இரட்டை மகிழ்ச்சியில் பெடரர்

டென்னிஸ் "சூப்பர் ஸ்டார்' ரோஜர் பெடரர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் திகழ்கிறார். ஒற்றையர் பிரிவில் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்துள்ளார். உலகின் "நம்பர்-1' வீரரான இவர், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உற்சாகத்தில் காணப்படுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" எனது மனைவி மிர்காவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள். மனைவி மிர்கா, குழந்தைகள் சார்லின் ரிவா, மைலா ரோஸ் ஆரோக்கியமாக உள்ளனர்,'' என்றார்.

ஆஸ்திரேலியாவுடன் ஒருதின தொடர்: ஜெய்ப்பூரில் முதலாவது போட்டி

ஏழு போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது:

இந்தியாவுடன் ஒருதின தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அக்டோபர் 21-ம்தேதி இந்தியா வருகிறது.

ஜெய்ப்பூரில் அக்டோபர் 25-ம்தேதி முதலாவது போட்டியில் பங்கேற்கிறது. கடைசிப் போட்டி மும்பையில் நவம்பர் 11-ம்தேதி நடைபெறுகிறது. குவாஹாட்டியில் நவம்பர் 8-ம்தேதி நடைபெறும் 6-வது போட்டியைத் தவிர மற்றைய ஆட்டங்கள் அனைத்தும் பகலிரவாக நடைபெறும். மும்பையிலிருந்து நவம்பர் 12-ம்தேதி ஆஸ்திரேலிய அணி தாயகம் திரும்புகிறது.

அட்டவணை விவரம்

அக்டோபர் 25: முதல் போட்டி (ஜெய்ப்பூர்).

அக்டோபர் 28: 2-வது போட்டி (நாகபுரி).

அக்டோபர் 31: 3-வது போட்டி (தில்லி).

நவம்பர் 2: 4-வது போட்டி (மொஹாலி).

நவம்பர் 5: 5-வது போட்டி (ஹைதராபாத்).

நவம்பர் 8: 6-வது போட்டி (குவாஹாட்டி).

நவம்பர் 11: 7-வது போட்டி (மும்பை)

இந்தியா அபார வெற்றி

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் புல்டான் (122), வில்லியம்சன் (40),யங் (20), பியர்டு (20) கைகொடுத்தனர்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சங்வான் 5 விக்கெட் வீழ்த்தினார்.எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரகானே (95) சூப்பர் துவக்கம் கொடுத்தார்.

முரளி விஜய் (2), பத்ரிநாத் (0) ஏமாற்றினர். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 108 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 115 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

செல்வாக்கு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் அலுவலகம்?

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன.

தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அவற்றுக்கு மாநிலச் சங்கத்தை செயல்படுத்த அலுவலகம்கூட இல்லை என்பது வேதனையான விஷயம்.

சென்னையில் நேரு தங்கக் கோப்பை கால்பந்து போட்டியை 1993-ம் ஆண்டு நடத்த முனைந்தபோது, ரிப்பன் பில்டிங்கிற்கு பின்புறம் இருந்த பெரிய மைதானத்தை சர்வதேச தரத்திலான ஸ்டேடியமாக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. அதில் கால்பந்தாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த விளையாட்டுக்கு மாநில அலுவலகமும் அதே ஸ்டேடியத்தில் சாதாரண வகையில் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் இன்றுவரை சில விளையாட்டுகள் மட்டும் அங்கு அலுவலகங்களைப் பெற்றுள்ளன. உலக வாலிபால் மேம்பாட்டு மையம், அகில இந்திய செஸ் சம்மேளனம், ஹால் ஆஃப் செஸ், ஹால் ஆஃப் டேபிள் டென்னிஸ் ஆகியனவும் அதில் அடங்கும். தவிர, நேரு உள்ளரங்க வளாகத்தில் வாள் வீச்சு, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டுகளுக்கான தரமதிப்பீட்டின் விதிமுறைகளை மீறும்விதமாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டாலும், விளையாட்டை செயல்படுத்த வேறுவழியில்லை என்ற அடிப்படையில் பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தில் அலுவலகங்களை ஒதுக்கியுள்ளது எஸ்.டி.ஏ.டி. ஆனால் எதன் அடிப்படையில் அவை ஒதுக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால் கேள்விப்பட்ட வரை, விளையாட்டுச் சங்கங்களில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அலுவலகம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. கடைசியாக ஒதுக்கீடு பெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனம் உள்பட சில சங்கங்கள் கவர்ச்சிகரமாக அதைக் கட்டியுள்ளன. இது குறித்து கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச தரத்திலான ஸ்டேடியத்தில் தரமதிப்பீடு காக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு இஷ்டத்துக்கு சில சங்கங்கள் அலுவலகத்தை கட்டியுள்ளது வருத்தத்துக்குரியது என்றார்.

