மன்னிப்பு கேட்டார் சைமன் டாபெல்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு தவறுதலாக தீர்ப்பு வழங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் அம்பயர் சைமன் டாபெல்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் அம்பயராக ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் செயல்பட்டார்.

இவர், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு, எல்.பி.டபிள்யு., முறையில் "அவுட்' கொடுத்தார். ஆனால் "டிவி' ரீப்ளேயில் பார்த்த போது பந்து பேட்டில் பட்டு சென்றது தெரியவந்தது. தவறுதலாக தீர்ப்பு வழங்கிய அம்பயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் தெரிவித்திருந்தார்.

இப்பிரச்னை குறித்து போட்டி நடுவர் ஸ்ரீநாத் விசாரணை நடத்தினார். இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம், அம்பயர்கள் சைமன் டாபெல், இயான் குட் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், டாபெல் அளித்த தீர்ப்பு தவறு என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பின் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலிடம், தான் அளித்த தவறான தீர்ப்புக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் சைமன் டாபெல்

கங்குலி தான் சிறந்த கேப்டன்

ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகும் தகுதி கங்குலியிடம் நிறைய உள்ளது,'' என அந்த அணியின் வெளிநாட்டு வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடரை நடத்துகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.

கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்கு, கங்குலி கேப்டனாக இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., தொடரில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இத்தொடரில் கோல்கட்டா அணி கடைசி இடம் பிடித்து ஏமாற்றியதை அடுத்து, கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்றியது. புதிய கேப்டனை விரைவில் அறிவிக்கப்போவதாக கோல்கட்டா அணி நிர்வாகம் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மூன்றாவது ஐ.பி.எல்., தொடருக்கு, மீண்டும் கங்குலி கேப்டனாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் மோர்னே வான் விக் (தென் ஆப்ரிக்கா), பிராட் ஹாட்ஜ் (ஆஸ்திரேலியா) கூறியதாவது: கோல்கட்டா அணிக்கு கேப்டனாகும் தகுதி கங்குலியிடம் நிறைய உள்ளது.

எனவே, அடுத்து வரவிருக்கும் ஐ.பி.எல்., தொடரில் கங்குலி தலைமையில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். இவர், இந்திய அணியின் கேப்டனாக இருந்ததால், கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் உள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என்பதால், இங்குள்ள மைதானங்களின் தன்மை இவருக்கு நன்கு தெரியும். தவிர, உள்ளூர் வீரர்களையும் இவருக்கு நன்றாக தெரியும்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம், கோல்கட்டா அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டால், அணியின் வேகப்பந்துவீச்சு கூடுதல் பலம் பெறும். கோல்கட்டா அணியில் கங்குலி, அக்ரம் இணைந்து செயல்படும் பட்சத்தில், இவர்களது அனுபவம் இனிவரும் தொடரில் கோல்கட்டா அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும். ஆனால், இதுகுறித்த முடிவு அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் அடுத்தடுத்து கண்ட தோல்வி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தடுத்தது. புக்கானனின் "கேப்டன் பார்முலா' கோல்கட்டா அணிக்கு சாதகமாக அமையவில்லை.

இவ்வாறு வான் விக், ஹாட்ஜ் கூறினர்

சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப் போவது யார்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் திங்கள்கிழமை மோதவுள்ளன.

இறுதி ஆட்டம் செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

அரை இறுதியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானை நியூஸிலாந்தும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என பலம் மிகுந்து காணப்படுகின்றனர். ஷேன் வாட்சன், டிம் பெய்ன், ரிக்கி பாண்டிங், ஹசி, ஜேம்ஸ் ஹோப்ஸ் என பேட்டிங்கில் ஆஸ்திரேலியா ஜொலிக்கிறது. 4 ஆட்டங்களில் 267 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளார் பாண்டிங்.

இதைப் போலவே பந்துவீச்சில் பிரெட் லீ, வாட்சன், ஜான்சன், சிடில் ஆகியோரும் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக உள்ளனர்.

அதே நேரத்தில் அரை இறுதியில் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இறுதிக்குள் நுழைந்து மிரட்டுகிறது நியூஸிலாந்து. இக்கட்டான நேரத்திலும் சிறப்பாக ஆடி அணியை வழிநடத்திச் சென்ற கேப்டன் வெட்டோரி எதிரணிக்கு சவாலாக இருக்கிறார்.

