தோனிக்கு வாகன் பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் தோனி, களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்,'' என, இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் வாகன் கூறியது:

இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் எப்போதும் தற்காப்பு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதால் இவரை தற்காப்பு கேப்டன் என அழைக்கலாம். இவருடைய தலைமையில் இங்கிலாந்து அணி "நம்பர்-1' அணியாக வர முடியும்.

இந்திய கேப்டன் தோனி, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். இதுதான் இவர் கேப்டன் பதவியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு காரணம். கடினமாக போராடும் குணம் தான் இவரது சிறப்பு. இதனால் இவரை சிறந்த போராட்டக்காரர் என்றே அழைக்கலாம்.

களத்தில் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி, அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து, இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.

இத்தொடரில், இரண்டு கேப்டன்களில் யார் அதிக தைரியத்துடன் போட்டியை அணுகுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் அதிகபட்சமான, ஸ்கோரை பதிவு செய்யலாம்.

முக்கியமான நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை, எந்த கேப்டன் சிறப்பாக சமாளிக்கின்றாரோ, அவரது அணி தான் வெற்றிபெறும்.

இவ்வாறு மைக்கேல் வாகன் கூறினார்.

சச்சினுக்கு தலைவணங்கும் ஸ்டிராஸ்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 100வது சதம் அடிப்பதை தலைவணங்கி வரவேற்கிறேன். சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க, இந்திய அணியின் சவாலை சந்திக்கத் தயாராக உள்ளோம்,'' என, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் "சீனியர்' சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டிராஸ் கூறியது:

எந்த ஒரு தொடராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சச்சின் தான், எங்களுக்கு முன்மாதிரி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து இருக்கும் இவர், எங்களுக்கு எதிரான தொடரில் நிச்சயம் சாதிப்பார் என்று நம்புகிறேன். இங்கு சச்சின் 100வது சதம் அடிப்பதை வரவேற்கிறேன்.

இது உண்மையில் வியக்கத்தக்க சாதனை. இந்த இலக்கை எட்டியது மட்டுமல்லாமல், இவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருக்க விரும்புகிறார். எவ்வித நெருக்கடியான நிலையிலும், மனவலிமை உதவியுடன் பேட்டிங்கில் மீண்டு விடுவார். மிகவும் பணிவான குணமுடைய சச்சின், மற்றவர்களிடமும் மரியாதை காட்டுவார்.

"நம்பர்-1' இடம்:

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக வெற்றி, தோல்வி கலந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக செயல் பட்டுள்ளார். இப்போது இந்திய அணிக்கு பயிற்சி தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் எங்களது பலம், பலவீனங்கள் நன்கு தெரியும்.

சொந்தமண் பலம்:

இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியை முந்துவது என்பது கடினம். இந்நிலையில் இந்திய அணியின் சவாலை சந்திப்பது, முதலிடத்தை பெறவுள்ள எங்களை, சிறப்பான அணியாக மாற்றும். தவிர, சொந்தமண் பலமும் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரையில், "நம்பர்-1' இடத்தை பெறுவது தான் எங்கள் லட்சியம். இதைத்தான் வீரர்கள் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதேநேரம் இந்த "ரேங்க்' குறித்து அதிகம் கவலைப்படாமல், தொடர்ந்து சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.

கவலை இல்லை:

தற்போது இதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது. இத்தொடரில் இந்தியாவை வென்று, "நம்பர்-1' இடத்தை பெற்றால், மிகச்சிறப்பாக இருக்கும். ஒரே அணியாக அசத்தும் எங்களுக்கு இது அபாரமான முன்னேற்றம். ஆனால் இத்துடன் வேலை முடிந்து விட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில், இது போன்ற எண்ணங்கள் எப்போதும் அபாயமானது.

மற்றபடி தொடரின் முடிவில் எது நடந்தாலும் கவலையில்லை. கடந்த 6 முதல் 12 மாதங்களாக முயற்சித்து வந்த எங்கள் லட்சியத்தை, மீண்டும் தொடருவோம். ஏனெனில் இந்த சவால் எப்படிப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

டிரம்லட் தொல்லை:

இந்திய துணைக்கண்டத்து அணிகள் கடந்த சில ஆண்டுகளாக "ஷார்ட் பிட்ச்' பந்துகளை நன்கு சமாளிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இத்தொடரிலும் அணியின் சீனியர் வீரர்களுக்கு, இது ஒரு தொல்லையாக இருக்காது என்பது உறுதி.

