தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது


தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது, 

இந்திய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றார். 

ஆஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2-வது இந்தியர் தெண்டுல்கர் ஆவார். 

இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொரப்ஜி இந்த விருதை பெற்றார். 

ஆஸ்திரேலிய மந்திரி சைமன் இந்தியா வரும்போது தெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும். 

இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆவார். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு கிளைவ் லாயிடும், 2009-ம் ஆண்டு பிரைன் லாராவும் (வெஸ்ட்இண்டீஸ்) இந்த விருதை பெற்றனர். 

தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார்.

2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கம் - சச்சின் அதிரடி


இந்திய விளையாட்டு அரங்கில் திட்டமிட்டு மாற்றங்களை செய்தால், 2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை கைப்பற்றலாம்,''என, சச்சின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் சச்சின். சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவர், விளையாட்டில் இந்தியா முன்னேற்றம் அடைய வகுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதில், சச்சின் கூறியிருப்பதாவது: 

பாடத்திட்டத்தில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். ஹாக்கியில் தயான்சந்த் நிகழ்த்திய சாதனைகள் பற்றி படிக்கும் போது, விளையாட்டின் மீதான மோகம் அதிகரிக்கும். 
சமீபத்திய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றது. தொடர்ந்து சில அடிப்படை மாற்றங்களை செய்தால், 2014 ல் 12 பதக்கங்கள் அல்லது 2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை கைப்பற்றலாம். இது ஒன்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது அல்ல. திட்டமிட்டு செயல்பட்டால், நிச்சயமாக இலக்கை எட்டலாம். 

கிரிக்கெட் வளர்ச்சிக்காக பெங்களூருவில் தேசிய பயிற்சி அகாடமி துவங்கப்பட்டது. இது, வீரர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. இதே போல அரியானாவில் குத்துச்சண்டை, மல்யுத்த போட்டிகளுக்கு என்று தனியாக பயிற்சி மையங்களை அமைக்கலாம். 

அமெரிக்க பல்கலை., கல்லூரிகளில் விளையாட்டை மேம்படுத்த சிறப்பான திட்டம் உள்ளது. இதன் மூலம் நிறைய ஒலிம்பிக் வீரர்கள் உருவாகின்றனர். இதனை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே எனது கனவு. 

பெரும்பாலான இளைஞர்களிடம் "மொபைல் போன்' உள்ளது. இதன் மூலம் விளையாட்டு திறனை கண்டறியலாம். தங்களது சாதனைகள் குறித்து எஸ்.எம்.எஸ்., அல்லது எம்.எம்.எஸ்., அனுப்பலாம். 

இவற்றை நிபுணர்கள் ஆய்வு செய்து, திறமையானவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கலாம். இவ்வாறு சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

அசத்துமா சென்னை கிங்ஸ்? - இன்று சிட்னி அணியுடன் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்றைய லீக் போட்டியில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

தோனிக்கு சிக்கல்:

சென்னை அணிக்கு தோனி தான் பலம். ஆனாலும், "டுவென்டி-20' உலக கோப்பையில் இந்திய அணி சோபிக்கத் தவற, கேப்டன் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்தச் சூழலில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துவக்கத்தில் முரளி விஜய், டுபிளசி, மைக்கேல் ஹசி அசத்த வேண்டும். ரெய்னா, பத்ரிநாத் பொறுப்பாக விளையாடினால் நல்லது. 

தென் ஆப்ரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் போலிஞ்சர், ஹில்பெனாஸ், ஆல்பி மார்கல் மிரட்டலாம். "சுழலில்' அஷ்வின் "பார்ம்' கவலை அளிக்கிறது. இவர் விரைவில் எழுச்சி காண வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

விளாசல் வாட்சன்:

சிட்னி சிக்சர்ஸ் அணி, சென்னைக்கு கடும் சவால் கொடுக்கும். "பிக் பாஷ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணியின் மிகப் பெரும் பலம் "ஆல்-ரவுண்டர்' வாட்சன் தான். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இவர், இங்கும் அசத்தலாம். நாதன் மெக்கலம், கேப்டன் பிராட் ஹாடின் போன்றோர் அதிரடியாக ரன் சேர்க்கலாம். பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க் கைகொடுப்பர். 

சென்னை அணி, வாட்சனை விரைவில் கட்டுப்படுத்தி விட்டால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம். 

சாதிக்குமா மும்பை அணி 

இன்று நடக்கும் மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ், தென் ஆப்ரிக்காவின் ஹைவெல்டு லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

மும்பை அணியின் எதிர்பார்ப்பு சச்சின் தான். ஆனாலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று முறை "போல்டான' இவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். 

இவர் வலுவான துவக்கம் தந்தால் நல்லது. கேப்டன் ஹர்பஜன் சிங் "சுழலில்' நம்பிக்கை அளிக்கிறார். "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் சொதப்பிய "வேகப்புயல்' மலிங்கா எழுச்சி பெற வேண்டும். "ஆல்-ரவுண்டர்' போலார்டு இருப்பது கூடுதல் பலம்.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் லயன்ஸ் அணி களமிறங்குகிறது. குலாம், ஆல்விரோ பீட்டர்சன், கிறிஸ் மோரிஸ் அசத்தலாம். பந்துவீச்சில் பாகிஸ்தானின் சோகைல் தன்விர் சவால் தரலாம். 

