டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் எம்.பி.யுமான அசாருதின் எம்.பி.க்களின் கிரிக்கெட் போட்டிக்காக தர்மசாலா வந்தார். அப்போது அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளுக்கு தகுதியான நபர் ஆவார். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தகுதி வாய்ந்த கேப்டனாக இல்லை. இதில் அவர் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்த மூன்று தரப்பு போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் ஓய்வு பெற்றதை அடுத்து, அவருடைய இடத்துக்கு தகுதியான நபர் ரோகித் சர்மா.

அவருக்கு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

விராத் கோலி வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார்.

மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய அவர் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டித் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

சென்னை அணி இதுவரை தான் ஆடிய 3 ஆட்டங்களில் 1 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது. பெங்களூர் அணி இதுவரை தான் ஆடிய இரண்டு ஆட்டங்களில் 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து கெய்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

அகர்வால் இருந்தவரை அமைதி காத்த கெய்ல், கோலி வந்தபிறகு அதிரடிக்கு மாறினார். கோலியும் அதிரடி காட்டினார்.

சென்னை அணியினர் வீசிய பந்துகளை வாணவேடிக்கை காட்டிய கெய்ல் 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த டிவில்லியர்ஸ் 4 ரன்களிலும், சௌரப் திவாரி 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்ற கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 57 ரன்கள் எடுத்திருந்த போது பொலிஞ்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரில் பொலிஞ்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி கடைசி ஓவரில் ரன் அவுட் முறையிலும் ஒரு விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் சீஸன் 5 தொடரில் இதுவரை 12 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது 13-வது ஆட்டம் ஆகும். இந்த 13 ஆட்டங்களில் முதல் முறையாக 200 ரன்களைக் கடந்துள்ள அணி என்ற பெருமையை பெங்களூர் அணி பெற்றுள்ளது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி தனடது பேட்டிங்கை துவக்கியுள்ளது.

முரளி விஜயும் டு பிளிசிஸ்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முரளி விஜய் 11 ரன்கள் எடுத்திருந்த போது முரளிதரன் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து டு பிளிசிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பிளிசிஸ் அரை சதம் கடந்து அசத்தினார். இவர் 71 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். தோனி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து பிராவோவும் அல்பி மோர்கெலும் ஜோடி சேர்ந்தனர். 19 -வது ஓவரை எதிர் கொண்ட மோர்கெல் 6 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரை விராத் கோலி வீசினார்.

கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இந்த ஓவரை வினய் குமார் வீசினார். 19.2 வது பந்தில் மோர்கெல் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 28 ரன்கள் அடங்கும்.

19.3 வது பந்து நோபாலாக அமைய, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பிராவோ. அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். 19.4-வது பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. 19.5- வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் பிராவோ.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த பந்தை ரவீந்திர ஜடேஜா எதிர் கொண்டார். அந்த பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இந்த சீஸனில் 200 ரன்களை தாண்டிய இரண்டாவது அணி என்ற பெருமையும், 205 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்தது.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 11 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் விளாசியது. சென்னை அணி 11 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் விளாசியது. இந்த 15-வது பவுண்டரிதான் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.

கங்குலியின் ஒன்றரை மணி நேர "மீட்டிங்'

புனே வாரியர்ஸ் அணி கேப்டன் கங்குலி, வீரர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் (மீட்டிங்) ஒன்றரை மணி நேரம் நடந்ததாம்.

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரையில், 20 ஓவர்கள் பவுலிங் செய்யவே ஒன்றரை மணி நேரம் தான் தேவைப்படும். ஆனால், 15 நிமிடத்தில் முடிய வேண்டிய ஆலோசனைக் கூட்டமும், இவ்வளவு நேரம் நடந்துள்ளது.

முதல் போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தந்த இந்த அணி, கடந்த 8ம் தேதி முதன் முதலாக, பஞ்சாப் அணியை எதிர்த்து சொந்த மண்ணில் களமிறங்கியது. இதனிடையே, கங்குலி, இதற்கு முன் கோல்கட்டா அணியின் கேப்டனாக இருந்த போது வெளிநாட்டு பயிற்சியாளர், வீரர்களுடன் பல்வேறு வழிகளில் பிரச்னை ஏற்பட்டது. புனே அணியிலும் இதுபோல ஏற்பட்டுவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையாக களமிறங்கினார் இவர்.

இதன்படி, விளையாடும் லெவனில் யாரை சேர்க்கலாம், யாரை நீக்கலாம் என முடிவு செய்ய கூட்டம் நடத்தினார் கேப்டன் மற்றும் ஆலோசகர் கங்குலி. இதில் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் பிரவீண் ஆம்ரே, ஆலன் டொனால்டு மற்றும் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பங்கேற்றனர்.


