இஷாந்த் வீழ்ச்சிக்கு காரணம்???

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மாவும் ஒரு காரணம். இவரது பவுலிங் திறனை பார்க்கும் போது, சாண் ஏறினால், முழம் வழுக்கியது போல இருந்தது.

இந்திய அணியில் இடம் பெரும் வீரர்கள், யாரும் திறமை வெளிப்படுத்த முயற்சிக்காமல் இருக்கப் போவதில்லை. இதுபோலத் தான் இஷாந்த் சர்மாவும். 23 வயதான இவர், இதுவரை 44 டெஸ்டில் பங்கேற்று 132 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சில காலம் "பார்ம்' இல்லாமல் தவித்த இவர், கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 போட்டியில் 21 விக்கெட் வீழ்த்தினார்.

அப்போது இஷாந்த் கூறுகையில்,"" ஜாகிரை போல "சுவிங்' செய்ய முயன்றது தான், சமீபத்திய எனது வீழ்ச்சிக்கு காரணம்,'' என்றார்.


தூக்கம் இல்லை:

இதுபோன்ற முயற்சியால் "பார்ம்' இழந்த இஷாந்த் சர்மா, சில காலம் அணியை விட்டு நீக்கப்பட்டு இருந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளான இவர், இரவில் உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டார்.

நிகழ்கால ஏமாற்றத்தால், எதிர்காலம் குறித்த பயம் இவருக்கு அதிகமானது. இந்திய அணியின் "டாப்' பவுலராக இருந்துவிட்டு, திடீரென காணாமல் போனதால் வெறுத்து விட்டார்.


ஏன் இப்படி?

பவுலிங் செய்யும் போது பந்தின் தையல் பகுதியை சரியாக பிடிக்காதது, தோள்பட்டை சரியான நிலையில் இல்லாததது போன்ற காரணங்களால், இவர் விரும்பிய இடத்தில் பந்தை "பிட்ச்' செய்ய முடியவில்லை. இது ஏன் நடக்கிறது? இதை ஏன் சரிசெய்ய முடியாது என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டுள்ளார்.


மீண்டும் சொதப்பல்:

இதன் விளைவு தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதித்தது. இதன் பின் மீண்டும் எழுச்சி பெறுவார் என்று பார்த்தால், மீண்டும் இவரது "ரிதத்தில்' குறை ஏற்பட்டுள்ளதை போலத் தெரிகிறது. ஜாகிர் கானை போல பிரதிபலிக்க முயற்சிப்பதால், இவரது இயல்பான பவுலிங் "ஸ்டைல்' அதிக பாதிப்பு அடைந்துவிட்டது.


பேட்டிங்கிற்கு சாதகம்:

முழு "லைனில்' பந்து வீச முயற்சிப்பதால், இவரது தலை, இடது தோள்பட்டை முழுவதும் சாய்கிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து, அடிப்பதா அல்லது விலகி விடுவதா என்று முடிவெடுக்க கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாகிறது.

இதன் விளைவு, இங்கிலாந்து தொடரில் 11 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. சராசரி 58.18 ஆகி விட்டது. ஆஸ்திரேலிய தொடரில் இந்த சராசரி 81 ஆக அதிகரித்து, விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது கண்கூடாகத் தெரிந்தது.

மற்றவர்களை காப்பியடிக்காமல், தனது இயல்பான வழியை பின்பற்றினால் வெற்றிகரமான பவுலராக இஷாந்த் மீண்டும் வலம் வரலாம்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் ஏலம் : இந்திய ‌வீரர் ஜடேஜாவுக்கு 9. 72 கோடி

வரும் ஏப்., மாதம் 4ம் தேதி முதல் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியில் ஆடும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று நடந்தது. இதில் இந்திய வீரர் ஜடேஜா அதிப்பட்சமாக ஒன்பதே முக்கால் கோடிக்கு விலைபோனார். லட்சுமணை யாரும் ஏலத்தில் கேட்கவில்லை.


இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 9.72 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த தொடரில், இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியில் விளையாடினார்.


