சடுகுடு சக்கரவர்த்தி

கபடி என்று அழைக்கப்படும் சடுகுடு விளையாட்டு தமிழகத்தில்தான் உருவானது என்றாலும் இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியுள்ளது.

வங்கதேச நாட்டின் தேசிய விளையாட்டாகவும், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநில விளையாட்டாகவும் உள்ளது கபடி. தமிழர் விளையாட்டான கபடியில் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைக் காட்டிலும் பஞ்சாபியர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த பலர் இந்த விளையாட்டில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் பல்வீந்தர் சிங் ஃபித்தா.


1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் பிறந்தார் பல்வீந்தர். தனது 4-வது வயது முதலே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் அவர். சிறந்த கபடி வீரராக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் தீவிரமாக பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். கபடியின் மைந்தன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பல்வீந்தர் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாள்களில் பல போட்டிகளில் பங்கேற்று வியத்தகு வெற்றிகளை குவித்தார்.


1973-ம் ஆண்டு முதல் முதலாக தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். தனது முதல் தேசிய போட்டியிலேயே தன் தனித்திறமையால் அவர் பங்கேற்ற அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார் பல்வீந்தர் சிங்.


பின்னர் கல்லூரி வாழ்க்கையிலும் பல போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்தார். 1973-ம் ஆண்டுக்கும் 1991-ம் ஆண்டுக்கும் இடையே நடந்த 18 தேசிய கபடி போட்டிகளில் பங்கற்ற பல்வீந்தர் 10 போட்டிகளில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்ல, பல்வேறு சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பஞ்சாப் மாநில காவல்துறையில் பணிபுரியும் பல்வீந்தர் அந்த அணிக்காக விளையாடினார். 1977-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டியில் பல்வீந்தரின் தனித் திறமையால் பஞ்சாப் அணி 22 தங்கப் பதக்கங்களை வென்றது.


1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்ற இந்திய கபடி அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. 1984-ம் ஆண்டு நடந்த ஆசிய கபடிப் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்கிய பல்வீந்தர் தனது அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார்.


1989-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியன் கேப்டனாக களமிறங்கினார் பல்வீந்தர். அந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.


25-ம் ஆண்டுகளுக்கும் மேலாக கபடியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய பல்வீந்தர் சிங் ஃபித்தா 1997-ம் ஆண்டு கபடி விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கபடி விளையாட்டில் அவரது சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1999-ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

கிரிக்கெட்டை சீர்குலைக்கும் சூதாட்டம்

கிரிக்கெட்டுக்கு "ஜென்டில் மேன்' விளையாட்டு என்ற பெயர் உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளம் அதிகம். ஒரு போட்டிக்கு 2 லட்சம் வரை வீரர்கள் சம்பாதிக்கிறார்கள்.

தவிர, விளம்பர வருமானம் கோடிக் கணக்கில் கொட்டுகிறது. இவ்வளவு பணம் சம்பாதித்தும், ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு இது போதவில்லை. "மேட்ச் பிக்சிங்', "ஸ்பாட் பிக்சிங்' என பல சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் ஒரே போட்டியில், பல கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பார்ம் இருந்தால் மட்டுமே, கிரிக்கெட் விளையாட முடியும். தவிர, அணியிலும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் சமயத்திலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கின்றனர்.

பாக்., அதிகம்:

ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளை சேர்ந்த வீரர்கள், பல்வேறு சமயங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி பாகிஸ்தான் தான். . இந்த அணி வீரர்கள் அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர்.

இருப்பினும் சூதாட்டத்தை விட்டுவிட மனதில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர், வாஹப் ரியாஸ் உள்ளிட்ட இளம் வீரர்கள் தான் சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர்.