கண்டிப்பான "ஆர்டர்':

பொதுவாக 15 நிமிடங்களுக்கும் மேல், இதுபோன்ற கூட்டங்கள் நீடிக்காது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, ஒன்றரை மணி தீவிர விவாதம் நடந்துள்ளது. இதில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்க்கலாம் என ஆலோசித்தனர். ரைடர், அல்போன்சா தாமஸ், பார்னல் ஆகியோருக்கு பிரச்னையில்லை.

அதேநேரம் மாத்யூஸ் புதியதாக வந்துள்ளார். இதனால் அணியின் யாருக்கும் கருணை காட்டப்பட மாட்டாது. அணியின் நலன் கருதி யார் வேண்டுமானாலும் சேர்க்கப்படலாம் என்று கங்குலி தெளிவாக கூறியதாக தெரிகிறது.


பெரும் தலைவலி:

இதுகுறித்து கங்குலி கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் இடம் பெற வேண்டும் என்பது கட்டுப்பாடு. இதன் படி யாரை தேர்வு செய்வது என்பதில் கேப்டனுக்கு தலைவலியே வந்து விடுகிறது,'' என்றார்.

தோனி-சேவக் நேருக்கு நேர்

ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெயவர்தனா, பீட்டர்சன் வருகையால் பலமடைந்துள்ள டில்லி அணியை, சமாளிக்க சென்னை கிங்ஸ் அணி தயாராக உள்ளது.

சென்னை, கோல்கட்டா, மும்பை உட்பட 9 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இன்று நடக்கும் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


திடீர் எழுச்சி:

சென்னை அணி முதல் போட்டியில் மும்பையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. பின் டெக்கான் அணிக்கு எதிராக திடீர் எழுச்சி பெற்றது. டு பிளசிஸ் அதிரடிக்கு திரும்பியுள்ளார். முரளி விஜய் விரைவில் "பார்முக்கு' திரும்ப வேண்டும்.


பவுலிங் ஆறுதல்:

வேகப்பந்து வீச்சில் வழக்கம் போல போலிஞ்சர் ஆறுதல் தருகிறார். ஆல்பி மார்கல் பிராவோ தவிர, சுழலில் அஷ்வின் ரன்களை மட்டும் கட்டுப்படுத்துகிறார். ரவிந்திர ஜடேஜா டெக்கான் அணிக்கு எதிராக 16 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி, நல்ல "பார்மில்' உள்ளார். இவர்களுடன் ஜகாதியும் களமிறங்குவதில் மாற்றம் இருக்காது என நம்பலாம்.


பேட்டிங் பலம்:

கோல்கட்டாவுக்கு எதிரான அசத்தல் வெற்றி பெற்ற டில்லி அணி, பெங்களூருவுக்கு எதிராக திடீரென வீழ்ந்தது. பேட்டிங்கில் ஏற்கனவே சேவக், பின்ச் அதிரடி துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' நமன் ஓஜா, வேணுகோபால் ராவ் மேக்ஸ்வெல் உள்ளனர். இந்நிலையில், பீட்டர்சன், ஜெயவர்தனா அணிக்கு திரும்புவது கூடுதல் உற்சாகமாக உள்ளது. இவர்கள் இருவருமே சிறப்பான "பார்மில்' உள்ளனர்.


மார்கல் அபாரம்:

தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல், பிரேஸ்வெல் சிறப்பாக செயல்படுகின்றனர். இர்பான் பதான் "ஆல் ரவுண்டர்' பணியில் நம்பிக்கை தருகிறார். சுழலில் நதீம் தவிர, யாரும் இல்லாதது பலவீனமே.

கடந்த போட்டியில் பாதியில் வெளியேறிய <உமேஷ் யாதவ், இன்று வழக்கமான பவுலிங்கில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது. இந்திய அணியில் அவ்வப்போது உரசிக் கொள்ளும் தோனி, சேவக் இம்முறை நேருக்கு நேர் மோதுவதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இரு அணிகள் இதுவரை...

ஐ.பி.எல்., வரலாற்றில் சென்னை, டில்லி அணிகள் இதுவரை 7 போட்டிகளில் மோதின. இதில் 4ல் சென்னை கிங்ஸ் வெற்றிபெற்றது. 3 போட்டியில் டில்லி அணி வென்றுள்ளது.

சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார்.


அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார்.

ஓய்வுக்கு பிறகு லண்டனில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். யுவராஜ் சிங்கை அழைத்து செல்ல யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் மற்றும் அவரது உறவினர்கள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றனர்.

யுவராஜ்சிங் தாயகம் திரும்பும் தகவலை அறிந்து கொண்ட அவரது ரசிகர்களும் அங்கே திரண்டு இருந்தனர்.
சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சீக்கிரமாக குணமடைந்து நாடு திரும்பிய சகோதரார் யுவராஜ்சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்சர் என்னும் நோயுடன் போராடி வென்ற யுவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.