மும்பையின் வெற்றிநடை தொடருமா?

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடையை தக்கவைத்துக் கொள்ள மும்பை அணி காத்திருக்கிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கான 19வது லீக் போட்டியில், ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


பவுலிங் பலம்:

மும்பை அணியின் மிகப்பெரிய பலம் வேகப்பந்துவீச்சு. லசித் மலிங்கா, முனாப் படேல் வேகத்தில் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை எளிதில் பறிகொடுக்கின்றனர். இவர்களுக்கு "ஆல்-ரவுண்டர்' போலார்டு, பிராங்க்ளின் ஆகியோர் ஒத்துழைப்பு அளிப்பது கூடுதல் பலம்.

அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று இவர் எழுச்சி பெற்றால் நல்லது. மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா நம்பிக்கை அளிக்கிறார். இவரது சுழல் ஜாலம் இன்றும் தொடந்தால், விக்கெட் வேட்டை நடத்தலாம்.


சேவக் எதிர்பார்ப்பு:

டில்லி அணியின் பேட்டிங்கில் சேவக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. கடந்த மூன்று போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்காத இவர், இன்று அதிரடி துவக்கம் அளிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம். மகிளா ஜெயவர்தனா, கெவின் பீட்டர்சன் வருகையால் டில்லி அணியின் பேட்டிங் வரிசை பலமடைந்துள்ளது.

சென்னை அணிக்கு எதிராக அசத்திய இவர்கள், இன்றும் கைகொடுக்கலாம். காயத்தில் இருந்து மீண்ட நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், அணியில் இணைந்திருப்பது டில்லி அணியின் பேட்டிங்கில் கூடுதல் வலு சேர்க்கிறது. "மிடில்-ஆர்டரில்' வான் டெர் மெர்வி, வேணுகோபால் ராவ், அபிஷேக் நாயர், இர்பான் பதான் ஆகியோர் கைகொடுக்க வேண்டும்.


மார்கல் நம்பிக்கை:

டில்லி அணியின் வேகப்பந்துவீச்சில் மார்னே மார்கல் நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் இணைந்து இர்பான் பதான், உமேஷ் யாதவ் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், மும்பை அணிக்கு சிக்கல்தான். சுழலில், சொல்லிக்கொள்ளும்படி முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவான விஷயம். வான் டெர் மெர்வி, நதீம் ஆகியோர் சுழலில் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.

சொந்த மண்ணில் சாதிக்க மும்பை அணியும், மூன்றாவது வெற்றியை பெற டில்லி அணியும் காத்திருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


இதுவரை...

ஐ.பி.எல்., அரங்கில் மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் மும்பை 5, டில்லி 3 போட்டியில் வெற்றி பெற்றன.

தெண்டுல்கர்,டோனியை விட கோலிக்கு அதிகம்

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை இன்சூரன்ஸ் செய்து உள்ளன. இதில் இந்திய அணியின் சொத்தான வீராட் கோலியே அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திர வீரரான கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடுகிறார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.32 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக தான் டோனி, தெண்டுல்கர் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான மகேந்திர சிங் டோனி ரூ.30 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் வீரர் தெண்டுல்கர் ரூ.14 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வீரர்களில் பீட்டர்சன் அதிகமாக தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் வீரரான அவர் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

தோல்விக்கு காரணம் தோனி

புனே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இருந்தே தோற்க வேண்டும் என்ற நினைப்பில் தோனி விளையாடியது தெளிவாகத் தெரிந்தது.

* தொடர்ந்து சொதப்பும் முரளி விஜயை வெளியேற்றாமல், பெங்களூருக்கு எதிராக அசத்திய போலிஞ்சருக்கு ஓய்வு கொடுத்தார்.

* முதலில் சென்னை அணி 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பின், எளிதாக 170 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில், தோனி மந்தமாக விளையாட, ஸ்கோர் 160ஐ கூட எட்டவில்லை.

* டெக்கான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்கு, ஒரு ஓவர் கூட பவுலிங் தரவில்லை.

* கடைசி ஓவரை வீச, ஆல்பி மார்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருக்க, சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத, யோ மகேசிடம் பந்தை கொடுத்தது ஏன், என்பது போன்ற கேள்விகளுக்கு தோனி தான் பதில் தரவேண்டும்

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 30 வயதான யுவராஜ்சிங் நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 3 கட்ட கீமோதெரபி சிகிச்சை பெற்று கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார்.

வீடு திரும்பிய பின்னர் யுவராஜ்சிங் முதல்முறையாக தனது சொந்த ஊரான குர்கானில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் எனக்கு வாழ்க்கை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று எனது ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பழைய நிலைக்கு திரும்ப எனது உடல் சில காலங்கள் எடுத்து கொள்ளும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

உடல் நலனில் நான் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. 2 மாதங்களுக்கு பிறகு முடிந்த வரை சீக்கிரம் களம் திரும்ப முயற்சிப்பேன். கடினமான நேரத்தை நான் கடந்து வந்து இருக்கிறேன். எனது தாயார் என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய பலமாகும். அவர் இல்லாமல் இந்த கஷ்ட காலத்தை கடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சிகிச்சை பெற்ற இந்த 2 மாத காலக்கட்டத்தில் அவர் தனது சோகத்தை மறைத்து கொண்டதுடன், கண்ணீர் கூட சிந்தவில்லை.