சேவக்-காம்பிர் நேருக்குநேர் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் இன்று காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. டில்லி சார்பில் சேவக் களமிறங்குவதால், அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் பிரதான சுற்று இன்று துவங்குகிறது. இரவு நடக்கும் லீக் போட்டியில் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, ஜெயவர்தனாவின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது. 

காம்பிர் அபாரம்:

சமீப காலமாக இந்தியாவுக்காக சொதப்பும் காம்பிர், கோல்கட்டா அணிக்காக அசத்துவது ஆச்சரியமான விஷயம். கோல்கட்டா அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, பேட்டிங்கில் மட்டுமன்றி அணியின் வெற்றிக்குத் தேவையான திட்டங்களையும் சரியாக வகுக்கிறார். 

இவருக்கு தென் ஆப்ரிக்க "ஆல் ரவுண்டர்' காலிஸ், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். தவிர, மனோஜ் திவாரி, யூசுப் பதானும் பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். சென்னைக்கு எதிரான பைனலில் 48 பந்தில் 89 ரன்கள் எடுத்த, மன்விந்தர் பிஸ்லாவும் அதிரடியை தொடரலாம்.

பாலாஜி நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சில் பிரட் லீ, காலிஸ் ஆகியோருடன் பாலாஜியின் துல்லியமான கடைசி நேர பவுலிங்கில் அணிக்கு வெற்றி தரலாம். ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன், மீண்டும் பந்தை சுழற்ற காத்திருக்கிறார். 

சேவக் தயார்:

டில்லி அணிக்கு இம்முறை கேப்டன் பொறுப்பை, இலங்கையின் ஜெயவர்தனா ஏற்றுள்ளார். இதனால், சேவக் பேட்டிங்கில் வேகமாக ரன்கள் சேர்ப்பார் எனத் தெரிகிறது. பீட்டர்சன், ராஸ் டெய்லர், வார்னரும் அணியில் உள்ளது கூடுதல் பலம். தவிர, உன்முக்த் சந்த், இர்பான் பதான், நமன் ஓஜாவும் உள்ளனர்.

மார்கல் மிரட்டல்:

தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்லி அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அகார்கர் ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது உறுதி. சுழலில் பவான் நேகி நம்பிக்கை தரலாம்.

வெற்றி யாருக்கு:

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் என்பதால், தொடரை வெற்றியுடன் துவக்குவது, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை எளிதாக்கும். இதனால் இரு அணிகளும் களத்தில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.

யார் ஆதிக்கம்

கோல்கட்டா, டில்லி அணிகள் ஐ.பி.எல்., தொடரில் 9 முறை மோதியுள்ளன. இதில் டில்லி அணி 4ல் வென்றது. கோல்கட்டா அணி 5 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
* சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவ்விரு அணிகள் மோதுவது இதுவே முதன் முறை.


டைட்டன்ஸ்-பெர்த் பலப்பரீட்சை

செஞ்சுரியன்: இன்று நடக்கும் மற்றொரு மோதலில் டைட்டன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி டைட்டன்ஸ். அணியின் கேப்டன் ஜார்ஸ்வெல்டு, பெகர்டியன், ருடால்ப், வான் டர் மெர்வி ஆகியோர் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன், அசத்த முயற்சிக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் நடந்த "பிக்-பாஷ்' தொடரில் இரண்டாவது இடம் பெற்ற அணி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ். தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் கோலிங்வுட்டுடன் ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் சகோதரர்கள், கேப்டன் மார்கஸ் நார்த்துக்கு உதவ தயாராக உள்ளனர். பவுலிங்கில் ரிம்மிங்கடன், மெனியே, அனுபவ பிராட் ஹாக் இருப்பது பலம்.

சாம்பியன்ஸ் லீக் - சேவக் விளையாடுவாரா?


காயத்தில் இருந்து மீண்டு, உடற்தகுதி பெற்ற சேவக், சாம்பியன்ஸ் லீக் தொடரில் டில்லி அணிக்காக முழுமையாக விளையாடுகிறார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். சமீபத்தில் முடிந்த, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியின் போது கணுக்கால் தசையில் காயம் அடைந்தார். 

இதனால், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இவரது காயத்துக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டது. நாளை துவங்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோல்கட்டா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இத்தொடரில் முழுமையாக விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. 

டில்லி அணியின் அதிகாரி ஒருவர் வெளியிட்ட செய்தியில்," சேவக் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால், சாம்பியன்ஸ் லீக் தொடரின் அனைத்து போட்டியிலும் பங்கேற்பார்,' என்றார். 

பயிற்சியில் ஏமாற்றம்:

நேற்று சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியில் சேவக் களமிறங்கினார். ஜோஷ் ஹாஸ்லேவுட்டின் "யார்க்கரை' சமாளிக்க முடியாமல், சேவக் "டக்' அவுட்டாக, டில்லி அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதில் டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் ஓய்வு காரணமாக துவக்க வீரர் வார்னர் பங்கேற்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு செல்ல இருந்த காரணத்தினால், கேப்டன் ஜெயவர்தனாவும் களமிறங்கவில்லை.