ஐபிஎல்(4) போட்டியில் கொச்சி அணி கலந்து கொள்ளலாம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் 8 அணிகள் பங்கேற்றன.கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் புதிதாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் புனே அணி ரூ.1,702 கோடிக்கும், கொச்சி அணி ரூ.1,533 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

கொச்சி அணியில் ஆங்கர் எர்த், பிரினி டெவலப்பர்ஸ், ரோசி புளு, பிலிம்வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதியுள்ள 20 சதவீத பங்குகள் ரெண் டஸ்வாஸ் ஸ்போர்ட்ஸ் வேல்டு நிறுவனத்திடம் இருந்தது. ஏலத்தின்போது இந்த நிறுவனம் வெற்றிக்கு உதவியதால் இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன.இதனால் மற்ற பங்குதாரர்களுக்கு இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக பங்குகளை விற்கப்போவதாக அறிவித்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது.


கொச்சி அணி பங்குதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்சினை முடிக்க அந்த அணிக்கு கிரிக்கெட் வாரியம் 3 முறை காலக்கெடு விதிக்கப்பட்டது


இதற்கிடையே 10 சதவீத பங்குகளை மட்டுமே வைத்து கொள்வதாக ரெண்டஸ் வாஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இது குறித்து ஐ.பி.எல். அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கொச்சி அணிக்கு பிரச்சினைகள் இருக்காது என்று கூறப்பட்டது.


இதற்கிடையே விதிக்கப்பட்ட காலக்கெடு இன்று முடிந்தது,எனவே அந்த அணி கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்க மும்பையில் இன்று ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டப்பட்டது. கூட்டத்தில் கொச்சி அணி கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

சச்சினுக்கு கிடைக்குமா லாரஸ் விருது

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் லாரஸ் விருதை (2011) கைப்பற்றும் வாய்ப்பு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கிடைத்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான (2011) இவ்விருதுகள் பிப்ரவரியில் வழங்கப்பட உள்ளன.

இதற்கான விளையாட்டு வீரர்கள் பரிந்துரை பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் இந்த ஆண்டு கிரிக்கெட் அரங்கில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் (எதிர்-தென் ஆப்ரிக்கா, குவாலியர்) எடுத்த முதல் வீரர், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் (எதிர்-ஆஸ்திரேலியா, பெங்களூரு) உள்ளிட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இவருடன் இணைந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பெயரும், லாரஸ் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர், இந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை (எதிர்-இந்தியா, காலே) வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

இவர்களுடன் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), "பார்முலா-1' சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் (ஜெர்மனி), கால்பந்து வீரர்களான டீகோ போர்லான் (உருகுவே), இனியஸ்டா (ஸ்பெயின்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கோல்ப் வீரர் கிரீம் மெக்டவல் (அயர்லாந்து) உள்ளிட்டோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களிலிருந்து 6 பேர், லாரஸ் மீடியா தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். பின்னர் இந்த 6 பேரிலிருந்து ஒருவர், ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெறுவர். விருது வழங்கும் நிகழ்ச்சி பிப். 7 ம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது.

ஐ.பி.எல்., தொடரில் லாரா

ஐ.பி.எல்., தொடரில் விளையாட பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாரா. 131 டெஸ்ட் போட்டிகளில் 11, 953 ரன் மற்றும் 299 ஒரு நாள் போட்டிகளில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2007ல் ஓய்வு பெற்றார்.

பின் கபில் தேவ் தலைமையிலான, சர்ச்சைக்குரிய இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பில் சேர்ந்தார். இதில், மும்பை சேம்ப்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். ஐ.சி.சி., தடை காரணமாக ஐ.சி.எல்., அமைப்பு சிதைந்து போனது.

இந்திய கிரிக்கெட் போர்டு துவக்கிய இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு அசுர வளர்ச்சி கண்டது. தற்போது 41 வயதான லாரா, ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வார்ன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டீபன் பிளமிங் போல, அணிகளுக்கு வழிகாட்டும் குருவாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாரா கூறியது:

வரும் 2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க தயாராக உள்ளேன். இதனை மனதில் வைத்து, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும். அப்போது தான் உடல் தகுதியை மேம்படுத்த முடியும். ஐ.பி.எல்., தொடரில் இளம் வீரர்களுடன் போட்டியிட விரும்பவில்லை.

