வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் செய்னா நேவல்

ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் செய்னா நேவல், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில், பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் வாங் ஜின்னை சந்தித்தார்.

இதன் முதல் செட்டில் செய்னா, 18----20 என, பின் தங்கியிருந்தார். அப்போது சீனா வீராங்கனை வாங் சின், முழங்காலில் காயம் அடைந்தார்.

சிகிச்சைக்குப் பின் திரும்பிய இவர், முதல் செட்டை 21-18 என, கைப்பற்றினார்.

ஆனால், தொடர்ந்து இரண்டாவது செட் துவங்கியதும், சீனா வீராங்கனை வாங் சின்னால் விளையாட முடியாததால், போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக வாங் சின் அறிவித்தார்.

இதையடுத்து இந்தியாவின் செய்னா நேவல், மூன்றாவது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு, வெண்கலப்பதக்கம் கைப்பற்றி, வரலாறு படைத்தார்.

ஹாக்கி - இந்தியா ஹாட்ரிக் தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கியில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்த இந்திய அணியின், பதக்க கனவு தகர்ந்தது.

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி, "பி' பிரிவு லீக் போட்டியில், இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஜெர்மனியை சந்தித்தது. முதல் இரு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

போட்டி துவங்கிய 7 வது நிமிடத்தில் ஜெர்மனியின் புளோரியன் பக்ஸ், தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். இதைச் சமன் செய்ய கிடைத்த, "பெனால்டி கார்னர்' (8வது நிமிடம்) வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர்.

பின், 13வது நிமிடம் மற்றொரு "பெனால்டி கார்னரை' ரகுநாத் கோலாக மாற்ற, 1-1 என, ஸ்கோர் சமன் ஆனது. இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடுத்த 3வது நிமிடம், புளோரியன் பக்ஸ் இரண்டாவது கோல் அடிக்க, ஜெர்மனி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு ஆலிவர் கார்ன் (24வது), கிறிஸ்டோபர் வெஸ்லே தலா ஒரு "பீல்டு' கோல் அடிக்க, முதல் பாதியில் ஜெர்மனி, 4-1 என, அசைக்க முடியாக முன்னிலை பெற்றது.


கனவு "அம்போ':

இரண்டாவது பாதி துவங்கிய வேகத்தில் புளோரியன் பக்ஸ், மூன்றாவது கோல் அடித்தார். 43, 48, 58 வது நிமிடங்களில் கிடைத்த அனைத்து "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் வீணடித்தனர்.

62வது நிமிடம் இந்தியாவின் துஷார் கண்டேகர், ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில், இந்திய அணி 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை இழந்து, பதக்க கனவும் தகர்ந்தது.

இந்திய "அப்பீல்' நிராகரிப்பு ஏன்?

பாட்மின்டன் பெண்கள் இரட்டையரில், ஜப்பான் ஜோடிக்கு எதிரான இந்திய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் பாட்மின்டனில் "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்ட சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த 8 வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, "ஏ', "சி' பிரிவில் 3, 4 வது இடம்பெற்ற ரஷ்யா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சீன தைபே ஜோடிக்கு எதிராக, ஜப்பான் ஜோடி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்றது.

இதன் மூலம் இந்திய ஜோடியை வெளியேற்ற ஜப்பான் திட்டமிட்டு செயல்பட்டது என, பயிற்சியாளர் கோபிசந்த், புகார் தெரிவித்தார். இதை ஏற்க சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) மறுத்துவிட்டது.


காரணம் என்ன:

ஏனெனில், ஜப்பான் தோடி தோற்றது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அணிக்கு காலிறுதிக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருந்ததாம். அதாவது, சிங்கப்பூர் ஜோடிக்கு எதிரான முதல் செட்டை வென்றது ஜுவாலா-அஷ்வினி ஜோடி.

இரண்டாவது செட்டை இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டும். தவிர, இதில் சிங்கப்பூர் ஜோடியை 13 புள்ளிக்கு மேல் எடுக்க விடக் கூடாது என்ற நிலை இருந்தது. ஒரு நிலையில் இந்திய ஜோடி 9-0 என முன்னிலையில் இருந்தது.


நமது தவறு:

எளிதான வெற்றி காத்திருந்த நிலையில், திடீரென சொதப்பிய இந்திய ஜோடி, சிங்கப்பூரை 15 புள்ளிகள் எடுக்க விட்டுவிட்டனர். இதனால், இந்திய அணி 21-16, 21-15 என, வென்ற போதிலும், காலிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

இப்படி தங்கள் தரப்பில் தவறை வைத்துக் கொண்டு, ஜப்பான் ஜோடி பங்கேற்ற போட்டி குறித்து அப்பீல் செய்ததால் தான், பி.டபிள்யு.எப்., கோரிக்கையை நிராகரித்து விட்டதாம்.


இதயமே நொறுங்கியது

பாட்மின்டன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன வீராங்கனை யு யங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கனவுகள் சிதைந்து விட்டன. இதயமே நொறுங்கி விட்டது. இங்கு பங்கேற்றது தான் எனது கடைசி போட்டி,'' என்றார்.

இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும் தோல்வி கண்டார். இதன்மூலம் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி 2-6 என்ற கணக்கில் பிரிட்டனின் ஆமி ஆலிவரிடம் தோல்வி கண்டார்.

போட்டியின் முடிவில் இருவரும் தலா 104 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், 3 செட்களை வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆமி ஆலிவர். லார்ட்ஸ் மைதானத்தில் நிலவிய குளிர், தீபிகாவுக்கு பாதகமாக அமைந்தது.

தோல்விக்குப் பிறகு இது தொடர்பாக தீபிகா கூறுகையில், "நான் நினைத்ததைவிட அதிவேகமாக சுழற்காற்று வீசியது. அதனால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு என்னால் பொருந்தி போக முடியவில்லை. என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறியது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. வரும்காலங்களில் நன்றாக பயிற்சி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக்கில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன்' என்றார்.

இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஜெயந்தா தலுக்தார், ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ஆகியோரும், மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, எல்.பி. தேவி, செக்ரோவ்லு ஸ்வுரு ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ராகுல் பானர்ஜி, தருண்தீப், எல்.பி.தேவி ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுவரை முன்னேறி தோல்வி கண்டனர். மற்றவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர்.

பாட்மின்டனில் புதிய வரலாறு படைத்தார் காஷ்யப்

ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப், முன்னேறி சாதனை படைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30வது ஒலிம்பிக் நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் காஷ்யப், இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 21-14 என காஷ்யப் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் சொதப்பிய இவர், 15-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அசத்திய காஷ்யப், 21-9 என வென்றார்.

முடிவில் 21-14, 15-21, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேறுவது இது தான் முதன் முறை.