ரஞ்சி கோப்பைக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளில் களமிறங்குகிறார் யுவராஜ் சிங்

புற்றுநோய் சிகிச்சை முடிந்து ஓய்வுபெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார்.

அதற்கு முன்னதாக புச்சிபாபு கோப்பை, மொயின்உட் தவ்லா கோல்டு கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் யுவராஜ் பங்கேற்று விளையாடுகிறார்.

யுவராஜ் சிங்கின் உடல்நிலை குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், 'யுவராஜின் ஸ்கேன் அறிக்கையைப் பரிசோதித்த டாக்டர்கள், யுவராஜ் கிட்டத்தட்ட முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு, மாதம் ஒருமுறை அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் 5 மாதங்களுக்கு ஒருமுறை அவர் இத்தகைய சோதனைகள் செய்துகொண்டால் போதுமானது.

தற்போது அவர் சிறிது பலவீனமாகக் காணப்பட்டாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிறப்பாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்’ என்றார்.

யுவராஜ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவது பற்றி பேசியபோது, ‘ரஞ்சி கோப்பைக்கு முன்னதாக புச்சிபாபு கோப்பை, மொயின்உட் தவ்லா கோல்டு கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் யுவராஜ் பங்கேற்று விளையாட உள்ளார். ரஞ்சிக் கோப்பை போட்டியில் அவர் நிச்சயம் களமிறங்குவார்’ என்றார் அவரது நண்பர்.

தற்போது எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையின்படி தான் நல்ல நிலையில் இருப்பதாகவும், சகவீரரான இஷாந்த் சர்மவுடன் ஆடிய 4 ஓவர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டத்தில் தான் 7 சிக்சர்கள் அடித்ததாகவும் யுவராஜ் ட்விட்டர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் அடுத்த வாரிசு யார்?

இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வது எனது பணியல்ல. இந்த வாய்ப்பை அளித்தால், என்னையே தலைமை பதவிக்கு தேர்வு செய்வேன்,'' என, நகைச்சுவையாக கூறினார் தோனி.

தோனிக்கு, கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. தற்போது ஓய்வில் உள்ள இவர், காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து தோனி கூறியது:

எனது விருப்பத்தின் படி, இந்திய அணியின் அடுத்த கேப்டன் தேர்வு செய்யப்படமாட்டாது. ஒருவேளை எனது விருப்பத்தை கேட்டால், என்னையே தேர்வு செய்வேன். அணியை வழிநடத்த சேவக், காம்பிர், கோஹ்லி என திறமையான வீரர்கள் நிறைய பேர் அணியில் உள்ளனர்.

காஷ்மீர் இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வகை விளையாட்டுகளிலும் தீவிரமாக பங்கேற்க வேண்டும். இதன் மூலம் இங்குள்ள நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். எல்லைப்பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

ரஞ்சி, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் ஜம்மு-காஷ்மிர் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்கள் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கு, பி.சி.சி.ஐ., சிறப்பாக செயல்படுகிறது. தங்களின் கீழ் உள்ள கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்குவதின்மூலம், வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் தற்போது புதிய மைதானங்கள் உருவாகுவது மகிழ்ச்சியான விஷயம்.

இதன்மூலம் கிரிக்கெட் போட்டிகளை சிறிய நகரங்களில் உள்ள ரசிகர்களும் நேரடியாக காணலாம். விரைவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு தோனி கூறினார்.


எம்.பி.,யாக அசத்துவார் சச்சின்

ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் சச்சின் இன்று பதவி ஏற்கிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்த தோனி கூறுகையில்,"" கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்த சச்சின், இந்த புதிய பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்,''என்றார்.

ஐ.பி.எல்., உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

ஐ.பி.எல்., தொடரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில், அணி உரிமையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராஜிவ் சுக்லா எச்சரித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் போது, மைதானத்தில் புகை பிடித்ததாக கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட. சூதாட்ட புகாரில் ஐந்து வீரர்கள் சிக்கினர்.

மும்பை மைதானத்தில் ஷாருக்கான் தகராறு, பாமர்ஸ்பச் மீது செக்ஸ் புகார், அடுத்து, பார்னல் மற்றும் ராகுல் சர்மா "போதை' பார்ட்டியில் பங்கேற்று சிக்கலில் சிக்கினர்.

கடைசியாக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் போலீசார் வெறியாட்டம் நடத்த, பல்வேறு தரப்பினர் ஐ.பி.எல்., போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். இதையடுத்து இதன் தலைவர் ராஜிவ் சுக்லா, அணி உரிமையாளர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

நாங்கள் எந்த வீரரையும் பாதுகாக்க மாட்டோம். யார் தவறு செய்தாலும், நடவடிக்கை நிச்சயம். இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படாதவாறு அணி உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். வீரர்கள், நிர்வாகிகள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

முக்கிய லட்சியம்:

ஐ.பி.எல்., தொடரின் முக்கிய நோக்கமே கிரிக்கெட் போட்டியை வளர்ப்பது தான். இதற்கு தலைவராக பொறுப்பேற்றவுடன், இதில் எவ்வித பிரச்னைக்கும் இடம் தராமல் வைத்திருக்க வேண்டும் என்பது தான் முக்கிய லட்சியமாக வைத்துள்ளேன்.

