ஷேவாக்கை சேர்க்க அரியானா அணி மறுப்பு

ஷேவாக்கை சேர்க்க மாட்டோம் என்று அரியானா அணி கூறியுள்ளது. உள்ளூர் போட்டியில் டெல்லி அணி சார்பில் விளையாடி வந்த ஷேவாக் இப்போது டெல்லி அணி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அவர் அந்த அணியில் இருந்து விலகி அரியானா அணியில் சேரப்போவதாக அறிவித்து உள்ளார்.

ஆனால் அரியானா அணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி அணியில் இருந்து அவர் தடையில்லா சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்று அரியானா சங்கம் கூறியுள்ளது.

இது குறித்து அரியானா சங்கத்தின் தலைவர் அரவிந்த் சவுத்திரி கூறியதாவது:-

ஷேவாக் போன்ற முன்னணி வீரர்கள் எங்கள் அணியில் சேருவதை அரியானா மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அவரை சேர்த்து கொள்வதில் சில பிரச்சினைகள் உள்ளன. சாதாரண சூழ்நிலையில் அவர் வருவதாக இருந்தால் அவரை வரவேற்போம். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பவில்லை.

சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. முதலில் அவர் தடையில்லா சான்று பெற்று வரவேண்டும். இதற்காக அவர் டெல்லி சங்க தலைவர் அருண் ஜேட்லியிடம் பேசி அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியானா கிரிக்கெட் சங்க செயலாளர் அனிருத் மகேந்திரா கூறும் போது, ஷேவாக் தொடர்ந்து டெல்லி அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காண்பார்கள் என்று கருதுகிறேன். ஷேவாக் அரியானா அணிக்காக விளையாட விரும்பினால் அதை வரவேற்போம் என்றார்.

இலங்கை - நியூஸிலாந்து போட்டி டிரா

இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் போட்டியை நியூஸிலாந்து டிரா செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ûஸ துவங்கிய நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆனால் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் நியூஸிலாந்து எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்து 299 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. தில்ஷன் அபாரமாக ஆடி 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சங்ககரா 46 ரன்களும், ஜயவர்த்தனே 27 ரன்களும், சமரவீரா 20 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜயவர்த்தன 30 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் நியூஸிலாந்து 413 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்கார் பிளின்னின் விக்கெட்டை குலசேகரா கைப்பற்றினார்.

ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. குப்தில் 17 ரன்களும், டெய்லர் 8 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் போட்டியை நியூஸிலாந்து டிரா செய்யுமா அல்லது தோல்வியைச் சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு

சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கெடு முடிந்த பின் பெயர் பட்டியலை அனுப்பியதால் செய்னா நேவல் உள்ளிட் டோர் முக்கிய தொடரில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை இழந்தனர்.

இந்த தவறுக்கு இந்திய பாட்மின்டன் சங்க நிர்வாகிகளின் அலட்சியமே முக்கிய காரணம். இருப்பினும், சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தரவில்லை என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.சீனாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் வரும் செப். 15 முதல் 20 ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப ஆக. 11 தான் கடைசி நாள். ஆனால் இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) ஒருநாள் தாமதமாக ஆக. 12ல் அனுப்பியது. இதனை சீன பாட்மின்டன் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர்.

இதனால் செய்னா நேவல், ஜூவாலா கட்டா, திஜு, சேட்டன் ஆனந்த் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடர்களில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய வீராங்கனை செய்னா நேவல் கூறியது:

எல்லோரும் உலக பாட் மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் "பிசியாக' இருந்ததால், பட்டியல் அனுப்ப வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டார்கள். அதேபோல வீரர்களும் தங்களதுபட்டியலை சரியான தேதிக்குள் பி.ஏ.ஐ.,க்கு அனுப்பவில்லை. இந்த தகவலை பி.ஏ.ஐ.,யும் எங்களுக்கு தெரிவிக்க மறந்து விட்டார்கள்.

மொத்தத்தில் எல்லா இடத்திலும் தவறு நடந்துள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் கடந்த ஆண்டு நான் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தேன். இப்போது கலந்து கொள்ளாததால் ரேங்கிங்கில் புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு செய்னா கூறினார்.திஜு ஆவேசம்: ஆனால் மற்றொரு வீரர் திஜு, பி.ஏ.ஐ., அமைப்பை குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறியது:ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் நாங்கள் பங்கேற்க போகிறோம் என தெரிவிக்கமாட்டோம். ஒருவேளை ஏதாவது தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றால் தான் பி.ஏ.ஐ., க்கு தெரிவிப்போம்.

இந்த ஆண்டு நடக்கும் அனைத்து சூப்பர் சீரிஸ் தொடர்களிலும் பங்கேற்க வேண்டும் என நாங்கள் கடந்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே தெரிவித்துள் ளோம். ஆனால் அவர்கள் சீன தொடருக்கு சரியான நேரத்தில் பட்டியலை அனுப்ப மறந்து விட்டார்கள்.

