அணியில் சண்டை தொடர்கிறது? பயிற்சிக்கு வரவில்லை சேவாக்


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் அயர்லாந்துடன் இந்தியா விளையாட உள்ளது.

அதற்காக டிரென்ட்பிரிட்ஜில் உள்ள லேடிபே மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் காணவில்லை. இதையறிந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மைதானத்தில் வெகுநேரம் இருந்து கருத்து அறிய முயன்றனர். ஆனால் தோனி உள்பட யாரும் அவர்களிடம் பேச முன்வரவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.

பயிற்சி குறித்து பேச யாரும் முன்வரவில்லையே என அணி மேலாளர் அனிருத் செüத்ரியிடம் கேட்டதற்கு, அது அவர்களது விருப்பம். எதுவும் கட்டாயம் கிடையாது என்றார்.

இதையடுத்து, சேவாக்கிற்கும் தோனிக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதாக ஊடகங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த கருத்து உண்மைதான் என்பது போன்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட தனியார் விருந்து ஒன்றில் சேவாக் தனது மனைவி ஆர்த்தி, மகனுடன் கலந்து கொண்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒட்டுமொத்த அணி வீரர்களும் ஆஜராகினர். நாங்கள் மிகவும் ஒற்றுமையுடன் உள்ளோம். எங்களுக்குள் சண்டை ஏதும் இல்லை என கேப்டன் மகேந்திர சிங் தோனி அப்போது கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் எனக்கும் சேவாக்கிற்கும் பிரச்னை என்பது போன்று பத்திரிகைகள் தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் பொய். பொறுப்பற்ற செயல் எனக் கூறியிருந்தார்.

அதிவேக சென்னைப் புயல்


ந்திய கார் பந்தய வீரரான கருண் சந்தோக், கிராண்ட் பிக்ஸ் 2 போட்டிகளில் கலக்கி வரும் இளம் புயல். சென்னையைச் சேர்ந்த இவரது இலக்கு, ஃபார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்று முத்திரைப் பதிக்க வேண்டும் என்பதே!

அண்மையில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற ஜி.பி.2 பிரிவைச் சேர்ந்த 'சர்க்யூட் டி கட்டலுன்யா' கார்ப் பந்தய போட்டியில் சரியாக சோபிக்க முடியாததில் அவருக்கு வருத்தமே. ஆயினும், துவண்டு விடாமல் அடுத்தக் கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்!

ஃபார்முலா 1 பந்தயத்துக்கான தகுதிப் போட்டியாகவே 'ஜி.பி. 2' அமைந்துள்ளதால், எல்லோரது பார்வையும் இப்போது கருண் சந்தோக் மீதே விழுந்துள்ளது.

தனது முயற்சிகள் குறித்து குறிப்பிடும் கருண், ''அடுத்த சீசனில் ஃபார்முலா ஒன் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்பதையே நான் இலக்காகக் கொண்டிருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு முழுவதும் ஈடுபடுவேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்.

'பிரிட்டிஷ் ரேசிங் டிரைவர்ஸ் கிளப்'பில் சேரும் அரிய கெளரவத்தைப் பெற்றுள்ள இந்த 25 வயது அதிவேக இளைஞன் இதுவரை புரிந்த சாதனைகள் இதோ உங்கள் பார்வைக்கு...

கருணின் சாதனைகளும் கடந்து வந்த பாதையும்!

2000: இந்திய நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் 7 முறை வென்ற சாதனையாளர். போல் பொஷிசனில் 10 முறை அதிவேகமாக ஓட்டி தேசிய அளவில் சாதனைப்படைத்துள்ளார். இன்னும் அதை முறியடிக்க யாருமில்லை.

2001: இந்திய அணிக்காக மிக இளம் வயதில் பங்கேற்ற முதல் வீரரும் இவர்தான். ஒரே வருடத்தில் 8 முறை வென்றிருக்கிறார். ஆசிய அளவில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரே விரர் இவர் தான் என்று, பிரிட்டிஷ் ஃபார்முலா பந்தயத்திலும் பங்கேற்றார்.

2002: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் 6வதுக்குல் 3 முறை வென்றார். ஓவர் டிரைவ் பத்திரிக்கையின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் அவர் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவர் மட்டும்தான்.

2003: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் 8 முறை வெற்றி பெற்று 19 போடியம் முடித்தவர்ரும், டி-ஸ்போர்ட் முறையில் 24 முறையும், இந்தியா சார்பில் இங்கிலாந்தில் நடந்த சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் பங்கேற்றார்.

2004: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் நிலை ஆட்டக்காராக வந்தவர். இந்திய வீரர்களில் முதல் ஹீரோவான நரேன் கார்த்திகேயனுடன் இவரது ஜோடி நிசான் உலகக் தொடரில் இறுதி சுற்றில் பங்கேற்ற வீரர்களாக வளம் வந்தார்கள்.

2005: இந்தியா நடத்திய ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ரினால்ட் உலகக் தொடர் ஆகிய போட்டிகள் பேங்கேற்ற முதல் வீரரானார்.

