சச்சின் பேட்டில் அசத்தப் போகும் பாக்., வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சச்சின் பயன்படுத்திய "பேட்டில்' அசத்த உள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அறிமுக வீரர் உமர் அமின். 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் ஜூன் 15 ம் தேதி துவங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக உமர் அமின் இடம் பெற்றுள்ளார். இவர் இத்தொடரில் சச்சின் பயன்படுத்திய பேட்டை உபயோகப்படுத்த உள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு அசத்திய உமர் அமினுக்கு, சக நாட்டு வீரர் சோயப் அக்தர், சச்சினின் "பேட்டை' பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து அமின் கூறுகையில்,"" உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது எனது சிறப்பான ஆட்டம், ஒரு போட்டியின் வெற்றிக்கு வித்திட்டது. 

அப்போது இந்த "பேட்' எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இதனை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்த "பேட்டை' பயன்படுத்தி விளையாட உள்ளேன். பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைத்தது, எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது,'' என்றார்.

கேரளாவை பிரியும் ஸ்ரீசாந்த்

கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால், வரவிருக்கும் ரஞ்சிக்கோப்பை தொடரில், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரள அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட உள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். களத்தில் "ஆக்ரோஷமாக' விளையாடி, எதிரணியினரை "சீண்டுவதில்' வல்லவர். தற்போது மோசமான "பார்ம்' காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே சமீபத்தில் கேரள அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டார். எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களுக்கு, "ஆல்-ரவுண்டர்' ரெய்பி வின்சென்ட் கோம்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 25 பேர் அடங்கிய உத்தேச அணியில், ஸ்ரீசாந்தும் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது, இவரை பெரிதும் பாதித்துவிட்டது எனத் தெரிகிறது. 

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

நான் அதிகளவில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தேசிய அணியில் மீண்டும் இடம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக என்னை நிரூபித்து கடினமாக முயற்சி செய்து வருகிறேன். 

கடந்த சீசனில் கேரள அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டேன். அதில் இறுதி முடிவுகளை நான் எடுக்கவில்லை. எதிர்வரும் தொடர்களில், வேறு மாநில அணியில் இணைந்து விளையாடி முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

இதுகுறித்து கேரள கிரிக்கெட் சங்கத்தின் (கே.சி.ஏ.,) செயலர் டி.சி.மாத்யூ கூறுகையில்,"" கேப்டன் 
பதவிதான் வேண்டும் என, எந்த வீரரும் வற்புறுத்த முடியாது. ஸ்ரீசாந்த் வேறுமாநில அணிக்கு செல்ல விரும்பினால் எங்களிடம், அனுமதி கடிதம் பெறவேண்டும். இதுகுறித்து அவர் எங்களை அணுகினால், கே.சி.ஏ.,வின் மத்திய கவுன்சில் விவாதித்து, பின் முடிவெடுக்கும்,'' என்றார்.

உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை

கிரீன் பார்க் மைதானம்
கால்பந்துப் போட்டி நடைபெறும் பிரமாண்ட மைதானங்களில் கேப் டவுனிலுள்ள கிரீன்பாயிண்ட் மைதானமும் ஒன்று. சிக்னல் ஹில் பகுதிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கேப்டன் டவுன் மையத்தில் அமைந்துள்ளது. 

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்த நகரில் இந்த கால்பந்து மைதானம் 2007-ம் ஆண்டில் கட்டத் துவங்கி 2009-ல் திறக்கப்பட்டது. 69,070 பேர் அமர்ந்து போட்டியை ரசித்துப் பார்க்கலாம்.

உலகக் கோப்பைப் போட்டிக்காகவே இந்த மைதானம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தையொட்டி 60 ஹெக்டேர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்திலிருந்து சற்று தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது. 

கடற்கரையையும், மைதானத்தையும் இணைக்கும் வகையில் சாலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 கால்பந்து ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் அரை இறுதி ஆட்டம் ஒன்றும் நடைபெறுகிறது.

மொம்பேலா மைதானம்

போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட மைதானங்களில் மொம்பேலா மைதானமும் ஒன்று. மேற்கு நெல்ஸ்புரூட் நகரில் அமைந்துள்ளது. கால்பந்து, ரக்பி போட்டிகளை இங்கு நடத்த முடியும். 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டன. 43,589 பேர் அமர்ந்து ஆட்டங்களை ரசிக்க முடியும். 

