இந்தியாவுக்கு 175 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது.

"சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றன.

இரண்டு தங்கம்:

கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் மதுரிகா, சக நாட்டு வீராங்னையான ஷாமினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் மதுரிகா 7-11, 8-11, 12-10, 11-9, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

கடைசி வரை போராடிய ஷாமினி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாதீப் ராய் (11-6, 6-11, 8-11, 11-4, 11-5, 11-9) தங்கம் வென்றார். இவரை எதிர்த்து பைனலில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் அமல்ராஜ் வெற்றி வென்றார். நேற்று நடந்த மாரத்தான் போட்டியில், இந்தியாவின் ராம் சிங் வெண்கலம் வென்றார்.

சர்வதேச அளவில் மாரத்தான் போட்டிக்கான தூரம் 42.1 கி.மீ., தான். ஆனால் தெற்காசிய போட்டியில் 34.1 கி.மீ., தூரம் தான் மாரத்தான் நடந்தது. இதனால் இப்போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முதலிடம்:

தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 175 (90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம்) பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. 80 பதக்கங்களுடன் (19 தங்கம், 25 வெள்ளி, 36 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பாகிஸ்தானும், 97 பதக்கங்களுடன் (18 தங்கம், 23 வெள்ளி, 56 வெண்கலம்) வங்கதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

குறைவு:

கடந்த 2006 ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த 10 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய அணி, 214 (118 தங்கம், 59 வெள்ளி, 37 வெண்கலம்) பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை அதைவிட குறைவாக பதக்கங்களை பெற்றுள்ளது இந்தியா.

பதக்கப்பட்டியல்

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
இந்தியா 90 55 30 175
பாகிஸ்தான் 19 25 36 80
வங்கதேசம் 18 23 56 97
இலங்கை 16 34 54 104
நேபாள் 7 9 19 35
ஆப்கானிஸ்தான் 7 9 16 32
பூடான் 0 2 3 5
மாலத்தீவு 0 0 2 2
மொத்தம் 157 157 214 528
------------
கோலாகல நிறைவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான விழாவில் வங்கதேச அதிபர் ஜில்லர் ரஹ்மான், ராணுவ தலைவர் அப்துல் முபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 12 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களை நிகழ்த்தினர். பாரம்பரிய முறைப்படி தெற்காசிய விளையாட்டின் கொடியிறக்கப்பட்டு, அடுத்து தொடரை நடத்த உள்ள இந்தியாவிடம் (2012) வழங்கப்பட்டது.

வங்கதேச ஒலிம்பிக் சங்க தலைவர் ஜென் முபின், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடியை வழங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழா, மேளதாளங்கள் முழங்க இனிதே முடிந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்திய வீரர், வீராங்கனைகள், பங்கபந்து மைதானத்தில் நடந்த இவ்விழாவில், முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இறுதி அணிவகுப்பில் பெரும்பாலான அணிகளின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
----------



கல்மாடி உறுதி
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அணியினர் 90 தங்கம் உட்பட 173 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

அவர்களை ஊக்குவிப்பது அவசியம். மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இது குறித்து பேசி, வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய அணியினரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

வரும் 2012 ம் ஆண்டு 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் நடக்க உள்ளன. இதற்கான ஜோதி "சார்க்' அமைப்பு நாடுகளில் வலம் வரும். வங்கதேசத்திலிருந்து துவங்கி மற்ற நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடையும். இவ்வாறு கல்மாடி தெரிவித்தார்.

யாருக்கு கேப்டன் பதவி?

இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உலககோப்பை ஹாக்கி தொடர் வரும் 28 ம் தேதி முதல் மார்ச். 13 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில், கேப்டனாக ராஜ்பால் சிங்கை நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஆனால் இதற்கு அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா மற்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பிரப்ஜோத் சிங்கை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் பயிற்சியாளர், ஹாக்கி இந்தியா அமைப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?: சமீபத்தில் சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலககோப்பை பயிற்சி முகாமை புறக்கணித்தனர். இப்பிரச்னையின் போது, அணியின் கேப்டனாக இருந்த ராஜ்பால் சிங், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட வில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக ராஜ்பால் சிங்கின் மீதான நம்பிக்கையை வீரர்கள் இழந்து விட்டனர். இதனால் அவர் உலககோப்பையில் கேப்டனாக நீடிப்பதை வீரர்கள் விரும்பவில்லை. இது ஒரு புறம் இருக்க, 10 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி சார்பாக விளையாடி வரும் பிரப்ஜோத் சிங், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஸ்டைன் வேகத்தில் இந்தியா பரிதாபம்

தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன் வேகத்தில், நிலைதடுமாறிய இந்திய அணி, நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது.

"டாப் ஆர்டர்' ஏமாற்றம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ரன்னுடன் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையில் காம்பிர் (12), மார்கல் பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின் வந்த முரளி விஜய் (4), தன் பங்குக்கு ஒரு பவுண்டரி மட்டும் அடித்து விட்டு, ஸ்டைனின் பந்தில் போல்டானார்.

சேவக் சதம்: அடுத்து சேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின், அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும், 7 ரன்னுடன் திரும்பினார். பின் பத்ரிநாத், சேவக் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவக், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 18 வது சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில், 109 ரன்கள் (15 பவுண்டரி) எடுத்திருந்த சேவக் அவுட்டானார்.

பத்ரிநாத் ஆறுதல்: தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பத்ரிநாத், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது.


12 ரன்னுக்கு 6 விக்.,: இந்நிலையில் ஹாரிசின் அபாரமான சுழலில், கேப்டன் தோனி (6), அவுட்டானார். இதன் பின் இந்திய அணியின் வீழ்ச்சி துவங்கியது. ஸ்டைன் பவுலிங்கில், அனல் பறந்தது. இவரது வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய வீரர்கள் ஒருவர் பின், ஒருவராக பெவிலியன் திரும்பினர்.

