அதிசயம் நிகழ்த்துமா சென்னை கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்றைய முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அணி நல்ல "ரன்ரேட்டில்' இமாலய வெற்றி பெற வேண்டும். பின் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணியை சந்திக்கிறது.


மோசமான துவக்கம்:

சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய், ரெய்னா ஆகியோர் துவக்கத்தில் திணறுவது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இன்று இவர்கள் எழுச்சி பெற வேண்டும். கேப்டன் தோனி, பத்ரிநாத் தங்களது ஆமை வேக ஆட்டத்துக்கு விடைகொடுக்க வேண்டும். "ஆல்-ரவுண்டராக' டுவைன் பிராவோ அசத்துவது நம்பிக்கை தருகிறது.

கடந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கிய போலிஞ்சர் இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தால் எதிரணிக்கு சிக்கல் ஏற்படும். இவரை தவிர அஷ்வின், மார்கல், ஜகாதி உள்ளிட்டோர் தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும்.


ஸ்மித் நம்பிக்கை:

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு துவக்கத்தில் வாட்சன், வார்னர், டேனியல் ஸ்மித் ஆகியோர் கைகொடுக்கின்றனர். கேப்டன் சைமன் காடிச் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது. ஸ்டீபன் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டம் இன்றும் தொடரலாம்.

பவுலிங்கில் ஸ்டீவ் ஓ கபே, ஸ்டீபன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஹென்ரிக்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இன்று நடக்கும் மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில், டிரினிடாட் அண்டு டுபாகோ அணி, கேப் கோப்ராஸ் அணிகள் மோதுகின்றன.


வாய்ப்பு எப்படி?:

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இம்முறை "ஏ' பிரிவு "குரூப் ஆப் டெத்' என அழைக்கப்பட்டது. இதற்கேற்ப அரையிறுதிக்கு முன்னேற அணிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இன்று கேப் கோப்ராஸ் வெற்றி பெற்றால்(5 புள்ளிகளுடன்) நல்ல "ரன் ரேட்' இருப்தால், மும்பையை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு முன்னேறும். இதே போல சென்னை அணியை, நியூ சவுத் வேல்ஸ் வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பெறும்.

மாறாக கோப்ராஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். பின் நியூ சவுத் வேல்ஸ், சென்னை கிங்ஸ், டிரினிடாட் டுபாகோ ஆகிய 3 அணிகள் இடையே அரையிறுதிக்கு முன்னேறுவதில் போட்டி இருக்கும். இனை அனைத்து நான்கு புள்ளிகள் பெற்று இருக்கும். அப்போது "ரன் ரேட்' அடிப்படையில் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

எனவே, இன்று சென்னை அணி முதலில் நல்ல "ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டும். அதற்கு பின் அதிர்ஷ்டம் அடித்தால், அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.

ஹர்பஜனுக்கு அக்ரம் ஆதரவு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்யாதது ஆச்சர்யம் அளிக்கிறது,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (அக்., 14 முதல் 29 வரை) பங்கேற்க இங்கிலாந்து அணி, இந்தியா வருகிறது. இதற்கான முதல் இரு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, ஹர்பஜன் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து வாசிம் அக்ரம் கூறியது:

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட, பெரும் எதிர்பார்ப்புடன் தயாராக இருந்தார் ஹர்பஜன் சிங். இந்நிலையில், இவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஆச்சர்யம் அளிக்கிறது.

ஒன்று, அல்லது இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக, 31 வயது மட்டும் ஆன, அனுபவ வீரரை அணியில் இருந்து நீக்குவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. தேர்வு குழுவினர் இளம் வீரர்கள் மட்டும் போதும் என்று எண்ணி விட்டார்கள் என நினைக்கிறேன்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார். ஹர்பஜன் சிங்கை எப்போதும் ஒரு கிரிக்கெட் வீரராக, சிறந்த போராளியாகவும் தான் பார்க்கிறேன். இவரது உதவி இந்திய அணிக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சேவை புரிந்து வருகிறார். சமீபத்தில் முடிந்த உலககோப்பை தொடரில், இந்திய அணிக்காக சிறப்பான முறையில் பந்து வீசினார். பின்வரிசையில் பேட்டிங்கிலும் அசத்துவது பெரும் பலம். இப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டது, இவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, மீண்டும் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்புவார் என்று <உறுதியாக நம்புகிறேன்.

இவருடைய அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சாதிக்க, நிச்சயமாக கைகொடுக்கும். எதிர்வரும் இங்கிலாந்து தொடரில், முன்னணி பவுலர்கள் காயம் அடைந்திருப்பதால், வேகப்பந்து வீச்சிற்கு இந்திய அணி பிரவீண்குமாரையை நம்பியுள்ளது. இதனால் பிரவீண் குமார் பதட்டத்திற்கு ஆளாகலாம்.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

அக்தரின் பந்தை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கியது

ஷாகித் அப்ரிதி, அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷோயப் அக்தரின் சச்சின் பற்றிய கருத்தை ஆமோதித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான ஷாகித் அப்ரிதி, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்பட்ட ஷோயப் அக்தரின் புயல்வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது, சச்சினின் கால்கள் பயத்தால் நடுங்குவதைக் கண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அக்தரின் காண்ட்ராவர்ஷியலி யுவர்ஸ் புத்தகத்தில் சச்சின் பற்றி அவர் எழுதிய கருத்து, இரு நாட்டு எல்லையிலும் பெரும் பிரச்னையைக் கிளப்பியது.