நியூசிலாந்து வீர் பிராண்டன் மெக்கலமை ( 4 .4 ‌கோடிக்கு ) கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை ( 1. 06 கோடிக்கு ) , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஜெயவர்த்னேவை ( 6. 8 கோடிக்கு) டில்லி டேர்டெவில்ஸ் அணியும், பர்த்தீவ் பட்‌டேலை டெக்கார் சார்ஜர் அணியும், ஏலம் எடுத்துள்ளன.



சகாரா இந்தியா ஏலத்தில் இருந்து விலகல் :


இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல், அணியான புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக சகாரா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது.

இன்று (IPL) ஐ.பி.எல்., ஏலம்

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 4 முதல் மே 27 வரை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உட்பட 9 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்கள் ஏலம் வரும் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் 8 இந்திய வீரர்கள் உட்பட, உலகின் 11 அணிகளை சேர்ந்த 144 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட கொச்சி அணி வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் எண்ணிக்கையை 30ல் இருந்து 33 ஆக உயர்த்துகிறது.

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, வினய் குமார், பார்த்திவ் படேல், மெக்கலம், ஜெயவர்தனா (இலங்கை) ஆகியோருக்கு, இந்த ஏலத்தில் அதிக தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் "மேட்ச் வின்னராக' உள்ள "ஆல் ரவுண்டர்' ஜடேஜாவை மும்பை அணி தட்டிச் செல்லும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஒரு அணி உரிமையாளர் கூறுகையில்,"" பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சம அளவில் திறமை வெளிப்படுத்துபவர் ஜடேஜா. இவர் இன்றைய ஏலத்தில் ரூ. 7 கோடி வரைக்கும் போனால் கூட ஆச்சரியமில்லை,'' என்றார்.

வினய் குமாரை எடுக்க பெங்களூரு, புனே அணியிடையே போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முதல் ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டிக்குப் பின் பெரிய அளவில் சோபிக்காத நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்தை, ராஜஸ்தான் அல்லது மீண்டும் கோல்கட்டா அணி வாங்கலாம்.

எவ்வளவு அடிச்சாலும் இந்திய அணி தாங்குறாங்க

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்று நடந்த முதல் "டுவென்டி-20' போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இளம் வீரர்களின் வரவும் பலன் அளிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வரிசையாக தோற்றது. அடுத்து இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் போட்டி நேற்று சிட்னியில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


வார்னர் அதிரடி:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாடே இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். இவர்கள், இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். வாணவேடிக்கை காட்டிய வார்னர், அஷ்வின் ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். இவர், வினய் குமார் பந்தில் 25 ரன்களுக்கு வெளியேறினார். டிராவிஸ் பிர்ட்(17), அஷ்வின் "சுழலில்' வீழ்ந்தார்.


இன்னொரு "கில்லி':

தனது அதிரடியை தொடர்ந்த விக்கெட் கீப்பர் மாத்யூ வாடே, கில்கிறிஸ்ட்(செல்லமாக கில்லி) இல்லாத குறையை போக்கினார். ரவிந்திர ஜடேஜா ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த வாடே, "டுவென்டி-20' அரங்கில் தனது முதல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டேவிட் ஹசியும் ரன் மழை பொழிய, ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது.


மழை பாதிப்பு:

ஆஸ்திரேலியா 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்தது. இதனால் ஆட்டம் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியது. வாடே (72), ரெய்னா பந்தில் போல்டானார். டேவிட் ஹசி (42), ராகுல் சர்மாவின் "சுழலில்' சரிந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.


விக்கெட் மடமட:

கடின இலக்கை துரத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் சிதறியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். பிரட் லீ வீசிய முதல் ஓவரிலேயே சேவக் (4), காலியானார். காம்பிர்(20), டேவிட் ஹசியின் பந்தில் வீழ்ந்தார். இளம் வீரர்களான கோஹ்லி (22), ரெய்னாவும் (14) கைவிட்டனர். ஹாக் "சுழலில்' ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். ரவிந்திர ஜடேஜாவும்(7) தாக்குப்பிடிக்கவில்லை.


