வாழ்த்து மழையில் டிராவிட்


இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். 

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

தவிர, லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற, இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 


பத்மஸ்ரீ யோகேஷ்வர்:

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத், 2012 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


10வது கிரிக்கெட் வீரர் 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், லாலா அமர்நாத், வினோ மன்கட், உள்ளிட்ட வீரர்கள் வரிசையில் பத்ம பூஷண் விருது பெற்ற 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார் டிராவிட். 

இந்திய அணியின் தூண் என்ற போற்றப்பட்ட இவர், 164 டெஸ்டில் 13, 288 ரன்கள், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் எடுத்துள்ளார். 

பத்ம பூஷண் விருது வென்ற இவருக்கு சக வீரர் ரகானே உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சினிடம் இருந்து பாடம் கற்ற பிரக்யான் ஓஜா


இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுகுறித்து பிரக்யான் ஓஜா கூறியது: ஐ.பி.எல்., தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்த சிறந்த மேடையாக திகழ்கிறது. கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடினேன். 

ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடித்தேன். ஒவ்வொரு அணியிலும் உள்ள சீனியர் வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுபவம் போட்டியில் சாதிக்க உதவும்.

முதல் நான்கு தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது சிறப்பாக (54 போட்டி, 60 விக்கெட்) பந்துவீசினேன். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய போது லேசான பின்னடைவை சந்தித்தேன். அதன்பின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எழுச்சி கண்டு, இழந்த "பார்மை' மீட்டேன்.

மும்பை அணியில் இணைந்த பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முகாமில் இவருக்கு பந்துவீசுவதன் மூலம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். பவுலிங் குறித்து சச்சின் வழங்கிய ஆலோசனைகள் போட்டியில் சாதிக்க கைகொடுத்தது. இவர் சிறந்த வீரராக மட்டமல்லாமல், நல்ல மனிதராகவும் இருப்பது சிறப்பம்சம்.

இம்முறை எங்கள் அணியின் ஆலோசகராக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வருகையால் எங்கள் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவரிடம் இருந்து சுழற்பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் சிறந்த பவுலராக வலம் வர வாய்ப்பு உள்ளது.

கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை உலக கோப்பை பெற்றுத் தந்துள்ளார். இம்முறை, மும்பை அணியை திறம்பட வழிநடத்தி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று தருவார் என நம்புகிறேன்.

எங்கள் அணியில் உள்ள மற்றொரு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இளம் வீரர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயிற்சியாளர் ஜான் ரைட், இந்திய அணியை எழுச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். இதேபோல இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார் என நினைக்கிறேன். 

தவிர இம்முறை பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு ஜான் ரைட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இது போட்டியில் சாதிக்க உதவும்.
இவ்வாறு பிரக்யான் ஓஜா கூறினார்.

தோனிக்கு முதல் மரியாதை


ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா நேற்று கோல்கட்டாவில் வண்ணமயமாக நடந்தது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்தினர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26) இன்று துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. 

இதன் துவக்கவிழா நேற்று கோல்கட்டாவில் உள்ள "சால்ட் லேக்' மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. முதலில் மிகப் பெரிய சிவப்பு பட்டனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்த, மறுபக்கம் குத்துவிளக்குகள் ஜொலிக்க, விழா அமர்க்களமாக துவங்கியது. 

தொடர்ந்து "டிரம்சில்' பறந்தவாறு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்த, சீனப் பெண்கள் "மெகா' முரசு அடித்து முழக்கம் எழுப்ப, அரங்கில் ஐ.பி.எல்., கோப்பையுடன் அழகிய பெண் ஒருவர் பலூனில் தலைகீழாக பறந்து வந்தார். 

பின் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் வசம் கோப்பையை அந்த பெண் வழங்கினார். அப்போது 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும் வகையில் பலூன்கள் இடம் பெற்றிருந்தன. 

அடுத்து "பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே அசத்தலாக நடனமாடினார். அடுத்து ராணி போல் பவனி வந்த கத்ரினா கைப் "ஷீலா கா ஜவானி' என்ற பிரபல பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். 

கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கானும் அசத்தலாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பாடகி உஷா உதுப், அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் ஆகியோர் ரம்மியமாக பாடி உற்சாகம் அளித்தனர். கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா'வுடன் துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.


தோனிக்கு  முதல் மரியாதை

துவக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் அரங்கில் அணிவகுத்து நின்றனர். பின் போட்டிகளின் போது விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வோம் என்று உறுதி அளிக்கும் வகையில் மைதானத்தில் இருந்து தொடு திரையில் விரலால் தொட்டு கையெழுத்திட்டனர். 

