பிரெஞ்ச் ஓபன்: வரலாறு படைத்தார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால். நேற்று நடந்த பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், "நம்பர்-2 இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடாலை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் நடால் 6-4, 6-3, 2-6, 1-2 என முன்னிலை வகித்திருந்த போது, மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் ஆட்டம் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய நடால், 4வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக (2005-08, 2010-12) சாம்பியன் பட்டம் வென்றார்.

தோனிக்கு டிராவிட் ஆதரவு

ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் முத்திரை பதித்த தோனியால் டெஸ்டில் சாதிக்க இயலவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 8 டெஸ்டிலும் தோற்றதால் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தோனி கழற்றி விடப்படுவார் என்று கூறப்படுகிறது.

டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்க தான் தயாராக இருப்பதாக காம்பீர் கூறி இருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவி தொடர்பாக தோனிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சென்னையில் நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிசன் போட்டியில் விஜய் கிளப் (இந்தியா சிமெண்ட்ஸ்) அணியில் ஆடினார்.

அப்போது டிராவிட் இது தொடர்பாக கூறியதாவது:-

கேப்டன் பதவியில் தோனி சிறப்பாக செயல்படுகிறார். அவரது தலைமையில்தான் இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. உலக கோப்பையை வென்றது. வெற்றிக்கும், தோல்விக்கும் அணியின் செயல்பாடுதான் காரணம். டோனிக்கு இது மிகவும் சவாலான காலமாகும். ஆனால் தோல்வியில் இருந்து அவர் பல பாடங்களை கற்று வெற்றியை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

டெஸ்ட் கேப்டனான அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். டெஸ்டில் எனது இடத்தை நிரப்புவது யார் என்பதற்கு ஒருவரின் பெயரை மட்டும் கூற விரும்பவில்லை. அது நல்லதும் அல்ல. தற்போது உள்ள இளம் வீரர்கள் திறமையானவர்கள். இளம் வீரர்களில் 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். அவர்களில் ஒருவர் எனது இடத்தை நிரப்பலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு மிடில் ஆர்டர் வரிசை காரணமாகும். இதனால் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் சிறப்பானதாகும். 3-ம் நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) ஆடக்கூடிய திறமை தெண்டுல்கர், ஷேவாக், காம்பீரிடம் உள்ளது. இளம் வீரர்களுக்கு இவர்கள் வழிகாட்டி ஆவார்கள்.

இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.

வேண்டாம் அரசு பங்களா: சச்சின் எம்.பி., திடீர் முடிவு

எம்.பி., யாக இருப்பதே கவுரவம் தான். டில்லியில் தங்குவதற்கு அரசு பங்களா வேண்டாம். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும்,'' என, தெரிவித்துள்ளார் சச்சின்.

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றார்.

இவருக்கு டில்லியில் காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு எதிரே, பங்களா ஒதுக்கப்பட்டது. இதை சச்சின் ஏற்க மறுத்துள்ளார். அவர் கூறியது:

நான் டில்லிக்கு வந்து தங்குவது சில நாட்கள் தான். எப்போது டில்லி வந்தாலும் ஓட்டலில் தங்குவதற்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன்.

எம்.பி., ஆகி விட்டேன் என்பதற்காக, சில நாட்கள் தங்குவதற்கு, அரசு பங்களா வேண்டாம். இதில் எனக்கு விருப்பமும் இல்லை.

இதுபோன்ற செயல்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் என நினைக்கிறேன். யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஒதுக்கினால் நல்லது.

என்னைப் பொறுத்தவரை எம்.பி.,யாக இருப்பதே கவுரம். இதற்காக கொடுக்கப்படும் சலுகைகள், உரிமைகள் முக்கியமல்ல.

பங்களாவை ஏற்க மறுத்தது, எனது பொறுப்புகளை பாதிக்காது. பார்லிமென்ட்டின் ஒவ்வொரு
கூட்டத்தொடரின் போதும், சில நாட்கள் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

டெஸ்டில் மீண்டும் நம்பர்1 இடத்தை பிடிப்போம் - காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான காம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மீண்டும் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. பாகிஸ்தானுடன் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆஸ்திரேலியா அல்லது வங்காளதேசத்துடன் எப்படி விளையாடுகிறோமோ அதுபோல தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் ஆகும்.

எந்த அணி என்பது முக்கியமல்ல. நாட்டுக்காக ஆடுகிறேன் என்பது முக்கியமானது. இந்திய அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் சமமானவர்கள். நாட்டுக்காக விளையாடும் போது ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

கேப்டன் பதவியை ஏற்க நான் தயாராக இருப்பதாக கூறி இருந்தேன். கேப்டன் பதவி குறித்து தேர்வு குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும். கேப்டன் பதவிக்கு என்னை தேர்வு செய்வேன் என்று டோனி கூறியது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 4 டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டிலும் விளையாடுகிறது. நீண்ட ஓய்வுக்கு பிறகு டெஸ்டில் ஆடுவதால் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்திய அணி திறமை வாய்ந்தது. இதனால் டெஸ்டில் மீண்டும் “நம்பர் 1” இடத்தை பிடிப்போம்.

இவ்வாறு காம்பீர் கூறினார்.

அர்ஜுனா விருதை இழந்த யுவராஜ், கோலி

உலகக் கோப்பையை வென்றபோதிலும் அர்ஜுனா விருது பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், கடந்த ஆண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆகியோர் அர்ஜுனா விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) யாருடைய பெயரையும் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.

இதற்கான கடைசித் தேதியும் நிறைவடைந்துவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சகத்துடனான மோதல் காரணமாகவே கிரிக்கெட் வீரர்கள் பெயரை பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் பிசிசிஐயோ, அர்ஜுனா விருது தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால் இந்த முறை விருதை எதிர்பார்த்து காத்திருந்த தகுதியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

யுவராஜ் சிங்: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததோடு, தொடர்நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங். உலகக் கோப்பையில் 362 ரன்களைக் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

விராட் கோலி: கடந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் அபார வளர்ச்சி கண்டவர் கோலி. உலகக் கோப்பையில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச தொடர்களில் இக்கட்டான ஆட்டங்களில் அபாரமாக ஆடி வலுவான இலக்கையும் இந்தியா சேஸ் செய்வதற்கு முக்கிய பங்களித்தவர்.

தன்னுடைய அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதுவரை 85 ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களை அடித்துள்ளார்.