பயம் இல்லை:

இளம் வயதில் சிறப்பாக ஆடி, பிரகாசமான எதிர்காலத்தை எட்ட, இம்மாதிரியான வீரர்களுக்கு ஆசை இல்லை. ஒரு சில போட்டிகள் விளையாடினாலும், சூதாட்டத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் எந்தப் பிரச்னை பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

உலக கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) மெத்தனப் போக்கும் இதற்கு முக்கிய காரணம். ஐ.சி.சி., சார்பில் செயல்பட்டு வரும் ஊழல் கண்காணிப்பு குழு, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செயல்பட வில்லை. மீடியாக்கள் சூதாட்டப் பிரச்னையை கிளப்பிய பின்னரே, ஊழல் கண்காணிப்பு குழு செயல்படத் துவங்கி உள்ளது.

இதனால் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கும் துளி அளவும் பயம் ஏற்படுவது கிடையாது. தவிர, சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.

கடுமையான தண்டணை:

சூதாட்டப் பிரச்னையில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்துவதை விட்டுவிட்டு, உடனடியாக தண்டனை வழங்க வழிவகø செய்ய வேண்டும். ஐ.சி.சி., மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இதில் துரிதமாக செயல்பட வேண்டும். அப்போது தான், கிரிக்கெட் மீதான மக்களின் ஈர்ப்பு இனி வரும் காலங்களில் நிலை நிற்கும்.

நாட்டுப்பற்று அவசியம்:

எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டுப்பற்று மிகவும் அவசியம். பணத்துக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, தாய்நாட்டின் வெற்றிக்காக போராடும் குணம் வேண்டும். அப்போது தான் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சாம்பியன்ஸ் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- வயம்பா (இலங்கை) அணிகள் மோதின.


இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.


அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய வயம்பா அணி 17.1 ஓவரில் 103 ரன்களுக்கு அல் அவுட்டானது.


இதையடுத்து சென்னை அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கருணாநாயகே 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்தார்

மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர்...

கிரிக்கெட்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் மேற்கிந்தியத் தீவுகளின் கார்ல் ஹுப்பர்.

21 ஆண்டுகள் அந்த அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ÷ஹுப்பர் கயானாவில் உள்ள பிரிட்ஜ்டவுனில் 1966-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் கயானா அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.

பின்னர் 1987-ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பிடித்தார்.1987-ம் ஆண்டு மார்ச்சில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார் ஹுப்பர். அதே ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் -இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

ஒரு நாள், டெஸ்ட் என இரண்டு போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். 2001-ல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 233 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் ஹுப்பரின் அதிகபட்ச ரன்களாகும். ஒரு நாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 133*.

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியில் கென்ட், லங்காஷையர் அணிகளுக்காக விளையாடி உள்ள ஹுப்பர், கவுன்ட்டி கிரிக்கெட்டின் 18 அணிகளுக்கு எதிராகவும் சதமடித்தவர் என்ற பெருமைக் குரியவர்.

மேலும், 100 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் உரியவர் ஹுப்பர். பின்னர் இந்தச் சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜேக்கஸ் காலிஸ் சமன் செய்தார்.

முன் கள பீல்டிங்கில் அசைக்க முடியாதவராக விளங்கினார் கூப்பர். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில், தான் விளையாடிய காலங்களில் சிறந்து விளங்கிய பேட்ஸ்மேன்களில் கார்ல் ஹுப்பர் மறக்க முடியாதவர் என தெரிவித்தார்.

2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,762 ரன்களும், 277 ஒரு நாள் போட்டிகளில் 5,761 ரன்களும் எடுத்துள்ளார்.

இதில் 20 சதங்கள், 56 அரை சதங்கள் அடங்கும். ÷மொத்தம் 307 விக்கெட்டுகள், 235 கேட்சுகளையும் பிடித்துள்ளார் கார்ல் ஹுப்பர்

சூதாட்டத்தில் 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில், 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.


ஐசிசி.,யின் ஊழல் தடுப்பு பிரிவு தயாரித்த இந்த முறைகேடு பட்டியலில் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


சில சூதாட்ட முறைகள் மர்மமான முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.