சச்சின், ஹர்பஜனுக்கு ஓய்வு

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின், ஹர்பஜன், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஆக.,10-28) இலங்கையில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அனுபவ வீரர்களான சச்சின், ஹர்பஜன் மற்றும் முழங்கால் பகுதியில் காயமடைந்த காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் யுவராஜ்: மோசமான "பார்ம்' காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ், மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஜாகிர், ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை. நெஹ்ரா, இஷாந்த், பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் ஆகிய "வேகங்கள்' திறமை காட்ட உள்ளனர். 15 பேர் அடங்கிய அணியில், ஒரே "ஆல்-ரவுண்டராக' ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.


தமிழகம் வாய்ப்பு: காம்பிர் இல்லாத நிலையில் துவக்க வீரராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் களமிறங்க இருக்கிறார். மற்றொரு தமிழக சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் சாதிக்க காத்திருக்கிறார்.


இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் இடம் பெற்றிருந்த அஷ்வின், சவுரப் திவாரி தற்போது முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அசோக் டிண்டா, மனிஷ் பாண்டே, ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இடம் பெறுவர்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி வருமாறு: தோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ், ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சவுரப் திவாரி.

இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


தென்னாப்பிரிக்க அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.


இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 111 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-வது இடங்களிலும், பாகிஸ்தான் 84 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.


ஒருநாள் போட்டி:


ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 115 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முறையே 5, 6, 7-வது இடங்களிலும் உள்ளன.

இந்தியா "நம்பர்-1' அணியா?

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் இந்தியா, "நம்பர் -1' அணி போல தோன்றவில்லை,'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.


சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி (124 புள்ளிகள்). இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் படுதோல்வி அடைந்தது.


இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஆனால் பவுலிங், பலவீனமாக உள்ளது. காயம் காரணமாக ஜாகிர் கான் இல்லாதது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடரில் தடுமாறி வரும் இந்திய அணி, "நம்பர்-1' அணி போல தோன்றவில்லை.

சவாலான தொடர்:ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோத உள்ள ஒரு நாள் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக அமையும். ஹர்பஜன் சிங், பார்ம் இன்றி தவித்து வருகிறார்.


ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் பலர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். இதனால் 1995 ம் ஆண்டு முதல் 2005 வரை வீழ்த்த முடியாத அணியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 1970 ம் ஆண்டு முதல் 1980 வரை கிரிக்கெட் அரங்கில் அசத்திய வெஸ்ட் இண்டீசுக்கும், இதே நிலைமை ஏற்பட்டது. மற்ற அணிகளுக்கும் அப்படித்தான். இருப்பினும் ஆஸ்திரேலியா, எழுச்சி பெறும்.


வெற்றிடம்: முரளிதரன் ஓய்வு, கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இந்தியாவின் அனில் கும்ளே ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து சுமார் 2000 விக்கெட்டுகள் வரை கைப்பற்றியுள்ளனர்.


இனி இவர்களது இடம் வெற்றிடமாக உள்ளது. இருப்பினும் இளம் வீரர்கள் சாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சுவான், இந்தியாவின் ஹர்பஜன், இலங்கையின் மெண்டிஸ் ஆகியோர், எதிர்காலத்தில் சுழற் பந்து வீச்சில் அசத்தலாம். இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

பிராட்மேன் சாதனையை தகர்த்த ஜெயவர்தனா

ஒரே மைதானத்தில் அதிக சதம் அடித்து, ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார் ஜெயவர்தனா.


கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் ஜெயவர்தனா, சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 28 வது சதமாக அமைந்தது. தவிர, கொழும்பு, சின்கிளைஸ் ஸ்போர்டஸ் கிளப் மைதானத்தில், இவர் அடிக்கும் 10 வது சதம் இது.


இதன் மூலம் ஒரே மைதானத்தில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜெயவர்தனா. இதற்கு முன், முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், மெல்போர்ன் மைதானத்தில் 9 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதை ஜெயவர்தனா முறியடித்துள்ளார்.


இது குறித்து ஜெயவர்தனா கூறியது: எனது சொந்த ஊரில் உள்ள இம்மைதானத்தில் அதிக சதம் கடந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இங்கு 23 போட்டிகளில் விளையாடிய 10 சதம் கடந்துள்ளேன். ஆனால் டான் பிராட்மேன், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 11 போட்டிகள் மட்டுமே விளையாடி 9 சதம் அடித்துள்ளார். அவரது சாதனை பாராட்டத்தக்கது.


என்னை அவருடன் ஒப்பிடுவது பற்றி நான் சிந்திக்க வில்லை. அவர் உலகின் தலை சிறந்த வீரர். அந்தக் காலக் கட்டத்தில் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது அவருக்கு நிகராக நாம் ஒன்றும் செய்து விட வில்லை.


விக்கெட் வீழத்துவோம்: கொழும்பு டெஸ்டில் அதிக ரன் குவிக்க சங்ககராவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும், இலங்கை பவுலர்கள் இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவார்கள்.


தற்போது ஆட்டம் முழுவதும் எங்கள் கையில் தான் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்று கடும் நெருக்கடி கொடுப்போம். இவ்வாறு ஜெயவர்தனா கூறினார்.

உலக சாம்பியன் கனவு

பாட்மின்டன் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில், இளம் வீராங்கனை செய்னா நேவல் (20 வயது) முக்கியமானவர்.


சமீபத்தில் நடந்த இந்திய கிராண்ட்பிரிக்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அசுர வளர்ச்சி கண்டுள்ள இவர், ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்துக்கு அதிரடி முன்னேற்றம் கண்டார்.

இருப்பினும் இவருக்கு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. இவரது சமீபத்திய செயல்பாட்டின்மூலம், இக்கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 18வது உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் அடுத்த மாதம் 23-29ம் தேதிகளில் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்க செய்னா நேவல் தலைமையிலான 9 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் செய்னா நேவல், ஆதித்தி முதாத்கர், ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, சேட்டன் ஆனந்த், காஷ்யப், சனவே தாமஸ், ருபேஷ் குமார், திஜு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இத்தொடர் குறித்து செய்னா நேவல் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மூன்று முக்கிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, ரேங்கிங்கில் 2வது இடத்துக்கு அழைத்து சென்றது. இருப்பினும் "நம்பர்-1' இடம் பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளேன். இதற்காக முழுவீச்சில் தயார் செய்து வருகிறேன்.


"பார்ம்' மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல், சில முக்கிய தொடரில் மட்டும் பங்கேற்க முடிவு செய்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உடற்தகுதி முக்கியமானது.


அடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடர், நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில், கடந்த முறை ஐதராபாத்தில் நடந்த இத்தொடரில் காலிறுதி வரை முன்னேறிய நான், இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தவிர, பாட்மின்டன் அரங்கில் சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இவர்களுக்கு எதிராக முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே, சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். சமீபத்திய போட்டிகளில் முன்னணி சீன வீராங்கனைகளை வீழ்த்தி இருப்பதால், இத்தொடரில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.


இத்தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுகுறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது குறித்து மட்டும் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.