மீண்டும் சேவக், காம்பிர்



உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், சேவக், காம்பிர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்,'' என, முன்னாள் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக, டில்லியை சேர்ந்த சேவக், காம்பிர் ஜோடி அசத்தியது. மோசமான "பார்ம்' காரணமாக, சமீபத்திய போட்டிகளில் இவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இவர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா, முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேவக், காம்பிர் ஜோடி, மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறது. 

இதனையடுத்து இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்தது என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் வீரர் கிரண் மோரே கூறியது: சேவக், காம்பிர் இருவரும் திறமையானவர்கள். சமீபகாலமாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது எனக் கூறுவது தவறு. 

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம். சேவக் குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும். இவர், உலகின் எந்த ஒரு பகுதியிலும், எந்த ஒரு பவுலரை கண்டு அஞ்சாமல் அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை படைத்தவர். 

இவர்கள் அணியில் இல்லாத போது, தவான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதனால் தான் இவர்கள் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது தாமதமாகிறது.

ஷிகர் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடும் ரோகித், டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். 

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட அம்பதி ராயுடு, அஜின்கியா ரகானே, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்திய கேப்டன் தோனிக்கு பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார். இவரது கீப்பிங் திறமையை காட்டிலும், பேட்டிங்கை வைத்து தான் அணியில் இடம் பிடிக்கிறார்.

இவ்வாறு கிரண் மோரே கூறினார்.

சதம் அடிக்காமல் சாதனை

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், "சதத்தில் சதம்' அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார்.
கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா, 39, 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி உள்ளார். 

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் இவர், டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக ரன் 96 (எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2013, இடம்-ஓவல்).

மிஸ்பா, இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 

இவரை அடுத்து பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ரன், 12 அரைசதம்), ஜிம்பாப்வேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ரன், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். 

இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ரன்கள்) உள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய மிஸ்பா, 4 அரைசதம் உட்பட 260 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார். 

இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இந்திய கேப்டன்களில், அசார், கங்குலி, தோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

கவாஸ்கருக்கு விருது கிடைக்காதது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்காதது ஏன் என, இப்போது தெரியவந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல பிரிவுகளில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்) உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ரூ. 5 லட்சம் மதிப்பிலான இவ்விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிரிராஜ் சிங் (பாரா விளையாட்டு), மேரி டிசவுசா (தடகளம்), அனில் மேன் (மல்யுத்தம்), சையது அலி (ஹாக்கி) ஆகியோரது பெயர் மட்டும் இடம் பெற்றன. 

கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இல்லை. இதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வாழ்நாள் சாதனையாளருக்காக அர்ஜுனா விருது தான் முதலில் வழங்கப்பட்டு வந்தது. 


விதிகளில் மாற்றம்:

இதை உமாபாரதி விளையாட்டு அமைச்சராக இருந்த போது (2002) மாற்றினார். அதாவது, வாழ்நாள் சாதனையாளர் விருதை, மறைந்த ஹாக்கி வீரர் தயான்சந்த் பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2002க்கு முன் அர்ஜுனா விருது வென்றவர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது. 


தகுதி தெரியவில்லை:

1975ல் கவாஸ்கர், 1974ல் விஜய் அமிர்தராஜ் அர்ஜுனா விருது பெற்று விட்டனர். இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான தகுதி என்ன எனத் தெரியாமல், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) இவர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளது. 

இதனால் தான் இவர்களுக்கு விருது தரப்படவில்லை என, மத்திய விளையாட்டு விருது கமிட்டி தெரிவித்தது.


யாருக்கு துரோணாச்சார்யா:

சிறந்த பயிற்சியாளருக்காக வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு, ஐந்து பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 

இதன் படி, பர்னிமா மகட்டோ (வில்வித்தை), நரேந்திரா சிங் செய்னி (பெண்கள் ஹாக்கி), ராஜ் சிங் (மல்யுத்தம்), கே.பி.தாமஸ் (தடகளம்), மகாவீர் சிங் (குத்துச்சண்டை) ஆகியோரது பட்டியல், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

கால்பந்து தூதராக டோனி நியமனம்



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தீவிர கால்பந்து ரசிகர் ஆவார். தனது பள்ளி பருவத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து விளையாடியவர். அதன்பின் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பியது.

தற்போது டோனியை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இந்திய தூதராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி நிறுவனம் நியமித்து உள்ளது. 

இந்தியாவில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை பிரபலபடுத்தும் விளம்பரங்களில் அவர் தோன்றுவார். 

கால்பந்து போட்டியுடன் இணையுங்கள் என்று ரசிகர்களை அழைக்க உள்ளார்.

இதுகுறித்து டோனி கூறுகையில், கிரிக்கெட் மீது ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளையும் ரசிக்க வேண்டும். 

இதேபோல் மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்றார்.

சாதிக்க உதவிய தோனியின் டிப்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறந்த கேப்டனாக சாதிக்க, தோனி வழங்கிய ஆலோசனைகள் உதவியது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
சமீபத்தில் ஜிம்பாப்வே சென்ற விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 5-0 என தொடரை வென்றது. இதன்மூலம் அன்னிய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரின் போது முதுகுபகுதியில் காயமடைந்த தோனி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. 

இதனையடுத்து அணியின் கேப்டன் பொறுப்பு என்னிடம் வந்தது. அப்போது, வெவ்வேறு சூழ்நிலைகள் எப்படி செயல்படுவது, நெருக்கடியான நேரத்தில் "கூலாக' எப்படி அணியை வழிநடத்துவது என தோனியிடம் ஆலோசனை கேட்டேன். தோனியின் ஆலோசனைகள், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி சாதிக்க உதவியது.

ஜிம்பாப்வே வெற்றி குறித்து தோனியிடம் பேச முயன்றேன். ஆனால், தற்போது இவர், "பிஸி'யாக இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக ஓய்வு நேரத்தில் இவரை தொடர்பு கொள்வது கடினம். விரைவில் தோனியை சந்தித்து, ஜிம்பாப்வே அனுபவம் குறித்து தெரிவிப்பேன்.

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "நம்பர்-1' இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால், இவரால் முதலிடத்துக்கு முன்னேற முடிந்தது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இவருடன் இணைந்து விளையாடி உள்ளேன். உலக கோப்பை (19 வயது) தொடருக்கு கேப்டனாக இருந்த போது எனது அணியில் ஜடேஜா இடம் பெற்றிருந்தார். தற்போது நாங்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவரது சிறப்பான ஆட்டம் வரும் காலங்களிலும் தொடரும் என நம்புகிறேன்.

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரை வரவேற்கிறேன். இதன்மூலம் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடிக்கலாம். 

கடந்த 2009ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இத்தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியில் இடம் பிடிக்க முடிந்தது. சவால் நிறைந்த இத்தொடர் மூலம் திறமையான இளம் வீரர்களை கண்டறியலாம்.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.