-0 என ஏற்கனவே வென்றது. 

முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்தது. 

இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 34 ஓவரில் 113 ரன்களுக்கு 4 விக்கெட், என வலுவான நிலையில் இருந்தது. 

ஆனால், கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 38 ரன்களுக்கு இழந்து, அதிர்ச்சி அளித்தது. இறுதியில் 157 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என பால் நிக்சன்,42 சந்தேகம் கிளப்பியுள்ளார். இதுகுறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் இவர் வெளியிட்ட செய்தி:

 டில்லி போட்டியில் பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றது. இப்போட்டியை பார்ப்பதற்கு ஒரே "காமெடியாக' இருந்தது. உதாரணமாக "லெக் ஸ்லிப்பில்' பீல்டர் இருந்த நிலையில் முகமது ஹபீஸ், "ஸ்வீப் ஷாட்' அடித்து அவுட்டானார். 

இந்தியா சார்பில் 12வது வீரராக யாரோ விளையாடியுள்ளார். அவர் சூதாட்ட "புக்கியாக' இருக்கலாம். ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட பாகிஸ்தான் அணிக்கு, மூன்றாவது போட்டியில் தோற்பது ஒரு பிரச்னையே அல்ல. இதனால் தான் இந்தியா வென்றது. 

இவ்வாறு பால் நிக்சன் கூறினார்.

உள்ளூர் சூதாட்டம்:

 கடந்த ஜூன் மாதம் பால் நிக்சன் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில்," கடந்த 2010ல் இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் "டுவென்டி-20' தொடரில், போட்டியில் தோற்க "கே' என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவர் ரூ. 27 கோடி வரை தர முன்வந்தார்,' என, சர்ச்சை கிளப்பி இருந்தார். இப்போது, பாகிஸ்தான் போட்டி குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

பாக்., பயணம்: பி.சி.சி.ஐ., மறுப்பு

 இந்திய அணி, பாகிஸ்தான் வர வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" கடந்த 2009க்குப் பின், இதுவரை எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை. 

அங்குள்ள மைதானங்களின் நிலை என்ன என, யாருக்குத் தெரியும். முதலில் ஆஸ்திரேலிய அணியை அழைத்து போட்டிகளை நடத்தட்டும். அப்புறம் அங்கு செல்வது குறித்து முடிவெடுப்போம்,'' என்றார்.

சச்சின் 80வது சதம் - ரஞ்சியில் அசத்தல்


பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் சச்சின், வாசிம் ஜாபர் சதம் அடித்து கைகொடுக்க, மும்பை அணி நல்ல ஸ்கோரை நோக்கி முன்னேறுகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று துவங்கின. மும்பையில் துவங்கிய காலிறுதியில் மும்பை, பரோடா அணிகள் விளையாடுகின்றன.

மீண்டும் சச்சின்: 

சமீபத்தில், சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், மும்பை அணியில் இடம் பிடித்தார். "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் அஜித் அகார்கர், பேட்டிங் தேர்வு செய்தார்.

ஜாபர் அபாரம்:  

மும்பை அணிக்கு கவுஸ்துப் பவார் (8), ஹிகன் ஷா (9) ஏமாற்றினர். பின் வாசிம் ஜாபர், சச்சின் ஜோடி அசத்தியது. ரஞ்சி கோப்பை தொடரில் தனது 31வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், ரஞ்சி தொடரில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்த போது சச்சின் (108) அவுட்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. ஜாபர் (137) அவுட்டாகாமல் இருந்தார். 

சாதனை நோக்கி...

இந்தியாவில், முதல் தர போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள கவாஸ்கர் சாதனையை(81) சச்சின் நெருங்குகிறார். நேற்று அசத்திய இவர் தனது 80வது சதத்தை எட்டினார். சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதம் அடித்துள்ளார்.

* ரஞ்சி கோப்பை தொடரில் கவாஸ்கர் 20 சதம் அடித்துள்ளார். சச்சின், 18 சதம் அடித்துள்ளார்.

இரண்டாவது சதம்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த சச்சின், இந்தி சீசனில் (2012-13) இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடிய சச்சின் 137 ரன்கள் எடுத்தார். இப்போட்டி "டிரா' ஆனது.

கடைசி நேர பரபரப்பு - பாகிஸ்தான் தோல்வி



இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்று ஆறுதல் வெற்றி கிடைத்தது. பாகிஸ்தான் ஜெயிக்கும் என்ற கோணத்தில் போய்க்கொண்டிருந்த போது கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 

140 க்கு மேல் ரன் எடுத்த போது இந்திய வீரர்கள் விக்கெட்டை சரித்து பாகிஸ்தானை தோல்விக்கு தள்ளினர். 


பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 43 .4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.



இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டுவென்டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் 1-1 என சம நிலையில் முடிந்தது. 

சென்னை மற்றும் கோல்கட்டாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியினருக்கு அந்நாட்டு அதிபர் சர்தாரி பரிசு அறிவித்துள்ளார்.



இந்த நிலையில் டில்லியில் நடக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி முனைப்பு காட்டியது.



இன்று டில்லியில் நடக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனி ,முதுகுவலி காரணமாக பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் தோனி பங்கேற்றார்.



இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியிலிருந்து சேவக், திண்டா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ரஹானே, ஷமி அகமது ஆகியோர் இடம்பெற்றனர்.



தொடர்ந்து இந்திய அணி துவக்க வீரர்களாக காம்பீரும், ரஹானேயும் களமிறங்கினர். சேவக் பதில் களமிறங்கிய ரஹானே, நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 11 பந்துகளை சந்தித்த ரஹானே 4 ரன்னில் முகமது இர்பான் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லியும், 17 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஜூனாயத் கான் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். 

இதன் பின்னர் காம்பீர் முகமது இர்பான் பந்தில் 15 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரம் விளையாடிய யுவராஜ் சிங்கும் 23 பந்தில் 23 ரன்களில் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா, 60 பந்துகளில் 31 ரன்கள் மட்டும் எடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்த வந்த அஸ்வினும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 



கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேப்டன் தோனி, இந்த முறை 55 பந்துகளில் 36 ரன்னிலும், புவனேஸ்வர் குமார் 2 ரன்களிலும் அவுட்டானார்கள். 

இறுதியில் இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேப்டன் தோனி, இந்த முறை 55 பந்துகளில் 36 ரன்னிலும், புவனேஸ்வர் குமார் 2 ரன்களிலும் அவுட்டானார்கள். இறுதியில் இந்திய அணி 43.4 ஓவரிகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.