இது முழுவதும் அவர்கள் தவறுதான். இதில் பங்கேற்காததால் ரேங்கிங்கில் பின்தள்ளப்படுவது ஏமாற்றமாக உள்ளது. இவ்வாறு திஜு தெரிவித்தார்.பயிற்சியாளர் ஏமாற்றம்: இதுகுறித்து செய்னா நேவல் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்,"" ஒருநாள் தாமதமானதால் சீனா தொடரில் கலந்து கொள்ளமுடியாதது துரதிருஷ்டவசமானது.

ஐதராபாத்தில் நடந்த உலக பாட்மின்டன் தொடரில் அதிக கவனம் செலுத்தியதால், இந்த தவறு ஏற்பட்டுவிட்டது,'' என்றார்.


வீரர்கள்தான் பொறுப்பு : இந்திய பாட்மின்டன் சங்க தலைவர் வர்மா கூறுகையில்,""ஒரு தொடருக்கு முன்பாக வீரர்கள் அனுப்பும் பட்டியலை தான் உலக பாட்மின்டன் சங்கத்திற்கு அனுப்புவோம். வீரர்கள் அனுப்பிய பட்டியல் ஆக.12ல் தான் கிடைத்தது என பயிற்சியாளர் கோபிசந்த் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் உடனடியாக நாங்கள் சீனாவிற்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. ஏன் வீரர்கள் தாமதமாக அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியாது,'' என்றார்

இரட்டை மகிழ்ச்சியில் உசைன் போல்ட்

உலக தடகள போட்டியில் தொடர்ந்து அசத்தி வருகிறார் ஜமைக்காவின் உசைன் போல்ட். 100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் பறந்து இரட்டை சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த ஆண்கள் 200 மீ., ஓட்டப் போட்டியில் 23 வயதான உசைன் போல்ட் பங்கேற்றார்.

போட்டி தூரத்தை 19.19 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பனாமாவின் அலோன்சா எட்வர்டும் (19.81 வினாடி), மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேலேஸ் ஸ்பியர்மேனும் (19.85) கைப்பற்றினர்.

சாதனை தகர்ப்பு:
கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் 200 மீ., ஓட்டப் போட்டியில், போட்டி தூரத்தை 19.30 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார் போல்ட். தற்போது தனது சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக 100 மீ., ஓட்டத்திலும் உலக சாதனை(9.58 வினாடி) படைத்திருந்தார்.

இது குறித்து போல்ட் கூறுகையில்,"" சாதனை படைப்பேன் என்று நான் நினைக்க வில்லை. போட்டிக்கு முன், நான் மிகவும் சோர்வடைந்து இருந்தேன்.இருப்பினும் சிறப்பாக செயல்பட வேண்டும் என எனக் குள்ளாக சொல்லிக் கொண்டேன். இது மிகச் சிறந்த போட்டியாக எனக்கு அமையவில்லை.

ஆனால் எனது செயல்பாடு திருப்தி அளித்தது. கடந்த சில நாட்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். தற்போது எனக்கு தேவை நல்ல தூக்கம். அடுத்த உலககோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் எனது சாதனையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்,'' என்றார்

ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது.

இப்போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் காலே மைதானத்தில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 452 ரன்கள் எடுத்தது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.

3-ம் நாள் ஆட்டத்திலும் முரளிதரன், துஷாராவின் பந்துவீச்சில் இலங்கை தடுமாறியது. அடுத்தடுத்த இடைவெளியில் நியூஸிலாந்தின் விக்கெட்டுகள் சரிந்தவண்ணம் இருந்தன.

ஆனால் துவக்க ஆட்டக்காரர் மெக்கின்டோஷ் சிறப்பாக ஆடி 69 ரன்கள் எடுத்தார். பட்டேல் 26 ரன்களுக்கு வீழந்தார்.

டெய்லர் 35 ரன்களும், ரைடர் 42 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை கெüரமான நிலைக்கு உயர்த்தினர். ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து ஃபாலோ ஆனைத் தவிர்க்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டெய்லர், கேப்டன் வெட்டோரி இருவரும் பொறுமையாக விளையாடி அணியை ஃபாலோ ஆனிலிருந்து மீட்டனர்.

மெக்குல்லம் ஒரு ரன்னும், ஜேக்கப் ஓரம் 12 ரன்களுக்கு அவுட்டாக அணி தடுமாறியது.

இருப்பினும் கேப்டன் வெட்டோரியும், ஓ பிரையனும் பொறுமையாக விளையாடினர். ஆட்ட நேர இறுதியில் வெட்டோரி 33 ரன்களும், ஓ பிரையன் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை தரப்பில் முரளிதரன், துஷாரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெண்டிஸ், குலசேகரா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அதிக மெய்டன்

வீசி சாதனை

அதிக மெய்டன் ஓவர்களை வீசி முரளிதரன் சாதனை படைத்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 1752-வது மெய்டன் ஓவரை வீசி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 1751 மெய்டன் ஓவர்கள் வீசியிருந்தார்.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை: 117.4 ஓவர்களில் 452 (சமரவீரா 159, ஜயவர்த்தனே 114, தில்ஷான் 92, வெட்டோரி 4-78, மார்ட்டின் 4-77).

நியூஸிலாந்து: 105 ஓவர்களில் 281-8 (மெக்கின்டோஷ் 69, குப்தில் 24, ரைடர் 42, டெய்லர் 35 (முரளிதரன் 3-66, துஷாரா 3-80, மென்டிஸ் 1-75).