தோனி போராட்டம்:

பின் கேப்டன் தோனி, அஷ்வின் இணைந்து போராடினர். கிறிஸ்டியன், பிரட் லீ பந்துகளில் சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார் தோனி. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (48), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை வாடே தட்டிச்சென்றார்.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது "டுவென்டி-20' போட்டி மெல்போர்னில் நாளை நடக்க உள்ளது.

கேப்டன் தகுதி சேவக்கிற்கு உண்டா?

இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து பேச, இது சரியான நேரமல்ல. சேவக்கிற்கு கேப்டனாகும் தகுதியில்லை, என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில், தொடர்ந்து 8 தோல்வியடைந்ததால், கேப்டன் தோனியை மாற்ற வேண்டும் என, விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:

அடுத்தடுத்த தோல்விகளால் எல்லாம் தோனியை நீக்குவது குறித்தே பேசுகின்றனர். இதுபற்றி பேச சரியான தருணம் இதுவல்ல. இப்போதும் சரி, எப்போதும் சரி இந்திய அணிக்கு தலைமை தாங்க தோனி தான் சரியான நபர் என்று நம்புகிறேன்.

சமீபகாலமாக அன்னிய மண்ணில் அடைந்த தோல்விகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தோனியை "பலிகடா ஆக்க முயற்சிப்பது அழகல்ல.இந்திய துணைக்கண்டத்தில் இதுதான் பல காலமாக நடக்கிறது. மீடியாவும் இதைத்தான் விரும்புகிறது.


சேவக் வேண்டாம்:

இவருக்குப் பதில் சேவக் அல்லது விராத் கோஹ்லியை கேப்டனாக்க முயற்சிப்பதாக தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த இருவருக்குமே கேப்டானகும் தகுதியில்லை. அடிலெய்டில் கேப்டனாக, இந்திய அணி பெருமைப்படத்தக்க வகையில் சேவக், ஒன்றும் செய்துவிடவில்லை. இவரிடம் அதிகம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.


கோஹ்லி குழந்தை:

விராத் கோஹ்லியை பொறுத்தவரையில் இன்னும் குழந்தை தான். இப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் இவர் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கேப்டனாக தோனி போதுமான அளவு செயல்படவில்லை என்பது உண்மை தான். அதேநேரம், 2 தொடர்களில் தோற்றோம் என்பதற்காக இவரை வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. அணியை முன்னேற்ற பி.சி.சி.ஐ.,க்கு இந்த வழிதான் உள்ளதா?


பவுலிங் சுமார்:

டெஸ்ட் தொடரைப் போல, பவுலிங் தான் இன்னும் கவலையாக உள்ளது. இஷாந்த் சர்மாவிடம் பெரியளவில் எதிர்பார்த்து, ஏமாற்றம் தான் கிடைத்தது. எல்லோரும் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கின்றனர். இதெல்லாம் திறமையற்றவர்கள் சொல்லும் காரணம். 45 டெஸ்டில் பங்கேற்ற பின்பும் எப்படி பொறுப்பாக செயல்படுவது என்பது குறித்து இவர் கற்றுக் கொள்ளவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் என்பவர் பெர்த், மெல்போர்னில் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லையே. முதலில் ஆடுகளத்தில் ஒரு பக்கத்தில் மட்டும் எப்படி பவுலிங் செய்வது என்பதை இவர் கற்றுக் கொண்டால் போதும்.


புதிய அணி:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இன்னும் அதிக போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ரெய்னா, ஜடேஜா, பிரவீண் குமார் அணியில் இணைந்துள்ளனர். "டுவென்டி-20, ஒருநாள் போட்டிகளுக்கு வலுவான இந்திய அணி களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் புதிய இந்திய அணியை பார்க்கலாம்.


மாற்றம் வேண்டாம்:
மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். வழக்கமான பேட்டிங் ஆர்டரில் எவ்வித மாற்றமும் செய்யும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபடக் கூடாது.

சேவக், காம்பிர் தான் துவக்க வீரர்களாக வரவேண்டும். ஏனெனில், இங்குள்ள சூழல் குறித்து இவர்கள் அதிகம் பழகிவிட்டனர். உலக சாம்பியன் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, வீரர்கள் செயல்பட்டால் சாதிக்கலாம்.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.