மற்றபடி, இந்திய அணியினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த முறை டிரம்லட் இந்திய அணிக்கு பெரிதும் சிரமம் கொடுத்தார். இப்போது நல்ல அனுபவம் பெற்ற நிலையில், தொடர்ந்து அசத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

இங்கிலாந்து அணியை அச்சுறுத்தும் சச்சின்

எதிர்வரும் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு சச்சின் தான் அச்சுறுத்தலாக இருப்பார்,'' என, மைக்கேல் வான், நாசர் உசேன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.,) நடக்கும் 2000 வது டெஸ்ட் என்பது மற்றொரு சிறப்பு.

இத்தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் கூறியது:
மைக்கேல் வான்:

சிறந்த வீரர் என்பவர், அவ்வப்போது தனது"ஸ்டைலில்' சில மாற்றங்களை செய்து கொள்வார். ஏனெனில் அப்போது தான், அந்த விளையாட்டு போட்டியில் தொடர்ந்து அசத்த முடியும். தற்போது சச்சின் இப்படித் தான் உள்ளார். கடந்த 2007க்குப் பின் இவர், வித்தியாசமான வீரராக மாறியுள்ளார்.

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துகிறார். துவக்க காலத்தில் எப்படி ரன்கள் சேர்த்தாரோ, அதுபோல விளையாடி, அணிக்காக ரன்கள் சேர்க்கிறார்.

இங்கிலாந்து அணியில் இப்போதுள்ள டிரம்லெட், 2007க்குப் பின் சச்சினுக்கு எதிராக சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் சச்சினை பொறுத்தவரையில் எவ்வித பலவீனத்தையும் வைத்துக் கொள்வதில்லை.

இங்கிலாந்து வீரர்கள் இவரை "அவுட்' செய்ய தொடர்ந்து போராட வேண்டும். தவிர, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை வீசிப் பார்க்க வேண்டும். இருப்பினும் இவையெல்லாம், சச்சினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளில், எந்த பலனையும் தரவில்லை என, அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

நாசர் உசேன்:

கடந்த சில ஆண்டுகளாக சச்சின், தனது ஆட்டமுறையை தொழில்நுட்பம் மற்றும் மனதளவில் மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது அவரது "ஷாட்டுகள்' ஆக்ரோஷமாகவும், கட்டுக்கடங்காமலும் உள்ளது. தனது விக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், சில சாதனைகள் மற்றும் சதங்களுக்குப் பின், "ரன் மெஷினாக' மாறிவிட்டார்.

மைக் ஆர்தர்டன்:

கடந்த 1996ல் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த டெஸ்ட் போட்டியில், சச்சின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை நழுவ விட்டேன். இதைப்பயன்படுத்தி சதம் அடித்து விட்டார். களத்தில் அமைதியாக, நிலையாக இருக்கும், இவரை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது. புராதான நம்பிக்கைகளில் அதிக நம்பிக்கையுள்ள சச்சின், எந்த தவறுக்கும் இடம் தராமல் விளையாடுவார்.

கிரகாம் கூச்:

சச்சினை 1990ல் இருந்து பார்க்கிறேன். 17 வயது சிறுவனாக இருந்த போதே, இவரிடம் பெரிய திறமை இருந்தது. பந்துகளை சரியாக கணிக்கும் அவர், சரியான நேரத்தில், சரியான அளவில், விளாசுவார். இதுபோன்ற பல்வேறு வகையான திறமைகள் தான், சச்சினை உலகத் தரம் வாய்ந்த வீரராக உயர்த்தியுள்ளது.

விரைவில் இந்திய - பாக்., கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையில், விரைவில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், இரண்டு அணிகள் பங்கேற்கும் (பைலேட்ரல்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக இவ்விரு அணிகள் 2007ல் மோதின.

சமீபத்தில் வெளியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்திய அரசு, பாதுகாப்பு நலன் கருதி, இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு, பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதி அளிப்பதில்லை. இதனால் இத்தொடரை பாகிஸ்தானில் நடத்த வாய்ப்பு இல்லை.

சமீபத்தில், இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட கால்பந்து தொடரில் விளையாட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியா அல்லது அன்னிய மண்ணில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக் இடையில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான முடிவு அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு, இந்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து, அடுத்த மாதம் தான் முடிவு செய்ய உள்ளோம். அதன்பின், இந்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் என்றார்.

தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்

கேப்டன் தோனி நேற்று தனது 30வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை பெற்று தந்தார். இந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்று காட்டினார்.

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இவர், நேற்று தனது 30வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடினார்.

இவர் பிறந்த ராஞ்சியில் ரசிகர்கள் "கேக்' வெட்டியும் இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநில துணை முதல்வர் சுதேஷ் மகாத்தே உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறுகையில்,""டெஸ்ட், 50 ஓவர், "டுவென்டி-20' என கிரிக்கெட்டின் அனைத்து வகையான போட்டிகளிலும் தோனி சிறந்து விளங்குவார்.

இதன் மூலம் ரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி அளிப்பார்,''என்றார்.