2006: ஆசிய ஃபார்முலா ரினால்ட் வீ6 சாம்பியன் போட்டியில் சரித்திர வெற்றி பெற்ற ஒரே இந்தியர், இந்த ஆண்டில் 12 போட்டிகளில் பங்கேற்று 9 போட்டிகளில் வெற்றி பெற்றார். என்.டி.டி.வி. ப்ராஃபிட் விருது பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.

2007: ரெட் புல் ரேஸிங்கில் முதல் வெற்றி வீரர். ஜிபி2 தொடரிலும், ஃபார்முலா சாம்பியன் சிஃப், மற்றும் இத்தாலியன் ஸ்குவாட் துராங்கோ தொடரிலும் பங்கேற்றார். பெல்ஜியத்தில் நடந்த தொடரில் அபார வெற்றி பெற்றவரும் ஆசிய அளவிலும் இவர் மட்டும்தான்.

2008: ஜிபி2 ஆசியா மற்றும் ஜிபி ஐரோப்பா ஆகிய தொடரில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். ஜெர்மனியில் அபாரமாக வெற்றி பெற்றார். சில்வர்ஸ்டோன், மொனாக்கோ மற்றும் துபாயில் நடந்த போட்டியில் போடியம் வரை முடித்தார். ஆஜ் தக், மற்றும் என்.டி.டி.வி. ஃபிராஃபிட் ஆகியவை சார்பில் சிறந்த கார் பந்தய வீரர் விருதை இரண்டாவது முறையாக தட்ட்சி சென்றவர் இவர்தான்.

2009: ஜிபி2 தொடர் மற்றும் ஓசியன் ரேசிங் டெக்னாலஜி ஆகிய தொடர்களில் பங்கேற்றுவருகிறார்.

வரும் செப்டம்பருக்குள் இவர் பங்கேற்கும் தொடர்கள்:

ஜூன்: இஸ்தான்புல் சில்வர்ஸ்டோன்.
ஜூலை : நர்பர்கிங், புடாபெஸ்ட்.
ஆகஸ்ட் : வெலன்சியா மற்றும் பெல்ஜியம்.
செப்டம்பர் : இத்தாலி மற்றும் போர்ட்சுகல் ஆகிய தொடர்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.

முடிவின்றி செல்லும் இந்தச் சாதனைப் பட்டியலில் விரைவில் ஃபார்முலா 1-ல் இவர் புரியவுள்ள சாதனைகளும் இடம்பெறும் என்று நம்புவோம்!

உலகக் கோப்பையில் முதல் அதிர்ச்சி: இங்கிலாந்தை சாய்த்தது நெதர்லாந்து!


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது நெதர்லாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த "பி' பிரிவு லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசிவரை விருந்து படைத்திருந்தது.

"டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி, எதிரணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.

அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய கடைசி ஓவர் மிகவும் பரபரப்பை பெற்றிருந்தது. அந்த ஓவரில் 7 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற நிலையைப் பெற்றிருந்த நெதர்லாந்து, கடைசிப் பந்தில் 2 ரன்களைச் சேர்த்து உலகப் பார்வையைப் பெற்றது.

பரபரப்பான சூழலில் டோசாட்டே மற்றும் எட்கார் ஷிபெர்லி ஆகியோர் ஒன்றிரண்டு ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக இக்கட்டான நிலையில் டாம் டி குரூத் 30 பந்துகளில் 49 ரன்களைக் குவித்து இங்கிலாந்து அணியினரை நிலைகுலையச் செய்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றி மூலம் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது நெதர்லாந்து. அடுத்து பாகிஸ்தானுடன் வரும் 9-ம்தேதி விளையாட உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: இங்கிலாந்து 20 ஓவர்களில் 162-5 (லூக் ரைட் 71, போபரா 46, டோசாட்டே 2-35).

நெதர்லாந்து 20 ஓவர்களில் 163-6 (டி.டி.குரூத் 49, பாரென் 30, ஆண்டர்சன் 3-23).

நம்பமுடியாத வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி நம்பமுடியாதது என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோன் ஸ்மித்ஸ் மகிழ்ச்சி பொங்க கருத்து தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் எச்சரிக்கையுடன் கடுமையாகப் போட்டியளித்தோம். உண்மையிலேயே வெற்றியை நம்பமுடியவில்லை. மிகச் சிறப்பான வெற்றியாகியுள்ளது. கடைசிக் கட்டத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தது என்றாலும் வெற்றிக்கு தகுதியானவர் நாங்கள்தான். இன்றிரவு நன்றாக தூங்குவேன் என நினைக்கிறேன். அடுத்து இறுதிப்போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

"வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தவறவிட்டோம். கூடுதலாக சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். அது முடியாமல்போனது. அதே சமயம் நெதர்லாந்து வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணிக்கு எனது வாழ்த்துகள்' என இங்கிலாந்து அணியின் கேப்டன் பால் காலிங்வுட் கூறினார்.

20-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?


