தோனியின் "பேட்' ரூ.72 லட்சம்

உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி பயன்படுத்திய "பேட்' ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்திய அணி கேப்டன் தோனி, கடந்த ஆண்டு "வின்னிங் வேய்ஸ் டுடே பார் டுமாரோ' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கினார். இதற்கு நிதி சேர்க்கும் விதத்தில், கடந்த உலக கோப்பை பைனலில், இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் சேர்க்க உதவிய "பேட்' உட்பட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

தோனியின் "பேட்' மட்டும் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது. தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது, சிறந்த வீரர் சச்சின் சாதனைகளை குறிக்கும் வகையில், உலகின் பிரபல ஓவியர் சச்சா ஜாப்ரி வரைந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

இதேபோல, முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாண்டிங், ஆன்ட்ரூ பிளின்டாப், ஆலன் பார்டர், மலிங்கா ஆகியோர் வரைந்த ஓவியம், கையெழுத்திட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ. 3.25 கோடி வசூலானது. ஏலம் குறித்து தோனி கூறியது:

எனது அறக்கட்டளை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போதைய ஏலத்தில் கிடைத்துள்ள நிதியை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின், கிரிக்கெட் திறனை வளர்க்க பயன்படுத்தப் போகிறேன்.

தவிர, ராஞ்சியில் புதிய விளையாட்டு அகாடமி ஒன்றை துவங்க போகிறேன். இதற்காக ஜார்க்கண்ட் அரசு போதிய நிலத்தை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், வசதியில்லாத சிறுவர்களின் திறமைகளை பட்டை தீட்டி, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவ உள்ளேன்.

இந்த அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்ப, அருகில் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய 18 வயதில் (1999-2000) பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில், 3 பந்துகள், கிரிக்கெட் பேட், பேடுகளை வழங்கியது. இதன் பின் அடுத்த நான்கு ஆண்டில், எனது கிரிக்கெட் திறமையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு தோனி கூறினார்.


அடுத்த இலக்கு:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளேன். விரைவில் மேலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கையுள்ளது,'' என்றார்.

விளம்பர சர்ச்சை: ஹர்பஜன் நோட்டீஸ்

தோனி நடித்த மதுபான விளம்பரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி, ஹர்பஜன் இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு மதுபான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இதில் பிரபல தொழிலதிபர், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மதுபான விளம்பரத்தில் தோனி நடித்துள்ளார்.

இந்த விளம்பரம் ஹர்பஜன், அவரது குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தை கிண்டல் செய்வது போல அமைந்துள்ளது.

இதையடுத்து ஹர்பஜன் சிங் சார்பில் அவரது தாயார் அவ்தார் சிங், விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதில்,""மதுபான விளம்பரத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குலையும். தவிர, எங்களது சமூகத்தையும் கிண்டல் செய்கிறது. இதனால் இந்த விளம்பரம் குறித்து ஹர்பஜன் சிங் குடும்பத்தினரிடம், அனைத்து பத்திரிகைகள் மற்றும் "டிவி'க்களில், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

இந்த விளம்பரத்தை மூன்று நாட்களில் திரும்பபெற வேண்டும். தவிர, நோட்டீஸ் அனுப்புவதற்கு செலவான ஒரு லட்ச ரூபாயையும், இழப்பீடாக தரவேண்டும்,'' என, கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் வக்கீல் வெளியிட்ட செய்தியில்,"" நாங்கள் அனுப்பிய நோட்டீஸ், உங்களது தவறுகளை சரிசெய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதில் குறிப்பிட்டபடி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கிரிமினல் சட்டப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,'' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள்

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது,'' என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதற்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு நிர்வாகத்தில் வீரர்களே இடம் பெற வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார், காங்., கட்சியை சேர்ந்த விலாஸ் ராவ் தேஷ்முக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அரசியல்வாதிகளுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறியது:

விளையாட்டு நிர்வாகத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகி விட்டால், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலாது. இவர்களிடம் தான் வளர்ச்சிக்கான வழியை காட்டும் சாவி உள்ளது. முன்னாள் வீரர்களால் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே, விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது.

காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இங்கு சர்வதேச தரம் வாய்ந்த இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் அமைய உள்ளன. ஜம்மு மைதானத்துக்கு செல்லும் பாதையை அமைக்க, ராணுவத்தின் உதவியை நாட உள்ளோம்.

எனது எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் இருந்து 1.40 கோடி ரூபாயை எஸ்.பி. கல்லூரி மைதானத்தை மேம்படுத்துவதற்கு வழங்க உள்ளேன். இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள இளைஞர்கள் பெரிதும் பயனடைவர். வாசிர் பாக் பகுதியில் உள்ள அமர் சிங் கல்லூரி மைதானத்துக்கு கூடுதல் வசதிகள் செய்திட, 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

பேடி "பல்டி'

மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் வெங்சர்க்கார் தோல்வி அடைந்ததும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி. தற்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தனது கருத்தை மறுத்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது பற்றி நான் கருத்து எதுவும் கூறவில்லை,''என்று, நழுவினார்.

