வேண்டாம் அரசு பங்களா: சச்சின் எம்.பி., திடீர் முடிவு

எம்.பி., யாக இருப்பதே கவுரவம் தான். டில்லியில் தங்குவதற்கு அரசு பங்களா வேண்டாம். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும்,'' என, தெரிவித்துள்ளார் சச்சின்.

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றார்.

இவருக்கு டில்லியில் காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு எதிரே, பங்களா ஒதுக்கப்பட்டது. இதை சச்சின் ஏற்க மறுத்துள்ளார். அவர் கூறியது:

நான் டில்லிக்கு வந்து தங்குவது சில நாட்கள் தான். எப்போது டில்லி வந்தாலும் ஓட்டலில் தங்குவதற்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன்.

எம்.பி., ஆகி விட்டேன் என்பதற்காக, சில நாட்கள் தங்குவதற்கு, அரசு பங்களா வேண்டாம். இதில் எனக்கு விருப்பமும் இல்லை.

இதுபோன்ற செயல்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் என நினைக்கிறேன். யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஒதுக்கினால் நல்லது.

என்னைப் பொறுத்தவரை எம்.பி.,யாக இருப்பதே கவுரம். இதற்காக கொடுக்கப்படும் சலுகைகள், உரிமைகள் முக்கியமல்ல.

பங்களாவை ஏற்க மறுத்தது, எனது பொறுப்புகளை பாதிக்காது. பார்லிமென்ட்டின் ஒவ்வொரு
கூட்டத்தொடரின் போதும், சில நாட்கள் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

டெஸ்டில் மீண்டும் நம்பர்1 இடத்தை பிடிப்போம் - காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான காம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மீண்டும் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. பாகிஸ்தானுடன் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆஸ்திரேலியா அல்லது வங்காளதேசத்துடன் எப்படி விளையாடுகிறோமோ அதுபோல தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் ஆகும்.

எந்த அணி என்பது முக்கியமல்ல. நாட்டுக்காக ஆடுகிறேன் என்பது முக்கியமானது. இந்திய அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் சமமானவர்கள். நாட்டுக்காக விளையாடும் போது ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

கேப்டன் பதவியை ஏற்க நான் தயாராக இருப்பதாக கூறி இருந்தேன். கேப்டன் பதவி குறித்து தேர்வு குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும். கேப்டன் பதவிக்கு என்னை தேர்வு செய்வேன் என்று டோனி கூறியது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 4 டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டிலும் விளையாடுகிறது. நீண்ட ஓய்வுக்கு பிறகு டெஸ்டில் ஆடுவதால் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்திய அணி திறமை வாய்ந்தது. இதனால் டெஸ்டில் மீண்டும் “நம்பர் 1” இடத்தை பிடிப்போம்.

இவ்வாறு காம்பீர் கூறினார்.

அர்ஜுனா விருதை இழந்த யுவராஜ், கோலி

உலகக் கோப்பையை வென்றபோதிலும் அர்ஜுனா விருது பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், கடந்த ஆண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆகியோர் அர்ஜுனா விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) யாருடைய பெயரையும் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.

இதற்கான கடைசித் தேதியும் நிறைவடைந்துவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சகத்துடனான மோதல் காரணமாகவே கிரிக்கெட் வீரர்கள் பெயரை பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் பிசிசிஐயோ, அர்ஜுனா விருது தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால் இந்த முறை விருதை எதிர்பார்த்து காத்திருந்த தகுதியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

யுவராஜ் சிங்: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததோடு, தொடர்நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங். உலகக் கோப்பையில் 362 ரன்களைக் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

விராட் கோலி: கடந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் அபார வளர்ச்சி கண்டவர் கோலி. உலகக் கோப்பையில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச தொடர்களில் இக்கட்டான ஆட்டங்களில் அபாரமாக ஆடி வலுவான இலக்கையும் இந்தியா சேஸ் செய்வதற்கு முக்கிய பங்களித்தவர்.

தன்னுடைய அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதுவரை 85 ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களை அடித்துள்ளார்.

ஐ.பி.எல். வீரர்கள் மீதான ஸ்பாட் பிக்சிங் வழக்கு

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியின்போது சுசிந்திரா (டெக்கான்), மோனிஷ் மிஸ்ரா (புனே), அமித்யாதவ், ஸ்ரீவத்சவா (பஞ்சாப்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகிய 5 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிஷன் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது.

இதைத்தொடர்ந்து இந்த 5 பேரையும் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்டு செய்தது. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ரவிசவானி இதுதொடர்பாக விசாரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அவரது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் வழக்கை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய 5 வீரர்கள் மீது இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கிரிமினல் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை. இதனால் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து எதிர்த்து வரும் கீர்த்தி ஆசாத் அந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தார்.

தோனியின் ரசிகர்கள் ஏமாற்றம்

லடாக் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே தோனியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், உள்ளே செல்ல ராணுவம் அனுமதி அளிக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்திய ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்தில் உள்ள தோனி, கடந்த சில நாட்களாக காஷ்மிரில் முகாமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று லடாக் மலைப் பகுதிக்கு சென்றார்.

அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ராணுவ கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தில், ராணுவம் மற்றும் உள்ளூர் அணிகள் மோதிய போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

தோனியை நேரில் காண, நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், மைதானத்துக்கு வெளியில் காத்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பின் தோனி கூறுகையில்,""கிரிக்கெட்டில் வருவதற்கு முன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று திட்டமிட்டேன். கடைசியில் ரயில்வேயில் சேர்ந்தேன். இப்போது ராணுவத்தின் ஒரு உறுப்பினராக இருப்பது அதிர்ஷ்டம் தான்.

ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த இங்கு வரவில்லை. கடினமான சூழ்நிலையில் வீரர்கள் பணிபுரிவதைப் பார்க்கும் போது, அவர்களிடம் இருந்து எனக்குத் தான் ஊக்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு தோனி கூறினார்.