ஐந்தாவது சீசனில் பல்வேறு பிரச்னைகள் வந்தன. இதனால், மக்கள் முதலில் தவறாக நினைக்கத் துவங்கினர். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இவைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் இத்தொடர் வெற்றிகரமாக நடந்தது.

கடும் நடவடிக்கை:

வரும் நாட்களில் "ஸ்பாட்-பிக்சிங்' மற்றும் எவ்வித புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கேள்விப்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் செய்யும் தவறுகளால், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது. இதனால், "மேட்ச் பிக்சிங்' போன்ற புகார்கள் வந்தால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல, வீரர்கள் "பார்ட்டிகளில்' பங்கேற்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. நாங்கள் எவ்வித "பார்ட்டியும்' நடத்துவதில்லை. உள்ளூர் வீரர்களை ஏலம் விடுவது குறித்து, கட்டுப்பாட்டுக் குழு முடிவு செய்யும்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

கேப்டன் பதவிக்கு தயார்: தோனிக்கு காம்பிர் சவால்

கேப்டன் ஆசையில் மிதக்கிறார் கவுதம் காம்பிர். டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தோனியை மீண்டும் உரசிப் பார்க்கிறார்.

ஆசிய கோப்பை தொடரின் போது காம்பிருக்கு பதிலாக விராத் கோஹ்லிக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே 6 ஒருநாள் போட்டிகளில் காம்பிர் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. இந்நிலையில், இவரிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கேப்டன் தோனி, காம்பிர் இடையே பனிப் போர் உருவானது.

இந்நிலையில், சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் பைனலில் காம்பிர் தலைமையிலான கோல்கட்டா அணி, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இதையடுத்து காம்பிருக்கு ஆதரவு அதிகரித்தது.

டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக 7 தோல்விகளை சந்தித்த தோனிக்கு பதிலாக இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கங்குலி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். ஆனாலும், தேர்வாளர்களின் அதீத நம்பிக்கையை பெற்ற தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பறிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.


இது குறித்து காம்பிர் கூறியது:

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன். இதனை மிகப் பெரும் கவுரவமாக கருதுவேன். இந்த சவாலை சந்திக்க மனதளவில் தயாராக இருக்கிறேன். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை கேப்டனால் மட்டும் சாதிக்க முடியாது.

வெற்றிகரமான அணியால் தான் வெற்றிகரமான கேப்டனை <உருவாக்க முடியும். மாறாக வெற்றிகரமான கேப்டனால், வெற்றிகரமான அணியை உருவாக்க முடியாது. சில போட்டிகளில் விரைவாக அவுட்டாகி விட்டால், அணியில் இருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் எப்போதும் இருக்கும்.


தடை வேண்டாம்:

ஐ.பி.எல்., தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தேவையில்லாதது. பெரும்பாலான போட்டிகளில் கடைசி ஓவரில் தான் முடிந்தன. இது போட்டியின் தரத்தை சுட்டிக் காட்டியது. இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பல வீரர்கள் ஐ.பி.எல்., மூலம் பெற்றுள்ளனர். களத்துக்கு வெளியே நடக்கும் சில தவறான சம்பவங்களுக்கு, ஐ.பி.எல்., தொடர் மீது பழி சுமத்தக் கூடாது.
இவ்வாறு காம்பிர் கூறினார்.

ஒருசில பிரச்சினைகளுக்காக ஐபிஎல் மீது குற்றம் சொல்லக்கூடாது

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டித் தொடர் விறுவிறுப்பான ஆட்டங்கள் மட்டுமின்றி, சர்ச்சைகளுக்கும் இடம் பிடித்தன. ஷாரூக்கான் விவகாரம். ராகுல் ஷர்மா விவகாரம், லூக் போமர்ஸ்பேச் விவகாரம், ஸ்பாட் பிக்சிங் விவகாரம் என பரபரப்பான சர்ச்சைகள் இப்போட்டித் தொடரில் ஏற்பட்டன.

இதனையடுத்து ஐபிஎல் போட்டித் தொடரையே தடை செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சச்சின் தெண்டுல்கரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது;

ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஒருசில பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் குற்றம் சொல்ல முடியாது. அதுபோலத்தான் ஐபிஎல் நிர்வாகமும். என்னைப் பொறுத்தவரை, இந்த சூதாட்டம் நல்ல உதாரணம் இல்லை.

இன்றைய வீரர்கள் சரியான பாதையில் சென்றால், அவரைப் பின்பற்றும் ரசிகர்களும் நல்ல பாதையில் செல்வார்கள். சரியான பாதையில் செல்லும் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.