மெக்கல்லம், குப்டில், ரெட்மண்ட், ராஸ் டெய்லர், இலியட் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பெüலிங்கில் ஷேன் பாண்ட், கைல் மில்ஸ், ஃபிராங்க்ளின், இலியட், பட்லர், வெட்டோரி ஆகியோரும் எதிரணிக்கு நெருக்கடியைத் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறியதாவது: தொடர் முழவதும் சிறப்பாக ஆடி வருகிறோம். அதே போல இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி கோப்பையைப் பெறுவோம். கோப்பை எங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர். நியூஸிலாந்து கேப்டன் வெட்டோரி கூறியதாவது: இந்தத் தொடரில் நாங்களும் சிறப்பாக விளையாடி வருகிறோம். அரை இறுதியில் பாகிஸ்தானை வென்றதன்மூலம் எங்களுக்கு ஏராளமான நம்பிக்கை கிடைத்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வோம் என்றார் அவர்.

போட்டி நேரம்: போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் துவங்குகிறது. ஈஎஸ்பிஎன்-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாகக் காணலாம்

சச்சின் வியக்கத்தக்க வீரர் : பாண்டிங்

கிரிக்கெட்டில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக விளையாடி, பல சாதனைகள் படைத்து வரும் இந்திய பேட்ஸ்மேன் சச்சின், வியக்கத்தக்க வீரர்,'' என, பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.

இதுகுறித்து பாண்டிங் கூறியது:

அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்திருப்பது, வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அரையிறுதியில் இங்கிலாந்தின் பிரஸ்னன், ரைட் சிறப்பாக விளையாடினர்.

ஆனால் எங்கள் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். சரியான நேரத்தில் பைனலுக்குள் நுழைந்துள்ளோம்.


சச்சினுக்கு பாராட்டு:

ஒருநாள் அரங்கில் நான் 12, 000 ரன்கள் கடந்தது மிகப்பெரிய சாதனை. நான் இந்த இலக்கை எட்டுவதற்கு சச்சின் தான் காரணம். அவரது பல இன்னிங்ஸ்களை கவனித்து பார்த்துள்ளேன். அவர் ஒரு வியக்கத்தக்க வீரர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அவர் செய்துவரும் சாதனைகளைப் பார்க்கும் போது நம்பமுடியாமல் உள்ளது.

அவர்தான் எல்லோருக்கும் இலக்கு நிர்ணயித்து உள்ளார். சச்சினைப் போல நானும் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்திருந்தால், வீல் சேரில் அமர்ந்து தான் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். இவ்வாறு பாண்டிங் கூறினார்.
---


பாண்டிங்கின் சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், பல்வேறு சாதனைகளை படைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.

* 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை பாண்டிங் (12043 ரன்கள்) படைத்தார். தவிர, உலக அளவில் மூன்றாவது வீரர் இவர். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் (16903 ரன்கள்) மற்றும் இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்) இந்த சாதனை படைத்துள்ளனர்.

* ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 28 சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கையின் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்து கொண்டார். இப்பட்டியலில் 44 சதங்கள் எடுத்து இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரு அணியின் கேப்டனாக, 20 சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் பாண்டிங் தான்.

சற்றும் எதிர்பார்க்கவில்லை

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,'' என, ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் வியப்பு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஜான்சன், வென்றார்.

இதுகுறித்து ஜான்சன் கூறியது:

ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் தொடர் இறுதியில் சில விக்கெட்டுகளை கைப்பற்றினேன். இந்நிலையில், வேறு ஒரு வீரர் தான் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வார் என நினைத்து அமர்ந்து இருந்தேன்.

ஆனால் எனக்கு விருது கிடைத்தது பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. இந்த விருது என்னை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் காம்பிர், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆகியோர் எனக்கு முன்னிலையில் இருந்தனர். இவர்களில் ஒருவருக்குத்தான் விருது கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால் பெருமைக்குரிய இந்த விருதை நான் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் தேசத்திற்காக போதுமான அளவில் செயல்பட்டுள்ளேன் என நினைக்கிறேன்.

இவ்வாறு ஜான்சன் தெரிவித்தார்