சென்னை கிங்ஸ் இக்கட்டான நிலையில் மும்பையுடன் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளும் வெற்றியை நோக்கி களம் காணுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இன்றைய "பி' பிரிவு முக்கிய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இருந்து ஏற்கனவே சிட்னி சிக்சர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. 

கடந்த 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன் லீக் தொடரில் கோப்பை வென்றது தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் சாம்பியன் என, தொடர்ந்து அசத்திய இந்த அணி, இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தடுமாறுகிறது. 

தொடரின் முதல் இரு லீக் போட்டியில் சிட்னி மற்றும் லயன்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்வியால், அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் அதிசயங்கள் நிகழ்த்தினால் மட்டுமே, அரையிறுதி குறித்து யோசிக்கலாம். 

பேட்டிங் ஏமாற்றம்:

சென்னை அணிக்கு பேட்டிங்கில் முதல் போட்டியில் ரெய்னா, டுபிளசி மட்டும் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் நன்றாக ரன்கள் சேர்க்கத் துவங்குகின்றனர். ஆனால், தொடர்ந்து களத்தில் நிலைக்க மறுப்பதால், அணியும் தடுமாறுகிறது. 

துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருடன் மைக்கேல் ஹசியை மீண்டும் களமிறக்கிப் பார்க்கலாம்.

பவுலிங் சொதப்பல்:

அணியின் பவுலிங் தான் மிகவும் சொதப்பலாக உள்ளது. முதல் போட்டியில் 185, அடுத்து 159 ரன்கள் என விட்டுக்கொடுத்தனர். போலிஞ்சர் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். மற்றபடி ஹில்பெனாஸ் விக்கெட் வீழ்த்த தடுமாறுவது பலவீனம் தான். கடந்த இரு போட்டிகளில் ஏமாற்றிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்குப் பதில் இன்று ஜகாதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

மும்பை பரிதாபம்:

"நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, முதல் போட்டியில் லயன்சிடம் வீழ்ந்தது. யார்க்ஷயருடன் நல்ல நிலையில் இருந்த போது, மழை வந்துவிட எல்லாம் வீணாக போனது. சீனியர் சச்சின் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். டுவைன் ஸ்மித், போலார்டு மட்டும் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். ரோகித் சர்மா பந்துகளை வீணடிப்பது நீடிக்கிறது.

எழுச்சி பெறுவாரா:

வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில், மலிங்கா அதிக விக்கெட் முடியாமல் தடுமாறுகிறார். இன்று இவர் எழுச்சி பெற்றால், சென்னை பாடு திண்டாட்டம் தான். தவிர, மிட்சல் ஜான்சன், சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோரும் இன்று கைகொடுக்க வேண்டும்.
வெளியேறுவது யார்:

இத்தொடரில் இரு போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை அணி 2 புள்ளியும், சென்னை புள்ளிகள் எதுவும் பெறாமலும் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்பதால், களத்தில் கடும் போட்டி காத்திருக்கிறது.

எல்லாம் "சிங்கங்கள்' கையில்...

என்ன தான் மும்பை, சென்னை அணிகள் வெற்றிக்கு போராடினாலும், இந்த அணிகளின் தலைவிதி லயன்ஸ் (சிங்கங்கள்) அணியின் கையில் தான் உள்ளது. 

* ஏனெனில், ஏற்கனவே இரு போட்டியில் வென்றுள்ள லயன்ஸ், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் யார்க்ஷயரை வென்றால், 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். சென்னை, மும்பை, யார்க்ஷயர் அணிகள் வெளியேறும்.

* அதே நேரம், லயன்ஸ், மும்பை அணிகள் இன்று தோற்கும் பட்சத்தில், யார்க்ஷயர் 6, சென்னை 4 புள்ளிகள் பெறும். இந்த இரு அணிகள் மோதும் (அக்., 22) லீக் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

* மாறாக, இன்று மும்பை, யார்க்ஷயர் வென்றால் இரு அணிகளும் தலா, 6 புள்ளி பெறும். சென்னை வெளியேறும். 

அக்., 22ல் நடக்கும் தங்களது கடைசி லீக் (மும்பை-சிட்னி, சென்னை-யார்க்ஷயர்) போட்டிகளில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

ஒருவேளை, இதில் மும்பை, யார்க்ஷயர் என இரு அணியும் வெற்றிபெற்றால், "ரன்ரேட்' அடிப்படையில் ஒரு அணி முடிவாகும். இதில், தற்போதைய நிலையில் மும்பை அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. 

தோல்வி அதிகம்

சென்னை, மும்பை அணிகள் இதுவரை ஐ.பி.எல்., தொடரில் 11 போட்டிகளில் மோதின. இதில் 6ல் தோற்ற சென்னை அணி, 5 போட்டியில் மட்டும் வென்றது.

* சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரு அணிகள் மோதிய, 2011 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மழை வருமா

போட்டி நடக்கும் ஜோகனஸ்பர்க்கில் இன்று இடியுடன் கூடிய மழை வர 90 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக சென்னை, மும்பைக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டால், சென்னை அணி "அவுட்' தான். 

சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி


மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால் அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள். 

ஆனால் அவர் வசிப்பதே இந்தியாவில் .இது சச்சினுக்கு “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்ற ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் அறிவிப்புக்கு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடனின் கருத்து அல்ல எரிச்சல்.

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இதற்கு இந்தியாவில் வரவேற்பும் ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன், தன்னைப் பொறுத்தவரையில் “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே. 

சில விஷயங்கள் நமது நாட்டிற்கு மட்டுமே உரியது. சச்சினைப் பொறுத்தவரையில் அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவியே கொடுத்திருக்கலாம். 

