சேவாக், யூசுப் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்கள்

இந்திய வீரர்கள் சேவாக், யூசுப் பதான் ஆகியோர் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது:


நம்முடைய அணி சமபலம் நிறைந்த அணி. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். சேவாக், யூசுப் பதான் ஆகியோர் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்களாக இருப்பார்கள்.


இடது கை சுழற்பந்து வீச்சாளரோடு களமிறங்கினால் அது நமக்கு சாதகமாக இருக்கும். இப்போது பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

நமக்கு 10-வது வீரராக களமிறங்கும் ஹர்பஜன் சிங் கூட சிறப்பாக ஆடி வருவதால் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை குவிக்கக் கூடிய தகுதியுள்ளது.


தோனி அனுபவம் வாய்ந்த வீரர். ஒரே விக்கெட் கீப்பரோடு களமிறங்குவதைப் பற்றி கவலைப்படவில்லை.

உலகக் கோப்பை முழுவதும் விக்கெட் கீப்பர் பணியை திறம்படச் செய்வதற்கு தோனி தகுதியானவர் என்றார்.

கங்குலியின் கனவு தகர்ந்தது

இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இவர், நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இயலாது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கங்குலி. நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில், கொச்சி அணி கங்குலியை சேர்த்துக்கொள்ள முன்வந்தது. இதற்கு மற்ற 9 ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்போது தான் கங்குலியை சேர்க்க முடியும்.

இது குறித்து பி.சி.சி.ஐ., சார்பில் ஐ.பி.எல்., அணி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், கங்குலிக்காக விதியில் மாற்றம் செய்ய மும்பை, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கங்குலியின் கனவு நிறைவேறாமல் போனது. இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமின் கூறுகையில்,""நேற்று நடந்த ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கங்குலி பற்றி விவாதிக்கப்பட்டது.

விதிமுறைப்படி ஏலத்தில் இடம் பெற்ற வீரர்களை, அதற்கு வெளியே தேர்வு செய்ய முடியாது. இந்த விதியை தளர்த்த மற்ற அணிகள் ஒத்துக் கொள்ளாததால் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது,''என்றார்.


பாண்டேக்கு தடை

ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்காக விளையாடியவர் மனிஷ் பாண்டே. இவருக்கு இம்முறை ரூ. 20 லட்சம் மட்டுமே தர முன் வந்தது. இதையடுத்து "சகாரா புனே வாரியர்ஸ்' அணிக்கு மாற முடிவு செய்தார். இவர், விதிமுறைகளை மீறி பல்வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பெங்களூரு அணி நிர்வாகம் குற்றம்சாட்டியது.

இது பற்றி ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின், புனே அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், விதிமுறைகளை மீறியதற்காக நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

உலக கோப்பை அனுபவம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு உள்ளது.

இவர்கள் இருவரும் தலா 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர். இதேபோல உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் பங்கேற்று, சிலர் சாதனை படைத்துள்ளனர். இது குறித்த சிறப்பு பார்வை.

இதுவரை நடந்துள்ள 9 உலக கோப்பை தொடர்களில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், ரிக்கி பாண்டிங் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 39 போட்டியில் பங்கேற்றுள்ளனர்.


இவ்வரிசையில் "டாப்-12' வீரர்கள்:

வீரர் போட்டி

மெக்ராத் (ஆஸி.,) 39

பாண்டிங் (ஆஸி.,) 39

ஜெயசூர்யா (இலங்கை) 38

அக்ரம் (பாக்.,) 38

சச்சின் (இந்தியா) 36

டிசில்வா (இலங்கை) 35

இன்சமாம் (பாக்.,) 35

லாரா (வெ.இ.,) 34

ஸ்ரீநாத் (இந்தியா) 34

பிளமிங் (நியூசி.,) 33

மியான்தத் (பாக்.,) 33

ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 33

"டாப்-12' பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில், இம்முறை பாண்டிங், சச்சின் மட்டும் விளையாட உள்ளனர்.

இவர்கள் பைனல் வரை விளையாடும் பட்சத்தில், உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்கலாம்.

கிரிக்கெட்டின் ஒபாமா தோனி

இந்திய அணி கேப்டன் தோனி தலைமை பண்பில் சிறந்து விளங்குகிறார். இவர் "கிரிக்கெட்டின் ஒபாமாவாக திகழ்கிறார், என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. பதட்டமான நேரத்திலும் கூட மிகவும் "கூலாக செயல்படக் கூடியவர். இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல தலைமைப் பண்பில் மிகச் சிறந்து விளங்குவதாக, சக வீரர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள உற்சாகத்தில் இவர் கூறியது:

உலக கோப்பை தொடர் என்பது சாதாரண தொடர் அல்ல. இதில் அதிக உணர்ச்சிகளுடன் கூடிய எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும். இதற்கான இந்திய தேசிய அணியில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இத்தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததன் மூலம், எனது கனவு நிறைவேறியுள்ளது.

