ஒலிம்பிக் தந்த மாற்றம்


லண்டனில் கடந்த ஆண்டு நடந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்று சாதித்தவர்களின் வாழ்க்கை தற்போது எப்படி மாறி உள்ளது என்பதை அவர்களிடமே கேட்போம்.

சுஷில் குமார்(மல்யுத்தம், வெள்ளி):

கடந்த 2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பு எப்படி இருந்தேனோ, இதுவரை அப்படி தான் இருக்கிறேன். ஒரு நட்சத்திரமாக என்னை கருதவில்லை. 

லண்டன் ஒலிம்பிக் பதக்கத்திற்கு பிறகு எந்த ஒரு பொருளும் வாங்கவில்லை. என்னிடம் சொகுசு கார் முதல் வீடு வரை எல்லாம் உள்ளது. மல்யுத்தம் தான் எனக்கு வாழ்க்கை. அதன் வழியில் போகவே விரும்புகிறேன்.

யோகேஷ்வர் தத்(மல்யுத்தம், வெண்கலம்):

பதக்கம் வென்று நாடு திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனது குடும்பத்தினர்கள், பயிற்சியாளர், நண்பர்கள் என எல்லாருடைய முயற்சி தான் நான் சாதிப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு ஆடி கார் வாங்கியுள்ளேன். தற்போது நிறைய பாராட்டு விழாக்களில் பங்கேற்கிறேன். போட்டியில் கவனம் செலுத்துவதை தவிர, வேறு எதிலும் ஆர்வம் இல்லை. 

செய்னா நேவல்(பாட்மின்டன், வெண்கலம்):

பொதுவாக நான் எந்த ஒரு பிரச்னையும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. ஒரு நட்சத்திரமாக என்னை என்றும் கருதியது கிடையாது. நான் ஒரு சாதாரண பாட்மின்டன் வீராங்கனை. கடவுளின் ஆசியால் சாதிக்கமுடிந்தது. சமீபத்தில் "ஐ-போன்' ஒன்று வாங்கினேன். 

தாய்லாந்து தொடருக்கு முன் பி.எம்.டபிள்யு கார் வாங்கினேன். ஒலிம்பிக்கிற்கு பிறகு சில போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 

மேரி கோம்(குத்துச்சண்டை, வெண்கலம்):

என் கணவர் தான் பக்கபலமாக உள்ளார். பதக்கத்திற்கு பின் பெயர், புகழ், பணம் என எல்லாம் எனக்கு கிடைத்தது. இருந்தாலும் எனது குத்துச்சண்டை அகாடமியை தான் பெரிய சொத்தாக கருதுகிறேன். பாராட்டு விழாவில் பங்கேற்கும் போது, மனது முழுவதும் குழந்தைகளை பற்றிதான் இருக்கும்.

ககன் நரங்(துப்பாக்கி சுடுதல், வெண்கலம்):

 சரிவுகளின் போது எனது குடும்பத்தினரும், நண்பர்களும் தான் தூண் போல உறுதுணையாக இருந்தனர். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். டில்லியில் நடந்த "பார்முலா-1' கார்பந்தயத்தை கொடி அசைத்து முடித்து வைத்தது மறக்க முடியாதது. துப்பாக்கி சுடுதலை சிறிய கிராமங்கள் வரை எடுத்து சென்று, திறமையான இளைஞர்களை தேர்வு செய்து, முறையான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். 

விஜய் குமார்(துப்பாக்கி சுடுதல், வெள்ளி):

 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு 15 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளாமல் தவித்தேன். பதக்கம் வெல்ல என் பெற்றோர் தான் முழுக்காரணம். அடுத்து வரும் போட்டிகளுக்காக இரண்டு புதுரக துப்பாக்கி மற்றும் அதிகம் தோட்டாக்களை வாங்கினேன். ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு இது இரண்டும் தான் முக்கியமான சொத்து.

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். அப்போது என் பள்ளி நினைவுகள் வந்தது.

சர்வதேச அளவில் பயிற்சி மேற்கொள்ளும் அளவிற்கு ஒலிம்பிக் பயிற்சி மையத்தை உருவாக்குவேன். திறமையான கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பேன். 

அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வில் சர்ச்சை


14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திறைமை இருந்தும் சிலர் தேர்வு செய்யப்படாமல் சச்சின் மகனை தேர்வு செய்ததன் மர்மம் என்ன ? என தேர்வு செய்யப்படாதவர்களின் ‌பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40). இவர் சமீபத்தில் ஒரு நாள் போட்டிக்கு குட்பை சொல்விட்டார். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).