பத்ரிநாத் (56), சகா (0), ஜாகிர் கான் (2), அமித் மிஸ்ரா (0), ஹர்பஜன் சிங் (8) என வரிசையாக அவுட்டாயினர். கடைசி 12 ரன்கள் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி "பாலோ-ஆன்' பெற்றது.

தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 325 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணியை, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், மீண்டும் "பேட்டிங்' செய்ய அழைத்தார்.


மீண்டும் சொதப்பல்: இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஏமாற்றம். காம்பிர் (1), இம்முறையும் சொதப்பினார். சேவக், 16 ரன்னுக்கு வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (15), முரளி விஜய் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.


போராட்டம்: தற்போது இந்திய அணி 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டும் வைத்துள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினமே.


--------
சிறந்த பந்து வீச்சு

நேற்று இந்திய அணிக்கு எதிராக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்திய, தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில், தனது மிகச்சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இதுவரை 37 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 13 வது முறையாக ஐந்து விக்கெட்டும், அதற்கு மேலும் கைப்பற்றியுள்ளார்.

அசார் சாதனை சமன்

இந்திய கிரிக்கெட் வீரர் சேவக், நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, நான்காவது சதம் அடித்தார். இதன்மூலம் முன்னாள் இந்திய வீரர் அசாருதினின் (4 சதம், எதிர்-தென் ஆப்ரிக்கா) சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் சேவக், கடந்த 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான புளோயம்போன்டைன் டெஸ்டில் சதம் (105) அடித்தார். பின் கான்பூர் (165 ரன், 2004 ), சென்னை (319, 2008) டெஸ்டில் சதம் கடந்து இருந்தார்.

"ஆல்- அவுட்' ரகசியம்

நேற்றைய போட்டி குறித்து தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் கூறியது: ஆடுகளத்தில் சரியான இடத்தில் பவுலிங் செய்து, விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்திருந்தோம். இந்நிலையில் தேநீர் இடைவேளையின் போது பந்தின் தையல் பிரிந்து இருந்தது. பின் மீண்டும் பவுலிங் செய்த போது, பிரிந்த இடத்தில் முடிச்சு போடப்பட்டு இருந்தது.

இதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி ஆல் அவுட்டான பின், பவுலர்கள் நலன் கருதி, ஸ்மித் இந்தியாவுக்கு "பாலோ-ஆன்' கொடுக்கத் தயங்கினார். ஆனால் நாங்கள், தொடர்ந்து பந்து வீச தயாராக இருந்தோம். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என கேப்டனிடம் உறுதியளித்த பின் தான், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இவ்வாறு ஸ்டைன் கூறினார்.

வெற்றிக்கு போராடுவோம்

நாக்பூரில் நடக்கும் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய வீரர் சேவக் கூறுகையில்,"" தேநீர் இடைவேளைக்குப் பின் பந்தின் தன்மை மாறி விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன், "ரிவர்ஸ்விங்' செய்து விக்கெட் வேட்டை நடத்தி விட்டார்.

இதற்கு முன், கடந்த 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் "பாலோ-ஆன்' பெற்று பின் வெற்றிபெற்றோம். அதுபோல இங்கும் வெற்றி பெற முயற்சிப்போம். அனுபவ வீரர் சச்சின், முரளி விஜய் மற்றும் பல பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்

காவஸ்கரின் சாதனையை சமன் செய்தார் காலிஸ்

நாகபுரி டெஸ்டில் அடித்துள்ள சதம் காலிஸின் 34-வது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் இந்திய வீரர் சுநீல் காவஸ்கர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லாரா ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கெனவே 34 சதங்களை அடித்துள்ளனர்.

டெஸ்டில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் 45 சதங்களுடன் டெண்டுல்கர் முதலிடத்திலும், 39 சதங்களுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இதுதவிர இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட்டாக அதிக ரன்களை (285) எடுத்த தென் ஆப்பிரிக்க ஜோடி என்ற சாதனையையும் காலிஸ் - ஆம்லா ஜோடி புரிந்துள்ளது.

ஆம்லாவுக்கு இது 8-வது டெஸ்ட் சதமாகும்

முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.

தவிர, ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் விருது மற்றும் பரிசுத் தொகையை தட்டிச் செல்லலாம்.

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நடக்கிறது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா இரண்டாவது (120 புள்ளிகள்) இடத்தில் உள்ளது.

நேற்று துவங்க உள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகள் பெறும். அதே சமயம் இந்தியா 122 புள்ளிகளை பெறும். தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால் 125 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தை தன்வசப்படுத்தும். இந்திய அணி 120 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு தள்ளப்படும்.


ஆண்டின் சிறந்த அணி:

இத்தொடரில் இந்திய அணி 2-0 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினால், 127 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்கா 116 புள்ளிகள் பெறும். டெஸ்ட் தொடர் "டிரா' ஆகும் பட்சத்தில் ரேங்கிங் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது.

வரும் ஏப். 1ம் தேதி வரை, இந்தியா முதலிடத்தில் நீடித்தால் ஐ.சி.சி., வழங்கும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான விருதும், பரிசுத் தொகையாக ரூ. 81 லட்சமும் வெல்லலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா அணி 116 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் 2 வது இடத்துக்கு முன்னேறும் ஆஸ்திரேலிய அணி (118), ஐ.சி.சி., வழங்கும் ரூ. 35 லட்சம் பரிசுத் தொகை வெல்லலாம்.

வரும் ஏப்., 1 ம் தேதிக்குள் வங்கதேசம்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் தலா 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் முடிவுகள், "நம்பர்-1' இடத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை