உலகக் கோப்பையை வெல்லாமல் சச்சின் ஓய்வு பெறமாட்டார்

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தராமல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமாட்டார் என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.

2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என சிலர் கூறிவருகின்றனர். ஒருவேளை, அதில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டால், உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும் வரை சச்சின் ஓய்வு பெறமாட்டார்.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். சச்சினின் ஓய்வு குறித்து கருத்துக் கூறுவது முறையானதல்ல. இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் அவரின் பங்களிப்பு அவசியம்.

அவரின் ஆட்டத்திறனும், அனுபவமும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். சச்சினின் ஆட்டத்தைக் காண்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று தில்லியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கபில்தேவ் தெரிவித்தார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சச்சின். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வருகிறார். கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேனே தன்னுடன் சச்சினை ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்

IPL 4 - காம்பீர், யுவராஜ், டிராவிட், கங்குலி, கும்ப்ளே நீக்கம்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக்கொள்ளும் வீரர்களை நேற்றுக்குள் (8-ந்தேதி) முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், மலிங்கா, போலர்ட் ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2011 மற்றும் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அந்த அணிகளில் தொடர்ந்து ஆடுவார்கள்.

மற்ற முன்னணி வீரர்களான காம்பீர் (டெல்லி டேர்டெவல்ஸ்), யுவராஜ்சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ராகுல்டிராவிட், கும்ப்ளே (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), கங்குலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் அந்தந்த அணிகளில் இருந்து கழற்றி விடப்பட்டனர். அவர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றனர்.

இதேபோல முன்னணி வேகப்பந்து வீரர்களான ஜாகீர்கான் (மும்பை இந்தியன்ஸ்), இஷாந்த் சர்மா (கொல்கத்தா) ஆகியோரும் அந்த அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஷேவாக் டெல்லி அணியிலும், வீரட் கோக்லி பெங்களூர் அணியிலும், கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் நீடிக்கிறார்கள்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி எந்த வீரரையும் வைத் துக்கொள்ளவில்லை. அந்த அணியில் ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. ஆனால் கோர்ட்டு இந்த அணிகளின் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இந்த 2 அணிகளும் பங்கேற்கலாம். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து முறையீடு செய்து உள்ளது. புதிதாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன.

இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகளா? அல்லது 10 அணிகளா? விளையாடும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே விளையாடிய வீரர்களில் வாட்சன், வார்னே ஆகியோரை தொடர்ந்து ஒப்பந்தத்தில் வைத்து இருப்பதாக அறி வித்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் யூசுப்பதான் நீட்டிக்கப்படவில்லை. ஏலத்தில் அவருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று தெரிகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் யாரையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அந்த அணி நிர்வாகம் யுவராஜ் சிங், சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.

சூடுபிடிக்கும் ஐ.பி.எல்., ஏலம்!

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களும் பரபரப்பானவை தான். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) ஏற்படுத்தப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு மூலம், கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள வீரர்கள் ஏலம், புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த அணிகள் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் (2010) முடிந்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், மறுபடியும் வீரர்கள் ஏலம் (ஜன. 8) நடக்க உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள், அணி மாற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி நீக்கம்:

இந்த முறை கொச்சி மற்றும் புனே என 2 அணிகள் புதியதாக இணைக்கப்பட்டன. இதனால் 10 அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறிய கூறி, ராஜஸ்தான் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் உரிமையை பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இதனால் 8 அணிகள் மட்டுமே இந்த முறையும் பங்கேற்க உள்ளன. இதில், கொச்சி அணியின் உரிமை இழுபறியில் உள்ளது.

புதிய ஏலம்:

ஐ.பி.எல்., புதிய ஏலத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்கள் அணிகளில் 3 ஆண்டுகளாக விளையாடி வரும் வீரர்களில் 4 பேரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். மற்ற வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவர்.

62 வீரர்கள்:

கடந்த முறை நடந்த ஏலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு நட்சத்திர வீரர்கள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இம்முறை வீரர்கள் தரத்தினைக் கொண்டு, பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் படி முதல் பிரிவில் சச்சின், தோனி, சேவக், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வீரர்களுக்கு அடிப்படை விலையாக 1.84 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதில் சச்சின் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் தோனியை (சென்னை சூப்பர் கிங்ஸ்) அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 1.3 கோடி ரூபாய் அடிப்படை விலை. இதில் யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் இடம் பெற்றுள்ளனர். கங்குலி, டிராவிட், கும்ளே, லட்சுமண், காம்பிர், விராத் கோஹ்லி உள்ளிட்டோர் மூன்றாவது வகையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை விலை 92 லட்சம் ரூபாய்.