விளையாடும் "லெவனில்' இடம் பெறாவிட்டாலும் கூட, அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். வீரராக மட்டும் அல்லாமல் நல்ல ஆலோசகராகவும் பணியாற்ற ஆசைப்படுகிறேன்.

ஐ.சி.எல்., அமைப்பு கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது. யாருக்கும் போட்டியாக துவக்கப்படவில்லை. இதில், கபில்தேவ், டோனி கிரெய்க் போன்ற ஜாம்பான்கள் தொடர்பு வைத்து இருந்தனர். அதனால் தான் நானும் சேர்ந்தேன்.

இறுதியில், அது தவறான முடிவாக அமைந்து விட்டது. ஐ.சி.எல்., போட்டிகளில் பங்கேற்று, ஐ.சி.சி., தடையை சந்திக்க விரும்பவில்லை. ஒரு "சீசன்' மட்டுமே விளையாடினேன். அதற்கு ஐ.சி.எல்., போட்டிகளில் இருந்து விலகி விட்டேன்.

இவ்வாறு லாரா கூறினார்.

எதிர்கால கேப்டன் கோஹ்லி

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லிக்கு, எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி உள்ளது,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி. கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து அசத்தி, எல்லோரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:

சமீப காலமாக விராத் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் அபார திறமை வெளிப்படுத்தி வருகிறார். சச்சின், டிராவிட் மற்றும் லட்சுமண் போன்று நிலையான ஆட்டத்தை தருகிறார். இன்னும் போட்டியின் அனைத்து பிரிவிலும் கவனம் செலுத்தி, கடுமையாக போராடினால், எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது.

இதில் எந்த சந்தேகமும் இல்லை. தலைமை பணியை சிறப்பாக செய்யும் அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது.

இவர் சிறந்த வீரர் தான் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதேநேரம், பேட்ஸ்மேன் என்பவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்த வேண்டும். அதுபோல, விராத் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும்.

மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுள்ள அஷ்வின், அழகாக பந்து வீசுகிறார். போட்டியின் பதட்டமான சூழலிலும், அமைதியாக பலவிதமான வகைகளில் பவுலிங் செய்கின்றார்.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

நவீன பிராட்மேன் சச்சின் - லாரா

கிரிக்கெட் அரங்கின் தற்கால டான் பிராட்மேன் சச்சின் தான்,'' என, புகழாரம் சூட்டியுள்ளார் பிரையன் லாரா.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா. இதுவரை 131 டெஸ்ட் (11953 ரன்கள்), 299 ஒரு நாள் (10405 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். துபாயில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த லாரா, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து லாரா கூறியது:

ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் இருவருமே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவரையும் வேறுபடுத்த விரும்ப வில்லை. ஆனால் 16 வயது முதல் 37 வயது வரை 21 ஆண்டுகளாக வெகு நீண்ட காலம் கிரிக்கெட் அரங்கில் சச்சின் அசத்தி வருகிறார். இதை நினைக்கும் போது ஆச்சரியம் அளிக்கிறது.

பிராட்மேனின் பேட்டிங் சராசரி (99.96), சச்சினை காட்டிலும் அதிகம் தான். இருப்பினும் அந்தக் காலக்கட்டத்தில் ஆட்டத்தின் தன்மை வேறுவிதமாக இருந்தது. தற்காலத்தில் வேறுவிதமாக உள்ளது. அக்காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களிடம் இது குறித்து கேட்ட போது, " இப்போது பிராட்மேன் விளையாடியிருந்தால், 90 சதவீதம் சராசரி பெற்றிருக்க முடியாது' என்று என்னிடம் தெரிவித்தனர்.

அதனால் தான் சச்சினை தற்கால பிராட்மேன் என உறுதியாக கூறுகிறேன்.

ஜிம்பாப்வேயில் நடக்கும் "டுவென்டி-20' போட்டிகளில் தற்போது பங்கேற்று வருகிறேன். தவிர, ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு, பேட்டிங் ஆலோசனைகளை அளித்து வருகிறேன். கோல்ப் விளையாட்டில் தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு லாரா தெரிவித்தார்.