தோனிக்கு வாகன் பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் தோனி, களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்,'' என, இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் வாகன் கூறியது:

இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் எப்போதும் தற்காப்பு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதால் இவரை தற்காப்பு கேப்டன் என அழைக்கலாம். இவருடைய தலைமையில் இங்கிலாந்து அணி "நம்பர்-1' அணியாக வர முடியும்.

இந்திய கேப்டன் தோனி, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். இதுதான் இவர் கேப்டன் பதவியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு காரணம். கடினமாக போராடும் குணம் தான் இவரது சிறப்பு. இதனால் இவரை சிறந்த போராட்டக்காரர் என்றே அழைக்கலாம்.

களத்தில் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி, அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து, இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.

இத்தொடரில், இரண்டு கேப்டன்களில் யார் அதிக தைரியத்துடன் போட்டியை அணுகுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் அதிகபட்சமான, ஸ்கோரை பதிவு செய்யலாம்.

முக்கியமான நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை, எந்த கேப்டன் சிறப்பாக சமாளிக்கின்றாரோ, அவரது அணி தான் வெற்றிபெறும்.

இவ்வாறு மைக்கேல் வாகன் கூறினார்.

சச்சினுக்கு தலைவணங்கும் ஸ்டிராஸ்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 100வது சதம் அடிப்பதை தலைவணங்கி வரவேற்கிறேன். சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க, இந்திய அணியின் சவாலை சந்திக்கத் தயாராக உள்ளோம்,'' என, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் "சீனியர்' சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டிராஸ் கூறியது:

எந்த ஒரு தொடராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சச்சின் தான், எங்களுக்கு முன்மாதிரி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து இருக்கும் இவர், எங்களுக்கு எதிரான தொடரில் நிச்சயம் சாதிப்பார் என்று நம்புகிறேன். இங்கு சச்சின் 100வது சதம் அடிப்பதை வரவேற்கிறேன்.

இது உண்மையில் வியக்கத்தக்க சாதனை. இந்த இலக்கை எட்டியது மட்டுமல்லாமல், இவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருக்க விரும்புகிறார். எவ்வித நெருக்கடியான நிலையிலும், மனவலிமை உதவியுடன் பேட்டிங்கில் மீண்டு விடுவார். மிகவும் பணிவான குணமுடைய சச்சின், மற்றவர்களிடமும் மரியாதை காட்டுவார்.

"நம்பர்-1' இடம்:

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக வெற்றி, தோல்வி கலந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக செயல் பட்டுள்ளார். இப்போது இந்திய அணிக்கு பயிற்சி தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் எங்களது பலம், பலவீனங்கள் நன்கு தெரியும்.

சொந்தமண் பலம்:

இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியை முந்துவது என்பது கடினம். இந்நிலையில் இந்திய அணியின் சவாலை சந்திப்பது, முதலிடத்தை பெறவுள்ள எங்களை, சிறப்பான அணியாக மாற்றும். தவிர, சொந்தமண் பலமும் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரையில், "நம்பர்-1' இடத்தை பெறுவது தான் எங்கள் லட்சியம். இதைத்தான் வீரர்கள் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதேநேரம் இந்த "ரேங்க்' குறித்து அதிகம் கவலைப்படாமல், தொடர்ந்து சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.

கவலை இல்லை:

தற்போது இதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது. இத்தொடரில் இந்தியாவை வென்று, "நம்பர்-1' இடத்தை பெற்றால், மிகச்சிறப்பாக இருக்கும். ஒரே அணியாக அசத்தும் எங்களுக்கு இது அபாரமான முன்னேற்றம். ஆனால் இத்துடன் வேலை முடிந்து விட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில், இது போன்ற எண்ணங்கள் எப்போதும் அபாயமானது.

மற்றபடி தொடரின் முடிவில் எது நடந்தாலும் கவலையில்லை. கடந்த 6 முதல் 12 மாதங்களாக முயற்சித்து வந்த எங்கள் லட்சியத்தை, மீண்டும் தொடருவோம். ஏனெனில் இந்த சவால் எப்படிப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

டிரம்லட் தொல்லை:

இந்திய துணைக்கண்டத்து அணிகள் கடந்த சில ஆண்டுகளாக "ஷார்ட் பிட்ச்' பந்துகளை நன்கு சமாளிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இத்தொடரிலும் அணியின் சீனியர் வீரர்களுக்கு, இது ஒரு தொல்லையாக இருக்காது என்பது உறுதி.

மற்றபடி, இந்திய அணியினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த முறை டிரம்லட் இந்திய அணிக்கு பெரிதும் சிரமம் கொடுத்தார். இப்போது நல்ல அனுபவம் பெற்ற நிலையில், தொடர்ந்து அசத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.