எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்ற ஜடேஜா


ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வியக்கத்தக்க வகையில் எழுச்சி பெற்று அசத்தினார் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா.

கடந்த 2008ல் ராஜஸ்தான் ஐ.பி.எல்., அணி மூலம், ஜடேஜாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலிய அணியின் வார்ன் தான். இத்தொடரில் ராஜஸ்தான் கோப்பை வெல்ல, இந்திய "டுவென்டி-20' அணியில் இடம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்டு வந்தார்.

கடைசியில், கடந்த 2012 தொடரில் சென்னை அணிக்காக ரூ. 10.66 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், ஐந்தாவது தொடரில் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. அதேநேரம் கேப்டன் தோனியின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து கிடைத்தது. 


புதிய சாதனை:

முதல் தர கிரிக்கெட்டில் மூன்று முறை "டிரிபிள்' சதம் (314, 303, 331) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார் ஜடோஜா. இதனால், டெஸ்ட் அணியில் இவரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பிரக்யான் ஓஜாவுக்குப் பதில், சென்னை டெஸ்டில் ஜடேஜாவை களமிறக்கினார் தோனி. நிறைய பேரின் புருவங்கள் உயர்ந்தன. கடைசியில் விமர்சகர்கள் வாயை அடைந்து, தன் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-0 என, வென்று புதிய வரலாறு படைத்தது. பவுலிங்கில் அசத்திய அஷ்வின் (29 விக்.,) தொடர் நாயகன் ஆனார். பேட்டிங்கில் முரளி விஜய் (430), புஜாரா (419) இருவரும் 400 ரன்களுக்கும் மேல் குவித்தனர்.


அசத்தல் பவுலிங்:

இவை அனைத்தையும் விட ஆச்சரியம் ரவிந்திர ஜடேஜா, 24, தான். இத்தொடரில் தொடர்ந்து சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். பந்தை வேகமாக அனுப்பும் இவர், சரியான அளவு, நீளத்தில், "ஆப்-ஸ்டம்ப்' அல்லது "மிடில்-ஸ்டம்ப்பை' துல்லியமாக தாக்கும் வகையில் பவுலிங் செய்கிறார். 

அனைத்து பந்தையும் இதேபோல வீசுவதால், பேட்ஸ்மேன்கள் திணறிப் போக, எதிரணியினரால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இவருக்குத் தான் இரண்டாவது (24) இடம். 


சிறந்த பந்து:

சில நேரங்களில் நம்பமுடியாத அளவில் பவுலிங் செய்தார். ஐதராபாத் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மைக்கேல் கிளார்க் வந்த வேகத்தில், இவரது சுழலில் ஏமாந்து "டக்' அவுட்டானார். ஜடேஜா வீசிய பந்தை "இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சு' என வர்ணித்தார் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர். 


ஆட்ட நாயகன்:

இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சை கிளார்க் தான் நன்கு எதிர்கொள்வார் என நம்பப்பட்டது. இதை தவிடு பொடியாக்கினர் ஜடேஜா. கிளார்க்கின் ஆறு இன்னிங்சில், 5 முறை இவரிடம் தான் சிக்கினார். டில்லி டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றிய இவர், முதல் இன்னிங்சில் 43 ரன்கள் எடுக்க, ஆட்டநாயகன் விருதை வென்றார். 


எதிர்காலம் எப்படி:

 இந்திய ஆடுகளில் இவர் அசத்தினாலும், அன்னிய மண்ணில் சாதிப்பது சிரமம் தான். இதற்கேற்ப பேட்டிங்கிலும் எழுச்சி பெற்றால், அனைத்து வித ஆடுகளங்களிலும் சாதித்து, சிறந்த "ஆல்-ரவுண்டராக' அணியில் இடத்தை தக்கவைக்கலாம். 

ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக்


ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. போட்டிகளின் விறுவிறுப்பு எப்படி ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறதோ அதுபோல ஐ.பி.எல். போட்டிக்கான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஐ.பி.எல். போட்டியை சோனி செட் மேக்ஸ் டெலிவிசன் ஒளிபரப்பி வருகிறது. போட்டிக்கு முன்பும், பிறகும் அந்த டெலிவிசனில் ஒளிபரப்பாகும். ஐ.பி.எல். பாடல் ரசிகர்களின் வர வேற்பை பெற்றுள்ளது. 

ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் கிலி கிலியா தம்பிங் தபாங் தம்பக் தம்பக் கிலி கிலியா என்ற இந்த பாடல் வரிகள் தான் அனைவரது வாயிலும் முனு முனுத்தவாறே இருக்கிறது. 

கிரிக்கெட் பற்றி தெரியாத 2 வயது சிறுவன் கூட அந்த பாடலை பாடும் அளவுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இந்திப்பாடல் வரிக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. 

ஆனால் காதால் கேட்பதற்கும், வாயால் முனுமுனுக்க மிகவும் எளிதாக இருக்கிறது. செட் மேக்ஸ் டெலிவிசனின் வர்ணனையாளர்களே இந்த பாடலை பாடி விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். 

அதில் வரும் நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே இந்தபாடல் விளம்பரப்படுத்தப்பட்டதால் தற்போது எல்லோராலும் பாடக்கூடிய அளவுக்கு உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டது. 

ஒவ்வொரு இன்னிங்சும் இடையே பவுண்டரி, சிக்சர் மற்றும் விக்கெட் விழுவதை காட்டும் முன்பு நடன அழகிகள் நடனத்துடன் அந்த பாடல் இசைக்கப்படுகிறது.

IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை


இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய வீரரான அவரை மும்பை இந்தியன்ஸ அணி ரூ.5.30 கோடிக்கு எடுத்தது. ஆனால் மும்பை அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் மேக்ஸ்வெலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அவருக்கு ஆடவாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டு விட்டார்.
 
கேப்டன் பாண்டிங், போலார்ட், ஜான்சன், சுமித் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் ஆடினார்கள். இனிவரும் போட்டிகளில் சுமித் அல்லது ஜான்சன் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

புது வரலாறு படைக்குமா பஞ்சாப்


ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

கடந்த 5 தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வென்றதில்லை. இம்முறை வெற்றி பெற்று புது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மாத்யூஸ் தலைமையிலான புனே அணியை எதிர்கொள்கிறது. 

முதல் போட்டியில், ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் புனே அணி உள்ளது. 

துவக்கத்தில் ராபின் உத்தப்பா கைகொடுக்கலாம். யுவராஜ் இன்றாவது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும். 

ராஸ் டெய்லர் எழுச்சி பெற்றால் நல்லது. சாமுவேல்ஸ், கேப்டன் மாத்யூஸ் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். 

கில்கிறிஸ்ட் பலம்: பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் கில்கிறிஸ்ட் தான் மிகப் பெரும் பலம். 

இவர் அதிரடி காட்டினால், எளிதாக வெற்றி பெறலாம். ஷான் மார்ஷ் காயத்தில் இருப்பதால், இப்போட்டியில் பங்கேற்க மாட்டார். 

எனவே, கில்கிறிஸ்ட்டுடன் டேவிட் ஹசி அல்லது பாமர்ஸ்பச் துவக்கம் தர வாய்ப்புண்டு. "மிடில்-ஆர்டரை' கவனித்துக் கொள்ள, அசார் மகமூத், டிமிட்ரி மஸ்கரானஸ் உள்ளனர். 

வேகப்பந்துவீச்சில் ஜொலிக்க ரியான் ஹாரிஸ், மன்பிரீத் கோனி, பிரவீண் குமார் காத்திருக்கின்றனர். அனுபவ பியுஸ் சாவ்லா உள்ளது நம்பிக்கை அளிக்கிறது.

சேப்பாக்கத்தில் 33-வது ஐ.பி.எல். போட்டி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 33-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதுவரை நடந்த 32 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 21 போட்டியில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது. 

2011-ம் ஆண்டு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் மோதிய 8 ஆட்டத்திலும் வென்று சாதனை படைத்து கோப்பையை வென்றது. இங்கு சூப்பர் கிங்ஸ் வீரர் முரளிவிஜய் 2 முறை சதம் அடித்துள்ளார். 

2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 56 பந்தில் 127 ரன்னும், கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 58 பந்தில் 113 ரன்னும் எடுத்தார்.