இந்திய ஆடுகளங்கள், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போல் இல்லாமல் மெதுவாக செயல்படும். இங்கு, சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையில் பவுலிங் செய்ய வேண்டியது இருக்கும். போட்டியின் போது ஜாகிர் கானும், ஆஷிஸ் நெஹ்ராவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியான நேரங்களில் பயன்தரும் வகையிலான ஆலோசனைகளை தந்து உதவுவார்கள்.


பேட்டிங் ஆறுதல்:

உத்தர பிரதேச அணி மற்றும் இந்தியா "ஏ அணிகளில் பேட்டிங்கில் நான் தான் துவக்க ஆட்டக்காரர். இதனால் எனது பேட்டிங் திறமை எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்திய அணி என்று வரும் போது, உலகத்தரம் வாய்ந்த துவக்க வீரர்கள் உள்ளனர். எப்படி இருப்பினும், பேட்டிங்கில் என்னால் இயன்ற அளவுக்கு ரன்களை எடுத்து அணிக்கு உதவினால் மகிழ்ச்சியடைவேன்.


கோப்பை வாய்ப்பு:

சமீபத்தில் பல தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இது உலக கோப்பை தொடருக்கு சாதகமாக இருப்பது உறுதி. தற்போதுள்ள இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இத்தொடருக்கான பயிற்சியும் நல்லவிதமாக அமைந்துள்ளது. இதனால் எப்படியும் கோப்பை வெல்லமுடியும் என நம்புகிறேன்.


கிரிக்கெட்டின் ஒபாமா:

இதற்கு அணியின் கேப்டன் தோனி உதவுவார். ஏனெனில் போட்டியில் தோல்வியடையக் கூடிய மோசமான நிலையில் கூட, தோனி "கூலாக இருப்பார். வழக்கத்துக்கு மாறாக கடைசி வரைக்கும் நம்பிக்கையுடன் காணப்படுவார். சக வீரர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் "ஒபாமா என்று தோனியை அழைக்கலாம்.


நம்பிக்கை உள்ளது:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த காயத்துக்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்து வருவதால், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பாக, சரியான பயிற்சிகள் எடுத்து மீண்டு விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வரும், இவர்கள் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் சிகிச்சை

உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நேரத்தில், பிரவீண் குமாரின் முழங்கை காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது. இதனால் காயத்துக்கு சிகிச்சை , பிரவீண் குமார் இங்கிலாந்து செல்கிறார். ஒருவேளை காயம் குணமடையாத பட்சத்தில், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

இந்தியாவின் வெற்றிக்கு சச்சின் உதவுவார்

கடைசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய உதவியாக இருப்பார்,'' என்று, முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 19 முதல் ஏப்., 2 வரை நடக்கிறது. இதுகுறித்த கடந்த 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வீந்தர் சிங் சாந்து (54) கூறியது:

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் தான், தனக்கு கடைசி என்பது சச்சினுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அவரது கவனம் முழுவதும் இதில் தான் உள்ளது. கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக, 100 சதவீதத்துக்கும் அதிகமான திறமையை இவர் வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

மனரீதியாக இத்தொடருக்கு தயாராக உள்ள சச்சின், உடல் அளவில் இன்னும் தயாராகவில்லை. இருந்தாலும், இந்திய அணி கோப்பை வெல்வதற்கு, சச்சின் பெரும் உதவியாக இருப்பார். அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனுபவம் வாய்ந்த இவர், அணியில் இருப்பதால் மற்ற வீரர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

யுவராஜ், யூசுப் பதான், தோனி போன்ற வீரர்கள் அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிக்கு கொண்டு செல்லும் திறமை படைத்தவர்கள். எந்த நிலையிலும் இவர்கள் சோர்ந்துவிடக் கூடாது. எங்களது காலத்தில் மற்றவீரர்கள் விளையாடுவதை நேரில் பார்த்து தான், அவர்களது திறமையை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் வீடியோவில் பார்த்து தெரிந்து அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம். இதற்கு தகுந்த பயிற்சியாளர்களும் உள்ளனர். அவர்கள் உதவியுடன் இந்திய அணி சாதிக்கலாம். தவிர,


கறுப்பு குதிரைகள்:

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கறுப்பு குதிரைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், மீண்டும் அவர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றுள்ளதால், இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு தெரியும். தவிர, ஐ.பி.எல்., அணிகளில் பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும், தங்களது வீரர்களுக்கு தேவையான தகவல்கள் அளிப்பது உறுதி.

கடந்த 1983 தொடரில், திறமையாக விளையாடும் பட்சத்தில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்று நம்பினேன். அதுபோல, கவாஸ்கர், யஷ்பால் சர்மா, மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் <உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மற்ற வீரர்கள் இயல்பான ஆட்டத்தை தொடர இந்திய அணி கோப்பை வெல்ல முடிந்தது. அதுபோல, கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, நெருக்கடியை மறந்து சிறப்பாக சாதிக்கும் பட்சத்தில் கோப்பை வெல்லமுடியும்.

இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறினார்.