இதில் முதல் நபராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அழைக்கப்பட்டார். அவர் கையெழுத்திட, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

கோல்கட்டாவில் கோலாகலம் - இன்று ஐ.பி.எல்., துவக்க விழா




ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா இன்று கோல்கட்டாவில் கோலாகலமாக நடக்க உள்ளது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப் மற்றும் பிரபல அமெரிக்க "ராப்' பாடகர் பிட்புல் உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்த காத்திருக்கின்றனர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26)நாளை துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 76 போட்டிகள் என, அடுத்த 51 நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது.

 இதன் துவக்கவிழா இன்று கோல்கட்டாவில் உள்ள, இந்தியாவின் மிகப் பெரிய "சால்ட் லேக்' மைதானத்தில் நடக்கிறது. இங்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம். கால்பந்து போட்டிக்கான இந்த மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை இழையிலான களம் பாதிக்கப்படாமல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு துவங்கும். முதலில் ராட்சத பலூன் ஒன்று ஐ.பி.எல்., கோப்பையுடன் மைதானத்தில் வந்திறங்கும். "ஐ.பி.எல்., உலகம்' என்ற பெயரிலான இந்நிகழ்ச்சியில், 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும். பின் "ஓம்' என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் தங்களது கையில் "டார்ச்' ஒளியுடன் கலைஞர்கள் அணிவகுத்து நிற்பர்.

தொடர்ந்து "பாலிவுட்' நடிகரும் கோல்கட்டா அணி உரிமையாளருமான ஷாருக் கான், முன்னணி நடிகைகளான கத்ரினா கைப் மற்றும் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்விக்க உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் தன் பங்கிற்கு அமர்க்களப்படுத்த காத்திருக்கிறார். 

பாலிவுட் இசையமைப்பாளர் பிரித்தம் இசையில் 300க்கும் மேற்பட்டோர் நடனமாட உள்ளனர். சீனாவின் "ரெட் பாப்பி' அமைப்பை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்று திறமை வெளிப்படுத்த உள்ளனர். 

நடனப் பெண்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம், பறந்து இசைக்கும் "டிரம்ஸ்' கலைஞர்கள், "லேசர் ÷ஷா' போன்றவை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். ஐ.பி.எல்., அணிகளின் கேப்டன்கள் அணிவகுப்பு மற்றும் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெறும். 

இது குறித்து ஷாருக் கான் கூறுகையில்,""இதுவரை இந்திய ரசிகர்கள் பார்த்திராத வகையில் துவக்க விழா மிகப் பிரமாண்டமாக இருக்கும். எனது படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு கத்ரினா, தீபிகாவுடன் சேர்ந்து ஆட உள்ளேன்,''என்றார். 

ஓய்வு முடிவு சச்சினின் கையில்


இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான சேவை செய்துள்ளார் சச்சின். அவரை ஓய்வு பெறும்படி யாரும் சொல்ல முடியாது. அவர் நினைக்கும் போது, தனது சொந்த முடிவின்படி விடைபெறுவார்,'' என, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. இவர், 198 டெஸ்டில் 15,837 ரன்கள், 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்துள்ளார். தவிர, சதத்தில் சதம் கண்டது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

ஒரு நாள் போட்டியிலிருந்து விடைபெற்ற இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து டெஸ்ட் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.
இது குறித்து ராஜிவ் சுக்லா கூறியது: 

இந்திய அணிக்கு சச்சின் அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார். எப்போது, விடைபெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது அவர் செல்லலாம். உலக கிரிக்கெட் அரங்கில், இவரை விட அதிக சாதனைகள் யாரும் தொட்டதில்லை. எனவே, இவரை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கடி காரணமாக, எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலங்கை வீரர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். தவிர, இந்த விஷயத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்துள்ளோம். 


போட்டி மாற்றமில்லை

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை, வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவுமில்லை. ஏனெனில், ஒரு போட்டியை, வேறொரு இடத்திற்கு மாற்ற, இரண்டு மாதங்கள் ஆகும். தவிர, ஆடுகளத்தை தயார்படுத்த, இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும். இங்கு போட்டிகளை நடத்தக்கூடாது என மக்கள் சொல்லவில்லை. 

இலங்கை வீரர்கள் மட்டும் இங்கு விளையாடக்கூடாது என்றுதான் கூறியுள்ளனர். இதை, இலங்கை கிரிக்கெட் போர்டும் ஏற்றுக் கொண்டு விட்டது. 

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.