சகா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா, சத்தீஸ்வர் புஜாரா உள்ளிட்ட பல வீரர்கள் நான்காவது பிரிவில் (ரூ. 46 லட்சம்) உள்ளனர். ஐந்தாவது மற்றும் கடைசி பிரிவில் (ரூ. 23 லட்சம்) மன்பிரீத் கோனி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் உரிமைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான், பஞ்சாப் அணியின் யுவராஜ் ஆகியோருக்கு மவுசு அதிகரித்துள்ளது.

கங்குலிக்கு கல்தா:

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், தங்கம் அணியில் ஏற்கனவே உள்ள வீரர்களை வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக அணியின் கேப்டன் கங்குலிக்கு, கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளது. இதே போல, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராகுல் டிராவிட்டை கழற்றி விட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மல்லையா எதிர்ப்பு:

ஐ.பி.எல்., புதிய ஏல நடைமுறைக்கு, அணியின் உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அணியை சிறப்பான முறையில் தேர்வு செய்து வைத்திருந்தோம். இந்நிலையில், புதிய ஏலத்தின் காரணமாக பெரும்பாலான வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறுகையில்,"" ஐ.பி.எல்., ஏலம் குறித்த பி.சி.சி.ஐ., யின் நடைமுறை மாற்றம், பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. அணியின் உரிமையாளர்களிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல், பி.சி.சி.ஐ., தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இது கண்டிக்கத் தக்கது,'' என்றார்.

இந்தியா சிறப்பாக ஆடினாலும் உலக கோப்பையை வெல்வது கடினம்

இந்திய அணியின் சமீப கால வெற்றிகள் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-

காம்பீர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுள்ளது. ஆனாலும் உலககோப்பை போட்டிகளை சந்திக்க இது போதாது.

உலக கோப்பை போட்டி வேறு மாதிரியான அனுபவமாக இருக்கும். எனவே தகுந்தமாதிரி தயாராக வேண்டும். உலக கோப்பையை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னேறி செல்ல வேண்டும்.

இதற்கு நாம் முழு தகுதியோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டுமானால் அடுத்து நடக்கும் தென்ஆப்பிரிக்கா போட்டியிலும் வெல்ல வேண்டும். தென்ஆப்பிரிக்கா மண்ணில், அதன் சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமானது. அதில் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருக்கும். அந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி தொடரும்.

கொல்கத்தா அணியில் மீண்டும் நான் இடம்பெற மாட்டேன் என்று அனுமானமாக சொல்வதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இந்த அணியில் நான் 3 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அணி மீது எனக்கு அதிக பற்றுதல் உள்ளது.

ஆனாலும் இதில் அணி உரிமையாளர்களின் முடிவே முக்கியம். ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நான் அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இதுவரை அணி உரிமையாளர் ஷாருக்கானுடன் பேசவில்லை.

ஒருவேளை கொல்கத்தா அணியில் இடம் பெறாத பட்சத்தில் ஏலம் மூலம் வேறு அணிக்கு சென்று ஆடுவேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு *ஐ.சி.சி., உறுதி

பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர்வது உறுதி,'' என, ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகிய மூன்று வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து இவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தற்காலிகமாக தடைசெய்தது. இதை எதிர்த்து இவர்கள் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு, வரும் ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சூதாட்டம் குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் கூறுகையில்,"" பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இவைகளை கடினமான முயற்சிக்குப் பின் சேகரித்துள்ளோம்.

இந்த வீரர்கள் மீது வழக்குத் தொடர்வது உறுதி. முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தகுந்த தண்டனை வழங்கப்படும். பொதுவாக நாங்கள் எல்லோரையும் சமமாகவே நடத்த விரும்புகிறோம். அதேநேரம், இதுபோன்ற விஷயங்களில், யாருக்கும் கருணை காட்டமாட்டோம்,'' என்றார்.

வக்கீல் கண்டனம்:

லார்கட்டின் இந்த கருத்துக்கு சல்மான் பட் வக்கீல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலித் ரஞ்ஜா கூறுகையில்,"" லார்கட்டின் கருத்து, வீரர்களின் அப்பீல் குறித்து விசாரிக்கும் அமைப்பை, மிரட்டுவது போல உள்ளது,'' என்றார்.