ஆனால் அவர் இந்தியாவில் அல்லவா வசிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு எனது சிட்னி வீட்டில் விருந்தளித்ததை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியர்களால் சச்சின் மிகவும் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி மைதானங்கள் மாற்றம்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
 
வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி நடைபெறும்.
அதன்பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும்.
 
இந்நிலையில் வட இந்தியாவில் ஜனவரி மாதம் அதிக குளிர் இருக்கும். இதனால் அந்த காலநிலைக்கு ஏற்ப இரண்டு ஒரு நாள் போட்டிகளின் இடம், நேரத்தை பி.சி.சி.ஐ. மாற்றியுள்ளது.
 
அதாவது, ஜனவரி 23-ம் தேதி இரு அணிகளும் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த இப்போட்டி 12 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
 
இதேபோல் ஜனவரி 27-ல் நடைபெற உள்ள 5-வது ஒருநாள் போட்டி தர்மசாலாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பகல் ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும்.
 
இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. 2-வது போட்டி கொச்சியிலும் (ஜன.15), 3-வது போட்டி ராஞ்சியிலும் (ஜன.19) பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன.

இங்கிலாந்து டெஸ்ட் - ரெய்னாவுக்கு பதில் யுவராஜ்சிங்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 

வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 

20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி வரை நடைபெறும். பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் 20 ஓவர் உலக கோப்பையில் ஆடினார். துலீப் டிராபி போட்டியில் யுவராஜ்சிங் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 பந்துகளில் 208 ரன் (33 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 

இந்த ஆட்டம் மூலம் அவர் டெஸ்ட் அணியில் தன்னை தேர்வு செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார். 

ரெய்னாவுக்கு பதிலாக யுவராஜ்சிங் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ரெய்னா 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு தான் ஏற்றவர் என்ற கருத்து நிலவுகிறது. 

சந்தீப்பட்டில் தலைமையிலான புதிய தேர்வு குழு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை முதல் முறையாக தேர்வு செய்கிறது.

சென்னை சொதப்பல் கிங்ஸ்


லயன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அபாரமாக ஆடிய லயன்ஸ் அணி கடைசி ஓவரில் "திரில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கேப்டவுனில் நேற்று இரவு நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின.

வந்தார் ஆல்பி:

சென்னை கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மைக்கேல் ஹசி, யோ மகேஷ் நீக்கப்பட்டு, உள்ளூர் வீரரான ஆல்பி மார்கல், விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ் வென்ற லயன்ஸ் அணி கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன், "பீல்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:

முதலில் பேட் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு டுபிளசி, முரளி விஜய் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த போது டுபிளசி (25) அவுட்டானார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (20) பெரிய அளவில் சாதிக்கவில்லை. பங்கிசோ சுழலில் முரளி விஜய் (22) வெளியேறினார்.

தோனி அபாரம்:

பின் இணைந்த கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. சிம்ஸ் பந்தில் சிக்சர் விளாசிய ஜடேஜா, டி பிரியுன் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, மோரிஸ் பந்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா (21) பெவிலியன் திரும்பினார். ஆல்பி மார்கல் (4) நிலைக்கவில்லை.

பத்ரிநாத் அதிரடி:

பின் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், நானஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாச, ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. தன்விர் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற தோனி (34) அவுட்டானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (27) அவுட்டாகாமல் இருந்தார். லயன்ஸ் அணி சார்பில் பங்கிசோ 2, தன்விர், நானஸ், மோரிஸ், டி பிரியுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

போலிஞ்சர் கலக்கல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஹைவெல்டு லயன்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த குயின்டன் டி காக் (5), இம்முறை போலிஞ்சரிடம் சரணடைந்தார்.

குலாம் அசத்தல்:

பின் இணைந்த குலாம், நீல் மெக்கன்சி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆல்பி மார்கல் வீசிய 9வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த குலாம், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், டுபிளசி ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. டுபிளசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது 46 பந்தில் 64 ரன்கள் (4 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த குலாம் அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மெக்கன்சி (33) நம்பிக்கை தந்தார்.

"திரில் வெற்றி:

"மிடில்-ஆர்டரில் களமிறங்கிய ஜீன் சிம்ஸ், கிறிஸ் மோரிஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. சென்னை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆல்பி மார்கல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு பந்தில் சிம்ஸ் இரண்டு பவுண்டரி அடிக்க, லயன்ஸ் அணி 19.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்ஸ் (39), மோரிஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை லயன்ஸ் அணியின் பங்கிசோ பெற்றார்.

ஏற்கனவே மும்பை அணியை வீழ்த்திய லயன்ஸ் அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேற, அடுத்த இரண்டு போட்டியிலும் நல்ல "ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பின், மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

50வது சிக்சர்

நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரில் 50வது சிக்சர் அடித்த பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பெற்றார். இவர், லயன்ஸ் அணியின் கிறிஸ் மோரிஸ் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு இப்பெருமை பெற்றார். முதல் சிக்சரை டைட்டன்ஸ் அணியின் ருடோல்ப்(எதிர், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) அடித்தார்.

உடைந்தது "பேட்

நேற்றைய போட்டியில் சென்னை கிங்ஸ் வீரர் டுபிளசியின் பேட் உடைந்தது. சோகைல் தன்விர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்து டுபிளசி பேட்டின் கைபிடியை பலமாக தாக்கியதால் உடைந்தது. பின் புதிய பேட்டுடன் விளையாடிய டுபிளசி ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

19வது ஓவரில் 19 ரன்கள்

நேற்று லயன்ஸ் அணியின் டிர்க் நானஸ் வீசிய 19வது ஓவரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 19 ரன்கள் கிடைத்தது. இதனால் சென்னை அணி 150 ரன்களை எட்ட உதவியது.