கிரிக்கெட்டில் சாதித்தது எப்படி? - ரகசியத்தை சொல்கிறார் லட்சுமண்

நெருக்கடியான நேரங்கள் தான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது,'' என, ஓய்வு பெற்ற இந்திய வீரர் லட்சுமண் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற நிலையிலும், திடீரென ஓய்வை அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகரமாக ஜொலித்தது எப்படி என, லட்சுமண் கூறியது:

எப்போதெல்லாம் அணி நெருக்கடியான நேரத்தில் தவிக்கிறதோ, அதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாட எனக்கு அதிகம் பிடிக்கும். இதுதான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனால் தான் ஐதராபாத்தின் முக்கிய பேட்ஸ்மேனாக உருவெடுத்தேன் என்று நினைப்பதுண்டு.

சிக்கலான நேரங்களில் பொறுப்பெடுத்துக் கொண்டு, வழக்கத்துக்கு மாறாக அதிக திறமை வெளிப்படுத்துவேன். இப்படி நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுவது தான் எனது பெரிய வலிமை.


வெற்றி முக்கியம்:

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திறமை இருக்கும். அது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். பேட்ஸ்மேனாக இருந்து அணிக்கு தேவையான ரன்கள் எடுப்பது, கிடைக்கும் வாய்ப்புகளில் "கேட்ச்' செய்வது தான் எப்போதும் எனது வேலை. என்னை சிறப்பான பேட்டிங் திறனுள்ள வீரராக பார்த்த அனைவருக்கும் நன்றி.

சச்சின், கங்குலி, கும்ளே என, அனைவருமே என்னைக் கவர்ந்தனர். இந்த வீரர்கள் அனைவருமே, அணியின் கேப்டனாக இருந்தவர்கள். இவர்களது திறமை குறித்த அனுபவங்களை, "டிரசிங் ரூமில்' கேட்டுத் தெரிந்து கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து திறமை வெளிப்படுத்த வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே இவர்களிடம் இருந்தது.


சேவக் பிடிக்கும்:

இப்போதுள்ள வீரர்களில் சேவக்கின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன். ஏனெனில், ஒரு சிலநேரங்களில் இவர் நம்ப முடியாத அளவில் விளையாடுவார். இவருக்கு "பார்ம்' <உள்ளதோ இல்லையோ, சேவக் ஒரு திட்டத்துடன் தான் களத்தில் விளையாடுவார். இவரை நம்ப வேண்டும். சேவக் போல ஏன் விளையாட முடியவில்லை என நான் கூட வியந்தது உண்டு.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

சச்சின் என்ன செய்ய வேண்டும்

டெஸ்ட் போட்டிகளில் "ஹாட்ரிக்' போல்டான சச்சின், இக்கட்டான நிலையில் உள்ளார். கிரிக்கெட்டுக்கு "குட்பை' சொல்வாரா அல்லது தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இவரது "பார்ம்' சமீப காலமாக மோசமாக உள்ளது. இதன் உச்சக்கட்டமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து மூன்று முறை "போல்டு' முறையில் அவுட்டானார்.

கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்சில் (15, 8, 25, 13, 19, 17) ஒரு அரைசதம் அடிக்கவில்லை. இதையடுத்து இவர் ஓய்வு பெற்று, இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில், இவர் ஓய்வு பெற வேண்டுமென 56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், உலக கோப்பை(50 ஓவர், 2011) வென்ற கையுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஏற்கனவே கூறினார்.

கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டு, எம்.பி.,யாக பார்லிமென்ட்டில் தனது கடமையை செய்யும் நேரம் நெருங்கி விட்டதாக பலரும் கருதுகின்றனர். அதே நேரத்தில், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென கேப்டன் தோனி, கங்குலி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையில் சச்சின் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

நியூசிலாந்து தொடரில் இவரது ஆட்டம் குறித்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து:

கவாஸ்கர்: சச்சினுக்கு வயதாகி விட்டதால், பந்து விழும் வேகத்துக்கு ஏற்ப கால்களை அசைத்து விளையாட முடியவில்லை. கண்களால் பந்தை விரைவாக பார்க்க முடியவில்லை. மூன்று முறை "போல்டானது' மாஸ்டர் பேட்ஸ்மேனுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை.

அசார்: தற்போது சச்சின் உடல் அசைவுகள் மிகவும் மந்தமாக உள்ளன. "புட்வொர்க்' சிறப்பாக அமையவில்லை. தவறான "ஷாட்' அடிக்கிறார்.

கங்குலி: உண்மையாக சொன்னால், சச்சினுக்கு ஓய்வு பெற வேண்டிய நேரம் வரவில்லை. அவர் ஒரு ஜாம்பவான். கிரிக்கெட் விளையாடுவதை பெருமையாக நினைக்கிறார். தனது ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்தவர். அவரது திறமை இன்னும் குறையவில்லை.

"ஷாட்' தேர்வு செய்வதில் தான் பிரச்னை உள்ளது. இதற்கு நீண்ட காலமாக விளையாடாமல் இருந்ததே காரணம். போதிய பயிற்சி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அசத்துவார்.

தோனி: சச்சின் ஆட்டம் குறித்து கவலைப்படவில்லை. இவரது "பார்ம்' குறித்து விமர்சிக்கும் போது, அடுத்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுப்பார். அந்த ஆட்டத்தை காண நானும் காத்திருக்கிறேன்.

கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட்

தற்போதுள்ள இந்திய அணியில் விராத் கோஹ்லி தான் சிறந்த பேட்ஸ்மேன்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டினார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய வீரர் விராத் கோஹ்லி ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 212 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து டிராவிட் கூறியது: தற்போதுள்ள இந்திய அணியில் விராத் கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன். சமீபகாலமாக இவரது "பார்ம்' அருமையாக உள்ளது. டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுகிறார். இவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய கோஹ்லியை கேப்டன் தோனி சிறப்பாக வழிநடத்தி வெற்றி தேடித்தந்தார். இது கோஹ்லிக்கு அதிக நம்பிக்கை அளித்திருக்கும்.