இவர் மகாராஷ்டிரா கிரிக‌்கெட் சங்க கிரிக்கெட் சார்பில் பள்ளிகளுக்கிடையயான போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 14 வயதுக்குட்‌ப்டோர் மும்பை அணியில் இடம் பெற்றார். இவர் தேர்வு செய்யபட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஓரவஞ்சனை காட்டுவதா ?

இந்நிலையில் மும்பை டான்புஸ்‌கோ பள்ளி மாணவன் பூபன்லாவனி (14), 398 (277 பந்துகளில் ) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அதே போன்று 200 ரன்கள் வரை எடுத்த சில மாணவர்கள் தேர்வாகவில்லை. 

அப்படியிருக்கையில், வெறும் 124 ரன்கள் குவித்ததால் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். சச்சின் மகன் என்பதால் இந்த சலுகையா என , தேர்வாகாத மாணவர்களின் பெற்றோர்கள் ‌ஆவேசப்பட்டனர். 

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஓரவஞ்சனை காட்டுவதாகவும், ‌இதில் ஏதோ மர்மம் உள்ளதாகவும் கொந்தளிக்கின்றனர்.

பெற்றோர்களின் இந்த குற்றச்சாட்டினை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. 

திறமையான மாணவர்களை சங்கம் என்றும் புறக்கணிக்கவில்லை. 

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திறமையின் அடிப்‌படையில் தான் தேர்வாகியுள்ளார் என்கிறது.

சச்சினுக்கு வந்த ஆசை - பி.சி.சி.ஐ., மறுப்பு


ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற சச்சினின் வேண்டுகோளை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது.

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள், ஜன.16ம் தேதி துவங்குகின்றன. பொதுவாக ரஞ்சி போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் நடக்கும். 1964-65 தொடரில் மும்பை - சர்வீசஸ் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, மும்பையில் நடந்தது. 

இம்முறை சுழற்சி விதிப்படி, மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி, சர்வீசஸ் அணியின் சொந்த மண்ணான டில்லி, பாலம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியை, தனது சொந்த ஊரான மும்பைக்கு மாற்ற வேண்டும் என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை அணிக்காக காலிறுதியில் சதம் அடித்த சச்சின், அரையிறுதியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் இப்படித் தெரிவித்தார் எனத் தெரிகிறது. 

இதற்கு பதில் அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரின் விதிப்படி, இப்போட்டி டில்லியில்தான் நடக்க வேண்டும். சச்சினின் கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார். 

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை


இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் வளர்ந்து வரும் வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுக்க சில காலம் ஆகும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சரத் பவார் தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்தியாவில் ஏராளமான திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

எனினும் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஒரு காலத்தில் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து மட்டும்தான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவெடுத்தனர்.

தற்போது உத்தரப் பிரேதசம், ஜார்க்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க கொஞ்ச நாள்கள் ஆகும். இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமிருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

கேப்டன் பதவியை உதறுங்கள் - தோனிக்கு டிராவிட் அட்வைஸ்


தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நீடிப்பது கடினம். இதனை உணர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என, டிராவிட் ஆசோசனை கூறினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது. 

இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட தோனிக்கு தகுதி உள்ளது. இப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட முடியும். அனைத்து நேரங்களிலும் கேப்டனாக இருந்தால், அவருக்கே சலிப்பு ஏற்பட்டு விடும். 

எனவே, "டுவென்டி-20', மற்றும் ஐ.பி.எல்., சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதே நேரத்தில் "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டியில் சாதாரண வீரராக நீடிக்கலாம்.

தற்போதைய நிலையில் கேப்டன் பதவிக்கு தோனிக்கு மாற்று வீரர் யாரும் கிடையாது. ஒருகட்டத்தில் காம்பிரை நியமிக்கலாம் என நினைத்தோம். ஆனால், காம்பிர் டெஸ்டில் "பார்ம்' இல்லாமல் தவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. 

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லியிடம் அளிக்கலாம். இளம் வீரராக இருப்பதால், இவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. 

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நிலையான இடத்திற்கு கொண்டு சென்ற பின் கேப்டன் பொறுப்பை அடுத்த நபரிடம் தோனி கொடுக்கலாம். இவரது தலைமைப் பண்பை பாராட்டாமல் இருக்க முடியாது. 

சமீபத்திய நாக்பூர் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அப்போது வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஓவரில், தோனி பயப்படாமல் "ஸ்டம்சிற்கு' அருகில் நின்றார். தவிர, இக்கட்டான நிலையில் அணியை பலமுறை மீட்டுள்ளார். 

இவ்வாறு டிராவிட் கூறினார்.