கிருகர் தேசியப் பூங்கா அருகே இந்த மைதானம் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்கா, ஒட்டகச் சிவிங்கிகளுக்கு புகழ்பெற்றது. அதை நினைவுபடுத்தும் விதமாக மைதானத்தின் 18 கூரைகள் ஒட்டகச் சிவிங்கி போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மைதானத்துக்கு ஜிராபி ஸ்டேடியம் என்றும் பெயருண்டு. உலகக் கோப்பை கால்பந்தின் 4 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

எல்லிஸ் பார்க் மைதானம்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ளது எல்லிஸ் பார்க் கால்பந்து மைதானம். இது 1929-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 62,567 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். 7 உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.

1948 முதல் 1954 வரை 6 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 1956-ம் ஆண்டு வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம் துவங்கப்பட்ட பின்னர் இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மைதானத்தில் ரக்பி, கால்பந்து விளையாட்டுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அவ்வப்போது திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோக-கோலா நிறுவனம் இந்த மைதானத்துக்கு ஸ்பான்ஸர் செய்வதால் இதற்கு கோக-கோலா மைதானம் என்ற பெயரும் உண்டு.

நெல்சன் மண்டேலா மைதானம்

தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது நெல்சன் மண்டேலா கால்பந்து மைதானம். தென்னாப்பிரிக்காவின் தன்னிகரில்லா தலைவர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் அழகுற அமைந்துள்ளது. 

போட்டிக்காக கட்டப்பட்டுள்ள 3 கடற்கரையோர மைதானங்களில் இதுவும் ஒன்று. மைதானத்தின் அருகிலேயே நார்த் எண்ட் ஏரி கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 48,459 ஆயிரம் பேர் அமர்ந்து இங்கு போட்டியை ரசிக்கலாம்.

கால்பந்து போட்டி மட்டுமல்லாமல் ரக்பி விளையாட்டையும் இங்கு நடத்தலாம். ஏராளமான ரக்பி, கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. உலககக் கோப்பை கால்பந்தின் 5 லீக் ஆட்டங்கள், கால் இறுதி, 3-ம் இடத்துக்கான ஆட்டங்கள் என மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் இல்லை

ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டத்தை தடுக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பது போன்ற கருத்துக்கள் முட்டாள்தனமானது,'' என, ஐ.பி.எல்., துணைத்தலைவர் நிரஞ்சன் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில், புக்கிகள் வீரர்களை எளிதில் அணுக முடியும் என்பதால், சூதாட்டம் நடக்க அதிக வாய்ப்புள்ளது என, ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் தெரிவித்து இருந்தார். இதை மறுத்து நிரஞ்சன் ஷா கூறியது:

ஒருசில வீரர்கள் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென்றாலும் கூட, தேவையில்லாமல் பேசுவதை, மோசமான பழக்கமாக வைத்துள்ளனர். அந்த பேச்சு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைப்பதில்லை. தாங்கள் என்ன பேசுகிறோம் என நினைக்காமல், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசிவிட்டு செல்கிறார்கள்.

சுத்தமான தொடர்:

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஊழலற்றது. அதுபோல ஐ.பி.எல்., தொடரும் சுத்தமாக இருக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் பால் கான்டன் கூட, மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் சுத்தமானது. இதில் சூதாட்டம் நடந்திருப்பதுக்கு வாய்ப்பே இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளார். 

காரணம் தெரியவில்லை:

தொடரின் போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவை, பணியில் ஈடுபடுத்துவதுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அடுத்த நான்காவது தொடருக்கும் அவர்களை மீண்டும் நியமிக்கவுள்ளோம். இந்நிலையில் கில்கிறிஸ்ட் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது, முட்டாள்தனமானது. என்ன அர்த்தத்தில் இப்படி பேசினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை: சச்சின் சந்தேகம்

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக சச்சின் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15ம் தேதி, இலங்கையில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின் இடம் பெற மாட்டார் என தெரிகிறது. 

சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் அரையிறுதியில் இவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் முழுமையாக குணமடையாததால், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. 

மீண்டும் சேவக்:

ஓய்வில் இருந்த கேப்டன் தோனி, காம்பிர், சேவக் அணிக்கு திரும்புகின்றனர். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி போட்டியில் அசத்திய அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. யூசுப் பதான் இடம் கேள்விக்குறியாக உள்ளது. 

சிக்கலில் யுவராஜ்:

பவுலிங்கைப் பொறுத்தவரை ஜாகிர் கான், இஷாந்த் சர்மா இடம் பெறலாம். ஹர்பஜன் சிங் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். வெஸ்ட் இண்டீசில் சர்ச்சை ஏற்படுத்திய யுவராஜ், ஆஷிஸ் நெஹ்ரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை அணியில் இருந்து இவர்கள் கழற்றிவிடப்படலாம்.