நேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்சை



நேபாள கிரிக்கெட் சங்க (சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் சேவக் படத்தை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சி.ஏ.என்., சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை. 

இதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது. நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் சேவக்கின் "ஆக்ஷன்' படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. 

இதில் சேவக் முகம் லேசாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சேவக் தான் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால், உள்ளூர் நேபாள வீரர்கள் கொதிப்படைந்தனர். 

முன்னாள் வீரர் ராஜூ பஸ்னயாத் கூறுகையில்,""நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் தங்கள் நாட்டு வீரர்களை புறக்கணித்தது பெரும் அவமானம்,''என்றார். 

இதனை மறுத்த சி.ஏ.என்., தலைமை கமிட்டி உறுப்பினர் கிரன் ராணா கூறியது:
அட்டையில் உள்ளது சேவக் படம் தான். நன்கு கூர்ந்து கவனித்தால், இவரது முகம் லேசாக மறைக்கப்பட்டு இருக்கும். 

வேண்டுமேன்றே இதை செய்யவில்லை. முழுவதும் எங்கள் தரப்பில் நடந்த தவறு தான். 

சேவக்கிற்கு நேபாளத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதை அச்சிட்ட உரிமையாளர் கூட சேவக் ரசிகராக இருந்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துள்ளார். 


விற்பனை இல்லை:

இந்த ஆண்டு மலரை நாங்கள் விற்கவில்லை. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 150 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதால், சேவக் படத்தை மாற்றிவிட்டு, மீண்டும் அச்சிடும் வாய்ப்பு இல்லை. 

தவிர, சி.ஏ.என்.,க்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.சி.ஐ.,) நல்ல நட்புறவு உள்ளது. தனது மனைவி சாக்ஷியுடன் நேபாளம் வந்த இந்திய கேப்டன் தோனி, பசுபதிநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். 

இவரை, நேபாள கிரிக்கெட்டின் தூதராக கடந்த ஆண்டு நியமித்தோம். இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். 

இவ்வாறு கிரன் ராணா கூறினார்.

இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்

பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர், பாலிவுட் நடிகை வித்யா பாலன் போன்றது,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்தார்.

பிரிமியர் லீக் "டுவென்டி-20' தொடரில் சூதாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,"" டெஸ்ட் போட்டிதான் நமது பாரம்பரியம். இதனை காப்பாற்ற ஆர்வம் கொள்வதில்லை. 

இதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எல்., தொடரை இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்(பாலிவுட் கவர்ச்சி புயல்) என குறிப்பிடலாம்,'' என்றார்.

டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி



ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது. ஐ.ஓ.சி.,யின் ஓட்டெடுப்பின் மூலம் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கிறது. இதில், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்திற்கான தேர்வு நடைபெற்றது. 

இதற்கு ஜப்பானின் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டன. முதல் சுற்று ஓட்டெடுப்பில் மாட்ரிட் நகரம் தோல்வியடைந்தது. 

எனவே, அடுத்த சுற்றில் மற்ற இரு நகரத்தில் எது வெற்றி பெறும் என ஆர்வம் அதிகரித்தது. முடிவில், டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது. 

இஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. ஏற்கனவே 1964 (டோக்கியோ), 1972 (சபோரோ, குளிர்கால), 1998 (நகனோ, குளிர்கால), ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. 

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக, டோக்கியோவுக்கு எதிர்ப்பும் இருந்தன. தற்போது, இதையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. 

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஷா அபே கூறுகையில்,"" 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். புகுஷிமா அணு உலை பாதுகாப்புடன்தான் உள்ளது. இதனால், டோக்கியாவுக்கு எந்தவித பாதிப்பும் வராது என உறுதி தருகிறேன்,'' என்றார். 

சச்சினுக்கு கங்குலி ஆதரவு



சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் அக்., 31ல் துவங்குகிறது. 

இதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) என, இருவருமே சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியை, தங்களது மண்ணில் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கங்குலி கூறியது:

சச்சினின் சொந்தமண் மும்பை. இங்கு தான் இவரது அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் விளையாடினால், அது உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். தவிர, அவரது விருப்பத்தை நிறைவேற்றியது போல இருக்கும். 


மீண்டும் வராது:

இதுபோன்ற சம்பவம் மீண்டும் வரப்போவதில்லை. இப்போதைய நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த ஒரு வீரராலும், எப்போதும் முறியடிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வு நடக்கும் போது, இதைக் காண நாம் எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.

இது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். சச்சினும் இந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இப்போட்டியில் பேட்டிங்கில் திணறக் கூடாது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு வேண்டும்.


நிரப்ப முடியாது:

சச்சின் ஓய்வுக்குப் பின், இவரைப் போன்ற வீரரை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது மிக கடினம். எதிர்வரும் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை சதம் அடித்து சச்சின் ஓய்வு பெற்றால், இப்போது விமர்சனம் செய்பவர்கள், இன்னும் கொஞ்சம் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று பேசுவர். 

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40 வயதில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதற்காக இவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில், அது தனிமனித விளையாட்டு. கிரிக்கெட் அப்படியல்ல சரியாக விளையாடவில்லை எனில் தேர்வு செய்ய மாட்டார்கள்.


கடின காலம்:

சமீபத்திய சூதாட்ட புகார்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு கடின காலம் தான். எனினும், இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும். ஆனால், அடுத்து வரும் 16 மாதங்கள், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் என, இந்திய அணிக்கு தொடர்ந்து சோதனை காத்திருக்கிறது. 

இவ்வாறு கங்குலி கூறினார்.

இந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்



இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார். 

தற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்குகிறது. 

தவிர, 3 பயிற்சி போட்டியும் உள்ளன. மொத்தம் 4 வாரங்கள் இத்தொடர் நடக்கிறது. 

போட்டி நடக்கும் இடங்களை தேர்வு செய்யும் சுழற்சி முறைப்படி, குஜராத்தின் ஆமதாபாத்தில்தான் சச்சின் தனது 200வது டெஸ்ட்டில் விளையாட வேண்டும். 

ஆனால், இதை நடத்த மும்பை, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் போட்டியிடுகின்றன. 

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" இத்தொடருக்கான தேதி, மைதானம் போன்றவை விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.