கோஹ்லியின் பேட்டிங் திறமையை ஜூனியர் அணிக்காக (19 வயது) விளையாடியது முதல் பார்த்து வருகிறேன். இவருடன் ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடி உள்ளேன். இவரது பேட்டிங்கில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது.

கோஹ்லி, இளம் வயதில் விளையாடிய போது செய்த தவறுகளை தற்போது திருத்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் இவர், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறார் என்பது தெளிவாகிறது. முன்னதாக களத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் இவர், தற்போது அதனை குறைத்துக் கொண்டார்.

இதேபோல இளம் வீரர் அஜின்கியா ரகானே வரும் காலத்தில் இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருவார்.

ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, பலமான பேட்டிங் வரிசை காரணமாக லெவன் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் பெங்களூரு அணியில் இணைந்த பின், லெவன் அணியில் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினார்.

பொதுவாக இளம் வீரர்கள் "டிரஸிங் ரூமில்' நிறைய விஷயங்களை சீனியர் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஆடுகளத்தில் விளையாடும் போதுதான் உண்மையான அனுபவம் கிடைக்கும்.

வரும் காலத்தில் இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரை நீக்கிவிட்டு, ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரை நடத்தலாம். "டுவென்டி-20' போட்டிகள் எழுச்சி கண்ட இக்காலத்தில், இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஆறு முதல் ஏழு போட்டிகள் வரை நடத்துவதில் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அதிக அளவில் ரசிகர்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள், "டுவென்டி-20' என புதிய பரிமானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், டெஸ்ட் போட்டி தான் பாரம்பரியமிக்க போட்டியாக கருதப்படும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

நேரு கோப்பை கால்பந்து தொடரில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் கேமரூனை "பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

டில்லியில், 15வது நேரு கோப்பை சர்வதேச கால்பந்து தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் "பிபா ரேங்கிங்கில் 168வது இடத்தில் உள்ள இந்தியா, 59வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆப்ரிக்க அணிகளில் ஒன்றான கேமரூன் "பி அணியை சந்தித்தது.


கேமரூன் ஆதிக்கம்:

போட்டியின் துவக்கத்தில் கேமரூன் வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் கிடைத்த "பிரி ஹிக் வாய்ப்பில் இந்திய வீரர் கிலிபோர்டு மிராண்டா "பாஸ் செய்த பந்தை சக வீரர் கவுர்மாங்கி தலையால் முட்டி முதல் கோல் அடித்தார்.

இம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் மகோன் தியரி கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிந்தது.


சுனில் நம்பிக்கை:

இரண்டாவது பாதியில் தொடர்ந்து அசத்திய கேமரூன் அணிக்கு 54வது நிமிடத்தில் "கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் மகோன் தியரி அடித்த பந்தை கிங்யு மபோன்டோ தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கோல் அடிக்க, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி மின்னல் வேகத்தில் பறந்தார்.

இவரை கேமரூன் கோல்கீப்பர் நிகசி ஹோசியா முரட்டுத்தனமாக மடக்கினார். இதையடுத்து "பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சுனில் சேத்ரி கோலாக மாற்றி நம்பிக்கை தந்தார்.


கூடுதல் நேரம்:

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்ததால், கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. இதில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.


சபாஷ் சுப்ரதா:

இதில் இரு அணியினருக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். போதிய அனுபவமில்லாத கேமரூன் கோல் கீப்பர் நிகசி ஹோசியாவுக்கு எதிராக இந்தியா சார்பில் ராபின் சிங், கேப்டன் சுனில் சேத்ரி, டென்சில் பிரான்கோ, மேத்தா ஹுசைன், கிலிபோர்டு மிராண்டா ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர்.

கேமரூன் சார்பில் அஷு டாம்பே, அவுஸ்மிலா பாபா, பால் பெபே, கிங்யு மபோன்டோ ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர். கடைசி வாய்ப்பில், கேமரூன் வீரர் மகோன் தியரி "மிஸ் பண்ண, இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் "பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.


இளமையின் எழுச்சி:

இந்திய விளையாட்டு அரங்கில், அடுத்த தலைமுறை மிகச் சிறப்பாக உள்ளது. சமீபத்தில் நமது ஜூனியர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. இதே போல சுனில் சேத்ரி தலைமையிலான இளம் இந்திய கால்பந்து அணி, நேரு கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.


இரண்டாவது இடம்

நேரு கோப்பை கால்பந்து அரங்கில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாவது முறையாக (2007, 2009, 2012) சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1985-88) கோப்பை வென்ற சோவியத் யூனியன் அணி உள்ளது.

* நேரு கோப்பை அரங்கில் "ஹாட்ரிக் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக சோவியத் யூனியன் அணி தொடர்ந்து நான்கு முறை கோப்பை வென்றது.

பெங்களூரு டெஸ்ட் - இந்தியா திணறல் துவக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், இந்திய அணி "டாப் ஆர்டர் வீரர்களை இழந்து திணறி வருகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய அணி , 1-0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு, 328 ரன்கள் எடுத்திருந்தது. வான் விக் (63), பிரேஸ்வெல் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.


"ஆல் அவுட்:

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு வான் விக் (71), பிரேஸ்வெல் (43), டிம் சவுத்தி (14) விரைவில் திரும்பினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பிரக்யான் ஓஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.


திணறல் துவக்கம்:

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர் (2), புஜாரா (9) ஏமாற்றம் தந்தனர். சேவக் 43 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.