பாரத ரத்னா சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இன்னும் "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இவர், இந்தியர்களின் "பாரத ரத்னா'வாக விளங்குகிறார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.

இம்முறை பேட்டிங்கில் அசத்திய இவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார். இவருக்கு, நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது இந்த ஆண்டு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து இந்திய வீரர் டிராவிட் கூறியதாவது:

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, இதுவரை "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. "பாரத ரத்னா' விருது பெற என்ன தகுதி வேண்டும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும், ஏற்கனவே இவர் இந்தியர்களின் உள்ளத்தில் "பாரத் ரத்னா'வாக திகழ்கிறார்.

கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினேன். இம்முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளேன். ஏற்கனவே ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி இருப்பதால், எந்த அணிக்காக விளையாடுகிறோம் என்பது பற்றி கவலை இல்லை.

தென் ஆப்ரிக்க தொடருக்கு பின், ஐ.பி.எல்., தொடருக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது உடற்தகுதியில் முழுகவனம் செலுத்தி வருகிறேன். இம்முறை, ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

போலி உலக கோப்பையா? ஐ.சி.சி., விளக்கம்

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமில்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள்ளது.

பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டது என்பதும் தகவல் வெளியாகி உள்ளன.


பிடிபட்டது எது?

கோப்பையின் மதிப்பில் 35 சதவீதம் (ரூ. 22 லட்சம்) வரி செலுத்தினால் தான், கோப்பையை திருப்பி தருவோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை ஐ.சி.சி., செலுத்தாததால் கோப்பை அவர்களிடமே இருந்தது. பைனலில் இந்திய அணி வெற்றி பெற்றதும், அங்கிருந்த மாதிரி உலக கோப்பையைத் தான், ஐ.சி.சி., தலைவர் சரத்பவார், இந்திய அணிக்கு பரிசாக வழங்கினார்.

36 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது தான் முதன்முறை என்றும் தகவல்கள் பரவின. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஐ.சி.சி., மறுப்பு:

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:

மீடியாக்கள் தான் வேண்டுமென்றே, தேவையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. 2011ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது. அது மாதிரி (டூப்ளிகேட்) என்ற பேச்சிற்கே இடமில்லை. இக்கோப்பையில் பத்தாவது உலக கோப்பை தொடரின் லோகோ இடம் பெற்றுள்ளது.

தொடரை பிரபலப்படுத்துவதற்காக பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பை தான் சுங்கத்துறையிடம் பிடிபட்டது. இக்கோப்பையில் தொடரின் லோகோவை விட, சிறிய ஐ.சி.சி., லோகோ இடம் பெற்றிருக்கும். சுங்கத்துறையிடம் பிடிபட்ட கோப்பையை, மீண்டும் துபாய் கொண்டு வர, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

மும்பை சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" எங்களிடம் இருக்கும் கோப்பை உண்மையானதா, போலியானதா என தெரியாது. 35 சதவீத வரியை செலுத்தினால் திருப்பிக்கொடுத்து விடுவோம்,'' என்றார்.

இந்திய ஹீரோக்கள் பெற்றது ஒரிஜினல் உலகக்கோப்பையா?

28 ஆண்டு கால தவத்திற்கு பின் 120 கோடி மக்கள் கனவு ஏப்ரல் 2ம் தேதியன்று நனவானது. இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது.


தங்கள் வெற்றிக் களிப்பை, கைகளில் உலகக்கோப்பையை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடினர் இந்திய வீரர்கள். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் தற்போது ஒரு பூதாகர சர்ச்சை கிளம்பியுள்ளது. அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பை ஒரிஜினல் தானா என்பது.



பிரச்னை :


உலககோப்பையை இந்தியா கொண்டு வர முறையான வரி செலுத்தாதால் உலககோப்பையை மும்பை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் , இறுதிப் போட்டியை வென்று வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அதன் மாதிரி தான் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.



வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரியாக செலுத்தப்பட வேண்டிய ரூ. 22 லட்சம் கட்டப்படவில்லை.

இதையடுத்து

விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர் என்பது புகார். தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் நிலவுகின்றன.



ஐ.சி.சி., மறுப்பு :


இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.சி.சி., இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான உலக கோப்பை தான் என தெரிவித்துள்ளது.


கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பது, உலககோப்பை போட்டியை பிரபலப்படுத்த பயன்படுத்தப்பட்ட மாதிரி கோப்பை என்றும் தெரிவித்துள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பின்...

கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.


ஸ்ரீசாந்த் வாய்ப்பு:

இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஜாகிர் துல்லியம்:

இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.


ஸ்ரீசாந்த் ஏமாற்றம்:

"ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.


யுவராஜ் அபாரம்:

பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.


இரண்டாவது சதம்:

அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார்.

இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.


மலிங்கா மிரட்டல்:

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார்.

இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.


காம்பிர் அதிர்ஷ்டம்:

பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.


வெற்றி கேப்டன்:

அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.


இரண்டாவது கோப்பை:

தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.


முதல்முறையாக அசத்தல் :

சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.


இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.

தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.

பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.