அதிகாலையில் நான் இருமினாலோ அல்லது தும்மினாலோ உடனே எழுந்து வந்து என்னை பார்ப்பார். சில சமயம் நான் சிறுகுழந்தை போல் அழுவேன். அப்போது அவர் என்னை தேற்றுவார். அவர் என்னை விட மனவலிமை மிக்கவராக இருந்தார். இதே போல் சைக்கிள் பந்தய வீரர் அமெரிக்காவின் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் உத்வேகமும், நம்பிக்கையும் அளித்தார். 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் புத்தகத்தை நான் படித்தேன்.

சில காரணத்தால் அதனை படிப்பதை பாதியில் விட்டுவிட்டேன். தற்போது முழுமையாக படித்து முடித்தேன். ஆம்ஸ்ட்ராங்கும் என்னை போன்று தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். ஆனால் அவருக்கு அது கடைசி கட்டத்தில் தான் தெரியவந்தது. எனக்கு தொடக்க கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அவருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. வாழ்க்கையில் அவர் உண்மையிலேயே கதாநாயகன்.

அவரது சாதனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். எனக்கு புற்றுநோய் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அதனை பரிசோதனை மூலம் உறுதி செய்ய 6 மாத காலம் பிடித்தது. மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டதுடன், கடுமையான இருமலும் இருந்தது. சளியில் ரத்தம் வந்தது. இதனை நான் யாரிடமும் சொல்லவும் இல்லை. காண்பித்ததும் கிடையாது. எனக்கு தானே நான் நன்றாக இருப்பதாக சொல்லி தேற்றி கொண்டேன்.

ஆனால் எனக்குள் சிக்கலான பிரச்சினை இருப்பது தெரிந்தது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தேன். மனரீதியாக நான் எப்பொழுதும் உறுதி படைத்தவன். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புற்றுநோய் எனது உடலை விட்டு நீங்கி விட்டது. இருப்பினும் அந்த தாக்குதலின் வடு இன்னும் உள்ளது. வருங்காலங்களில், புற்றுநோயில் இருந்து விடுபட்டு சாதிக்க நினைப்பவர்களுக்கு நான் உதவி செய்வேன்.

எப்போதெல்லாமல் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்து கிரிக்கெட் பார்ப்பனோ அப்போது அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். எனவே கிரிக்கெட்டை டி.வி.யில் பார்ப்பதை தவிர்த்து விடுவேன். ஆனால் வீட்டில் இருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தது ரொம்ப கடினமாக இருந்தது.

வீட்டில் இருந்த போது, நான் நடக்க முயற்சித்ததுடன், வீடியோ கேம்ஸ் விளையாடினேன். சினிமா பார்த்தும் பொழுதை கழித்தேன். எனது தாயார் எனக்கு சமைத்து கொடுத்தார். என்னால் அதிகம் எதுவும் செய்ய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு கடினமாக இருந்தது. வருங்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது.

இந்திய அணியின் சின்னத்தை மறுபடியும் அணிந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதையே எனது வாழ்நாள் லட்சியமாக கருதுகிறேன். நான் சிகிச்சை பெற்ற போது, ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். லண்டனுக்கு வந்து அவர் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் தெண்டுல்கர். அவருடன் மறக்க முடியாத நட்பை வளர்த்துக் கொண்டுள்ளேன். சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 100-வது சதத்தை அடிக்கும் போது நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

துரதிர்ஷ்டவசமாக என்னால் அணியில் இருக்க முடியாமல் போய்விட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணமாகும்.

நான் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி ரன்னை அடிக்க விரும்புவேன். அதனால் தான் இந்த இன்னிங்சை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். கிரிக்கெட் பிரபலம் மூலம் எனக்கு புகழ், பணம் உள்பட எல்லாம் கிடைத்து விட்டது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். இருப்பினும் பணத்தை விட மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

IPL : இணையதள ரசிகர்கள் அதிகரிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் "டுவென்டி-20' போட்டிகளை, இணைதளத்தில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வருத்தப்படுகின்றனர் நிர்வாகிகள்.

ஆனால், இணையதளத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சரிபாதிக்கும் மேலாக அதாவது 56 சதவீதம் உயர்ந்துள்ளது பெரும் வியப்பாக உள்ளது.

துவக்கவிழா உட்பட இதுவரை நடந்த போட்டிகளை 1.37 கோடி பேர் வரை இணைதளத்தில் பார்த்துள்ளனராம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 லட்சமாகத்தான் இருந்துள்ளது.


டில்லி முதலிடம்:

இதில் பெங்களூரு, டில்லி நகரங்களில் மட்டும் 14 சதவீதத்தில் கண்டு களித்தனர். இரண்டாவது இடத்தில் மும்பை (13 சதவீதம்) வருகிறது. கடந்த ஏப். 10ல் நடந்த பெங்களூரு-கோல்கட்டா இடையிலான போட்டியை மட்டும் அதிகப்படியாக 21.5 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்தனர்.


மொபைலும் ஆதிக்கம்:

இதுதவிர, 60 ஆயிரம் பேர் தங்கள் மொபைல் போனில் ஐ.பி.எல்., போட்டியை கண்டுகளிக்கின்றனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாம்.

இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மீடியா சேல்ஸ் தலைவர் பிரவீண் சர்மா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை இணைதளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.