அக்தரின் இந்தப் புத்தகம் வெளியாக இருந்த நிகழ்ச்சி, மும்பையில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல், அப்ரிதி, அக்தருக்காகப் பரிந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்தர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அவர் பந்துவீச்சுக்கு பயந்தது உண்மை. நான் களத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த நேரத்தில், அக்தரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் சச்சினின் கால்கள் பயத்தில் நடுங்குவதைக் கண்டிருக்கிறேன்... என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்ரிதி கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை நெருக்கடி ஏற்படும்போதும் பேட்ஸ்மென்கள் இவ்வாறு நடந்து கொள்வது இயல்பு. பாகிஸ்தானின் ஆப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் பந்துவீச்சுக்கும் இப்படி ஒருசூழ்நிலை ஏற்பட்டதுண்டு என்று கூறியிருக்கிறார் அப்ரிதி.

கடந்த 2011 உலகக் கோப்பை நேரத்தில், இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் விளையாடிய அணியில் அக்தரை சேர்த்துக்கொள்ளவில்லை. அதற்காக அணித்தலைவர் அப்ரிதியை அக்தர் வாய்க்கு வந்தபடி திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் அணிக்கு மீண்டும் திரும்பவேண்டும்; அணிக்காக விளையாட வேண்டும். அதற்காக அணி மேலாளரிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

மீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.


காம்பிர் நம்பிக்கை:

லீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன் 2 புள்ளி தான் பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நல்ல "ரன் ரேட்' பெற வேண்டும். அப்போது தான் அரையிறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இதனை மனதில் வைத்து கேப்டன் காம்பிர், காலிஸ், ஹாடின் ஆகியோர் பொறுப்பாக ஆட வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ரன் சேர்த்த இவர்கள், அணிக்கு வெற்றி தேடி தந்தனர். மீண்டும் இதே போன்று அசத்த வேண்டும்.


பிரட் லீ வேகம்:

பந்துவீச்சில் பிரட் லீயின் "வேகம்' வாரியர்ஸ் அணிக்கு தொல்லை தரலாம். காலிஸ், உனத்கட், இக்பால் அப்துல்லா, பாட்யா ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


பலமான வாரியர்ஸ்:

வாரியர்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்றும் இவர்களின் ஆதிக்கம் தொடரலாம். ஜான் ஸ்மட்ஸ், பிரின்ஸ், இங்ராம், மார்க் பவுச்சர், போத்தா என அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சாதித்து வருவது அணியின் பலமாக உள்ளது.

டிசாட்சொபே, போத்தா, பார்னல், நிக்கி போயே போன்றோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க கோல்கட்டா அணியும், தொடர் வெற்றி பெற வாரியர்ஸ் அணியும் உறுதியாக இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

கனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்

மும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு மாளிகையில் விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 2007ல் ரூ. 39 கோடிக்கு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய மாளிகை ஒன்றை வாங்கினார்.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான இடத்தில், ரூ. 50 கோடி செலவில் புதிய வீடு கட்டினார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முறைப்படி குடியேறினார்.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். இந்தக் கனவும் எனக்கும் இருந்தது. இதனை நனவாக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முன்பு வசித்த வீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கிடைத்தது. தற்போது காலி செய்து விட்டேன். இதன் மூலம் வேறு ஒரு வீரர் இங்கு தங்க முடியும்.

இங்கிலாந்து தொடருக்கு முன், புது வீட்டுக்கான "கிரஹ சாந்தி', "வாஸ்து பூஜா' போன்றவற்றை கடந்த ஜூன் 11ம் தேதி செய்தோம். இதற்கு பின் மும்பைக்கு வர இயலவில்லை. தற்போது இங்கு இருப்பதால், எனது அம்மாவை அழைத்து வந்து வீட்டை காண்பித்தேன்,''என்றார்.

ஒரே தளத்தில் 41 கார்கள்...

சச்சின் வீடு ஐந்து மாடிகள் கொண்டது. முழுவதும் "ஏசி' வசதி செய்யப்பட்டது. வெளியில் இருந்து பார்த்தால் மூன்று மாடிகள் மட்டும் தெரியும் வகையில் "காம்பவுண்டு' சுவர் நல்ல உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. நவீன "சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* தரை தளத்தில் சச்சினுக்கு பிடித்த விநாயர் கோயில் உள்ளது. தவிர இவர் பெற்ற ஏராளமான விருதுகளை வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. "டைனிங்' அறையும் உள்ளது.

* முதல் தளத்தில் வேலையாட்களின் அறை, கண்காணிப்பு அறைகள் உள்ளன.

* இரண்டாம் தளம் முழுவதும் சச்சின் வாங்கி குவித்துள்ள கார்கள் "பார்க்கிங்' செய்யப்பட உள்ளன. இங்கு இவரது 41 கார்கள் நிறுத்தப்பட உள்ளன.

* மீதமுள்ள 3 தளங்களில் சச்சின், அவரது மகன் அர்ஜுன், மகள் சாரா உள்ளிட்ட குடும்பத்தினர் தங்க உள்ளனர். ஐந்தாவது தளத்தில் சச்சின், அவரது மனைவி அஞ்சலிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு "யு.எப்.ஒ., கிளப்' சார்பில் 25 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில்
"மினி-தியேட்டர்' அமைக்கப்பட்டுள்ளது.

* மொட்டை மாடியில் நீச்சல் குளம் உள்ளது.

சிறுவர்கள் காயம்

நேற்று புது வீட்டுக்கு வந்த சச்சினை காண அந்தப் பகுதியில் இருந்த 5 முதல் 8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திரண்டனர். ஏராளமான "மீடியா' குழுவினரும் குவிந்தனர். சச்சின் வந்ததும்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

* சச்சின் வீட்டின் எதிரே, அவரை வரவேற்று பெரிய "பேனர்' வைக்க முற்பட்டனர். இதற்கு "அவாமி' நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சர்ச்சை ஏற்பட்டது. பின் சுமுக ஏற்பட, "பேனர்' வைக்கப்பட்டது.