அதில் இன்னொறு வேடிக்கை என்னவென்றால் ஒதுக்கீடு பெற்ற சில சங்கங்கள் ரூ. 1200 முதல் 1500 வரையிலான குறைந்த வாடகையைக் கூட செலுத்தாமல் இருந்து வருகின்றனவாம்.

இது ஒருபக்கம் இருக்க, மாநில சாம்பியன் போட்டியைக் கூட முறையாக நடத்த முடியாமல் தவிக்கும் சங்கங்களின் அலுவலக ஒதுக்கீடு கோரிக்கைகள், எஸ்.டி.ஏ.டி. தலைமை அலுவலக மேஜையில் காலம் காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சில விளையாட்டுகளின் அலுவலகங்கள் தலைவர் அல்லது செயலரின் வீட்டிலும், சில நடமாடும் அலுவலகமாகவும் செயல்பட்டுவருகின்றன.

கேரம் விளையாட்டுக்கு புதிய அலுவலகம்: இதற்கிடையே ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெறாத கேரம் விளையாட்டுக்காக நேரு ஸ்டேடியத்தின் பின்பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.டி.ஏ.டி.யே அலுவலகம் கட்டிக்கொடுத்துள்ளது. அரசின் உயர் அதிகாரி ஒருவர் அந்த விளையாட்டில் நிர்வாகியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. அதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

எஸ்.டி.ஏ.டி. நினைத்தால் அலுவலகம் கோரும் நலிந்த விளையாட்டுகளுக்கும் அலுவலகம் ஒதுக்கமுடியும். அதற்கு இடம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கங்களால் நமக்கு என்ன பயன் என்ற மனப்பான்மையில் சிலர் செயல்படுவதாகத் தெரியவருகிறது.

திமுக அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளில் ஏழாவது உறுப்பினர் செயலராக சமீபத்தில் பதவியேற்றுள்ள சத்யவிரத சாஹு, மிகவும் நல்ல முறையில் நடத்திவருவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவரால் இதுபோன்ற அநீதிகளைக் களையமுடியுமா

3-வது டெஸ்டிலும் வெற்றி பெறுமா இலங்கை?

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்றுவரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பலாம் எனக் கருதி 9 விக்கெட்டுக்கு 425 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்த பாகிஸ்தான், தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையைப் பெற்றுள்ளது.

492 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கை அணி, வியாழக்கிழமை நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது.

7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 309 ரன்களைச் சேர்த்தால் 3-0 என தொடரை வென்ற பெருமையை இலங்கை பெற்றுவிடும். அதற்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுவரை எந்த அணியும் 4-வது இன்னிங்ஸில் 492 ரன்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. ஒருவேளை இலங்கை வென்றால், அது விரட்டிப் பிடித்தலில் உலக சாதனையாகவும் அமையும். இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்துவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2003-ல் மேற்கிந்தியத்தீவுகள் அந்த சிறப்பை பெற்றது.

வலுவான தொடக்கம்: கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கைக்கு, பரணவிதானா- வர்ணபூரா ஜோடி 83 ரன்களைக் குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்தது.

நேர்த்தியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார் தொடக்க வீரர் பரணவிதானா. இவர், 73 ரன்களைச் சேர்த்திருந்தபோது ஆலமிடம் எளிதாக "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 131 ஆக இருந்தபோது வர்ணபூரா 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார். முன்னாள் கேப்டன் ஜயவர்தனே 2 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் சங்கக்கரா 50 ரன்களுடனும், சமரவீரா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் டிக்ளேர்: முன்னதாக பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 425 ரன்களைச் சேர்த்து 2-வது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்தது. 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைச் சேர்த்திருந்தது.

106 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் சோயப் மாலிக், 134 ரன்களுக்கு அவுட் ஆனார். உணவு இடைவேளைக்குச் சற்றுப் பின்னர் இன்னிங்ûஸ முடித்துக் கொண்டது பாகிஸ்தான்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்:

பாகிஸ்தான்: 299 & 425-9 டிக்ளேர் (ஷோயப் மாலிக் 134, மிஸ்பா உல் ஹக் 65, கம்ரான் அக்மல் 74, குல் 46, ஹெராத் 5-157).

இலங்கை: 233 & 183-3வி (பரணவிதானா 73, வர்ணபூரா 31, சங்கக்கரா 50 நாட் அவுட், கனேரியா 2-56)