இலங்கையில் ஐ.பி.எல்., போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடக்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் ஒரு சில போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் தர்மதாசா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

கிரிக்கெட் போர்டும் நல்ல வளர்ச்சி பெறும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

தவிர, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டிகளும் ஆண்டிற்கு மூன்று முறை நடந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன்,'' என்றார்.

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் இருந்தார்.

சமீபத்தில் இவரை, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முறைப்படி விலகினார்.

இவருக்கு மாற்று பயிற்சியாளராக, முன்னாள் இலங்கை அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிசை, நேற்று கோல்கட்டா அணி நிர்வாகம் நியமித்தது.

இவரது பயிற்சியின் கீழ், இலங்கை அணி கடந்த 2009ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக டிரவர் பெய்லிசை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவரது அனுபவம், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

பெய்லிஸ் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு, அணி நிர்வாகத்தினருக்கும், அதன் சீனியர் வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடந்த ஐ.பி.எல்., தொடர்களை பார்த்துள்ளேன்.

இதில் கோல்கட்டா அணியினரின் செயல்பாட்டினை நன்கு அறிந்துள்ளேன். ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பயிற்சி அளித்து, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்,'' என்றார்.

பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம் - மீண்டும் ஏமாற்றிய சச்சின்

சிட்னி டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. 41 ரன்னுக்கு அவுட்டாகிய சச்சின், 100வது சர்வதேச சதம் அடிக்க மீண்டும் தவறினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. "டாஸ் வென்ற தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் காம்பிர் "டக் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். சிறிது நேரத்தில் "சீனியர் டிராவிட்டும் (5) ஏமாற்றினார்.

சற்று நேரம் போராடிய சேவக் 30 ரன்கள் எடுத்தார். லட்சுமண் (2) மறுபடியும் சொதப்பினார். விராத் கோஹ்லி (23) ஏமாற்றினார்.

பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சச்சின், 41 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்கும் சாதனையை நழுவ விட்டார். சற்று தாக்குப்பிடித்த அஷ்வின் 20 ரன்கள் எடுத்தார்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மூவரும் "டக் அவுட்டாகினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரைசதம் அடித்த தோனி (57) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் வார்னர் (8), மார்ஷ் (0), கோவன் (16) விக்கெட்டுகளை இழந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

பாண்டிங் (44), கிளார்க் (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாகிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சிட்னி ஆடுகளம் யாருக்கு சாதகம்

சிட்னி ஆடுகளம் "சுழலுக்கு ஒத்துழைக்குமா அல்லது "வேகத்துக்கு கைகொடுக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இது ஆஸ்திரேலிய அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணியை சிதறடிக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் கட்டாயம் வேண்டுமென வலியுறுத்துவதால், பிரச்னை வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.


மாறிய களம்:

இரண்டாவது டெஸ்ட் நாளை சிட்னியில் துவங்குகிறது. இங்குள்ள ஆடுகளம் பொதுவாக சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால், கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய "ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மொத்தம் வீழ்ந்த 30 விக்கெட்டுகளில், 3 விக்கெட்டை தான் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இது, சிட்னி ஆடுகளம் "வேகத்துக்கு சாதகமாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டியது. இதே நிலை இம்முறையும் தொடரலாம். இதன் காரணமாக தான் ஆஸ்திரேலிய அணியில் அவசர அவசரமாக "வேகப்புயல் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பீட்டர் சிடில், ஹில்பெனாஸ், பட்டின்சன், ஹாரிஸ் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டம் வகுத்து இருக்கிறார். இதற்கு பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எல்லாம் வேகம் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்தர் கூறுகையில்,""பந்துவீச்சாளர்கள் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிட்னி ஆடுகளம் பாரம்பரியமாக சுழலுக்கு ஒத்துழைக்கும். என்னை பொறுத்தவரை "ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவதை ஏற்க முடியாது.

மெல்போர்ன் டெஸ்டில் நாதன் லியான் "சுழலை இந்திய வீரர்கள் எளிதாக சமாளித்தனர். வலுவான இலக்கை நிர்ணயிக்கும் பட்சத்தில் எதிரணிக்கு இவர் நிச்சயமாக சவால் கொடுப்பார்,என்றார்.


வானிலை முக்கியம்:

ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போல் இருக்கும்.

இரு அணிகளுக்கும் சாதகமாக அமையும். இதன் தன்மை, வானிலையை பொறுத்து மாறும். மேகமூட்டத்துடன் காணப்பட்டால், பந்துகள் நன்கு "ஸ்விங் ஆகும். போகப் போக "சுழலுக்கும் கைகொடுக்கும்,என்றார்.

2011ம் ஆண்டின் சிறந்த வீரர் டிராவிட்

2011ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர் டிராவிட், ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் தோனிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

இந்திய விளையாட்டு நட்சத்திரங்களில் சிறந்த வீரர்களை, ஆங்கில பத்திரிகை ஒன்று தேர்வு செய்தது.

இதற்காக 2011ல் வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் சச்சின், தோனி, டிராவிட், யுவராஜ், ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இரண்டு வாரங்களாக நடந்த ஓட்டெடுப்பில், துவக்கத்தில் இருந்தே டிராவிட் தான் முன்னிலையில் இருந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் 2011ல் பங்கேற்ற 12 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு "டுவென்டி-20 போட்டிகளில், தலா 5 சதம், அரைசதம் உட்பட மொத்தம் 1300 ரன்கள் எடுத்து இருந்தார்.

கடைசியில், 28 ஆண்டுகளுக்குப் பின் உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, தொடர் நாயகன் யுவராஜ், சச்சின் ஆகியோரை பின் தள்ளி 48 சதவீத ஓட்டுகளுடன் டிராவிட், இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி மனிதனாக போராடியது (4 டெஸ்டில், 3 சதம் உட்பட 461 ரன்கள்), இவரை சிறந்த வீரராக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.

இரண்டாவது இடத்தை, 20 சதவீத ஓட்டுகள் பெற்ற, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தட்டிச் சென்றார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் தோனிக்கு மூன்றாவது இடம் (14 சதவீதம்) தான் கிடைத்தது. யுவராஜ் (12%) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அடுத்த நான்கு இடங்களை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி (3%), டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (தலா 2%), குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் (1%) ஆகியோர் பெற்றனர்.