ஐ.சி.சி. 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடைசியாக நடைபெற்ற ஐ.சி.சி 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் பங்கு பற்றின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இறுதி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 20-20 உலக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

2020 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்ற போதிலும், தற்போது உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கு சர்வதேச மட்டத்தில் போதிய அனுபவம் இல்லை என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் முதன்முதலாக இங்கிலாந்து நியூஸிலாந்து அணிகளிடையே 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 89 20-20 ஓவர் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. இதில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 1 ஆவது உலகக் கிண்ண 2020 ஓவர் 27 போட்டிகளும் அடங்கும்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து தென்.ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மே இந்திய தீவு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 139 2020 ஓவர் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளே கூடுதலாக தலா 21 போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. நியூஸிலாந்து அணி 8 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், 20-20 ஓவர் போட்டிகளில் கூடிய வெற்றிகளைப் பெற்ற அணியாக பாகிஸ்தான் அணியே முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் அணி மொத்தம் 17 போட்டிகளில் பங்குபற்றி 13 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருபோட்டி பற்றி முடிவில்லை.

இலங்கை, இந்திய அணிகள் தலா 11 போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியும், இந்திய அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. தென்.ஆபிரிக்க அணி 18 போட்டிகளில் 11 வெற்றியும், 7 தோல்வியும், மே.இந்திய தீவு அணி 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

எனவே சர்வதேச அளவில் 20-20 ஓவர் போட்டியில் அதிக அளவில் அனுபவம் இல்லாத நிலையிலேயே இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணிகளும் பங்குபற்றுகின்றன. இதற்கு உதாரணமாக லண்டனுக்குச் சென்ற அணிகள் பங்கு பற்றிய பயிற்சிப் போட்டிகளை எடுத்துக் கொள்ளலாம். நடப்புச் சாம்பியனான இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 9 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணி, தென்.ஆபிரிக்கா அணியிடம் 59 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.

பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள், பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள போதிலும், பங்களாதேஷ் அணியின் கடும் எதிர்ப்பை சமாளித்தே வெற்றி பெற்றனர் என்றே கூற வேண்டும்.

2 ஆவது பயிற்சிப் போட்டிகளில், இலங்கை, தென்.ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தான், இந்தியாவிடமும் தோல்வி அடைந்தன.

உலகக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி ஸி பிரிவில், பலம் வாந்த அவுஸ்திரேலியா, மே.இந்தியத்தீவு அணிகளைச் சந்திக்கின்றது. பயிற்சி ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் குறிப்பாக துடுப்பாட்டத்தில் விட்ட தவறுகளை திருத்தாவிட்டால், 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தெரிவாவது கேள்விக்குறிதான்.

தென்.ஆபிரிக்காவில் நடைபெற்று முடிந்த இந்திய பிறிமியர் லீக் 20-20 போட்டி வீரர்களுக்கு ஒரு பயிற்சிப் போட்டியாக அமைந்தாலும், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் எந்த அணி சாம்பியின் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தோனி,செவாக்கிடையே பனிப்போர் இந்திய அணியில் கருத்து வேறுபாடு



இரண்டாவது 20 ஓவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணியில் கருத்து வேறுபாடிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக் கப்டன் தோனிக்கும் துணைக்கப்டன் செவாக்குக்குமிடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக செவாக் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவரது காயம் குறித்து கப்டன் தோனியிடம் நிருபர்கள் கேட்டபோது,

நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நீங்கள் அணியின் உடலியக்க நிபுணரைக் கேளுங்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் செவாக்குடன் அவருக்கிருக்கும் மோதல் வெளியே தெரியவந்தது.

அணியிலுள்ள ஒரு வீரரின் காயம் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தோனிக்குள்ளது. ஆனால், அவர் அதைத் தட்டிக்கழித்தார். அணி வீரர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேசாமலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

செவாக் உடல் தகுதி இல்லாததை காரணமாக வைத்து அவரை அணியிலிருந்து கழற்ற தோனி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. ரோகித்சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 36 ஓட்டமும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 80 ஓட்டமும் எடுத்தார்.

இது குறித்து தோனி கூறும் போது, ஐ.பி.எல். போட்டியிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் ஒருவர் மட்டுமே தற்போது மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரைத் தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார். இதன் காரணமாக சேவாக்குக்குப் பதிலாக ரோகித்சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்படலாமென்று தெரிகிறது.

செவாக் உண்மையிலேயே உடல் தகுதியில்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டால் சரிதான்.கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழற்றி விட்டால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், செவாக் மாதிரியாக அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் மிகக்குறைவு.

சிறந்த அதிரடி வீரரான அவர் நியூஸிலாந்து தொடரில் ஆடிய விதத்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். ரோகித்சர்மா சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை வைத்துக்கொண்டு அவரை செவாக்குடன் ஒப்பிடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. செவாக்கின் அதிரடி ஆட்டத்தை பொறுத்துத்தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கிண்ணம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை கப்டனுக்கும் துணைக் கப்டனுக்கும் எப்போதும் ஒத்துப்போனது கிடையாது.இதற்கு முன்பு கபில்தேவ்கவாஸ்கர்,அசாருதீன்டெண்டுல்கர்,அல்லது கங்குலிடிராவிட் அல்லது டிராவிட்டெண்டுல்கர் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.