சுஷில் குமாருக்கு சச்சின் பாராட்டு

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவருக்கு சச்சின், சேவக் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் "டுவிட்டர்' இணையதளம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சச்சின்: நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சுஷில் குமாரின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் விடாமுயற்சியை நினைத்து பெருமை அடைகிறோம்.

சேவக்: உலக சாம்பியனை போன்று மகத்தான மனவலிமையை சுஷில் குமார் வெளிப்படுத்தினார். இவர் வென்ற பதக்கத்தினால் பெருமை கொள்கிறோம்.

யுவராஜ் சிங்: தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றுள்ளார். இதன் மூலம் திறமையான வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

ரெய்னா: மல்யுத்தத்தில் சுஷில் குமார் வென்ற வெள்ளி ஒன்றும் தங்கத்தை விட குறைந்தது
கிடையாது. உடல் நலன் பாதிக்கப்பட்ட போதும், துணிச்சலாக போராடி பதக்கம் வென்றார்.

தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

முதல் முறையாக இந்தியாவுக்கு 6 பதக்கம்

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபதக்கம் பெற்று சாதனை படைத்தது.

இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றதே அதிக பதக்கமாக இருந்தது. முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்து உள்ளது.

துப்பாக்கி சுடுதலில் விஜய்குமாரும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரீஸ்டைல்) வெள்ளிப்பதக்கம் பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் (10 மீட்டர் ஏர்ரைபிள்), பேட்மின்டனில் சாய்னா நேவால் (பெண்கள் ஒற்றையர்), குத்துச்சண்டையில் மேரிகோம் (பிளைவெயிட்), மல்யுத்தத்தில் யோகஸ்வர் தத் (60 கிலோ பிரிவு) ஆகியோர் வெண்கலபதக்கம் பெற்றனர்.

81 பேர் கொண்ட இந்திய அணிக்கு 6 பதக்கம் கிடைத்தது. எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத அளவுக்கு இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் பெற்றாலும் தங்கம் கிடைக்காதது சற்று ஏமாற்றமே.

நேற்றைய கடைசி நாளில் சுசில்குமார் இறுதிப்போட்டியில் வென்று தங்கம் கைப்பற்றி இருந்தால் இதைவிட பெருமை அதிகமாக இருந்து இருக்கும். இடவரிசையில் 41-வது இடத்தை பிடித்து இருக்கலாம். தற்போது 55-வது இடத்தை பிடித்து இருக்கிறோம்.

வில்வித்தை, டென்னிஸ், ஆக்கி ஆகிய போட்டிகள் இந்தியாவுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. உலகின் நம்பர் ஒன் வில் வித்தை வீராங்கனையான தீபிகாகுமாரி முதல் சுற்றிலேயே வெளியேறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

டென்னிஸ் போட்டியில் வீரர்கள் சாதிக்காதது வருத்தமே. போட்டி தொடங்கும் முன்பு டென்னிஸ் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஆக்கியில் மிகவும் பரிதாப நிலையில் உள்ளோம்.

தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் தோற்று இந்திய அணி கடைசி இடமான 12-வது இடத்தை பிடித்தது. ஒரு வெற்றிகூட பெற இயலாதது ஏமாற்றமே.

வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில்குமார் - இந்தியாவுக்கு 6வது பதக்கம்

ஒலிம்பிக்போட்டி நிறைபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.


சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.


விறுவிறுப்பான அரையிறுதி பலப்பரீட்சையில், சுஷில்குமார் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். இதில் 3-0, 03, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தங்கம் வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனை நடந்தது.


தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.


இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்திய ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக்கில் கடைசி இடம்

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு மிகப் பெரும் தலைகுனிவு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கடைசி (12) இடம் பெற்று ஏமாற்றியது.

ஒலிம்பிக் ஹாக்கியில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைமிக்கது இந்திய அணி. எட்டு ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக கோல் கீப்பர் கேப்டன் பரத் சேத்ரி தலைமையில் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

"பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா மற்றும் பெல்ஜியம் என, பங்கேற்ற ஐந்து லீக் போட்டியிலும் தோல்வியடைந்தது.

நேற்று நடந்த 11 அல்லது 12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆன்ட்ரூ குரோன்யே முதல் கோல் அடித்தார்.

14வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிய சற்று (34வது நிமிடம்) முன்பாக, தென் ஆப்ரிக்காவின் டிமோத்தி ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-2 என பின்தங்கியது.


ஆறாவது தோல்வி:

இரண்டாவது பாதியில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை, "பினிஷிங்' திறமை இல்லாத இந்திய வீரர்கள் வீணடித்தனர். 65வது நிமிடம் லாய்டு ஜோன்ஸ் ஒரு கோல் அடிக்க, தென் ஆப்ரிக்கா அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடத்தில் (67 வது) தரம்வீர் சிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

முடிவில், இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதன் மூலம், இத்தொடரில் தொடர்ந்து ஆறாவது தோல்வியை சந்தித்து, கடைசி இடம் பிடித்தது.


மோசமான இடம்:

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக (1928, 32, 36, 48, 52, 56, 64, 1980) 8 முறை தங்கம் வென்றது. தவிர, 1960ல் வெள்ளி, 1968, 72ல் வெண்கலம் வென்றுள்ளது. இதன் பின் 1984ல் 5வது, 1988ல் 6, 1992ல் 7, 1996ல் 8, 2000, 2004ல் 7வது இடம் பெற்றது.

தற்போது தான் முதன் முறையாக இந்திய அணி, கடைசி (12வது) இடம் பெற்றுள்ளது. தவிர, ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்தியா திரும்புவதும் இது தான் முதன் முறை.


ராசியில்லாத லண்டன்:

ஏற்கனவே லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் (1948) இந்திய அணி தங்கம் வென்று திரும்பியது. இதன் பின் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் ராசியில்லை போல. 1986ல் நடந்த உலக கோப்பை தொடரில் கடைசி இடம் பெற்ற இந்திய அணி, மீண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணிக்கு கடைசி இடம்

இந்திய அணி 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்த முறை தகுதி பெற்றது. ஆனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறக் கூடிய 5 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று 11-வது மற்றும் 12-வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இதிலும் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இவ்வாறு அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் 8-வது இடத்தைப் பிடித்ததே இதற்கு முந்தைய குறைந்த நிலையாகும்.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் தரம், ஒலிம்பிக் அரங்கில் இவ்வளவு மோசமான நிலைக்கு பின்தங்கியது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.